Personal Blogging

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை

Written by Dr. Avvai N Arul

தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை விளக்கக் குறிப்பு-
மானியக் கோரிக்கை எண்:46
தமிழக சட்டப்பேரவை_31.8.2021
தங்கம் தென்னரசு.
தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர்
முன்னுரை
மொழியே மனிதனை இணைத்தது.
வேட்டையாடித் திரிந்தவனை வேளாண்மைக்கு அழைத்தது.
மொழியால் இதழ்கள் மட்டும் அசையவில்லை. இதயங்களும் – உள்ளங்களும் இசைந்தன.
மொழிகள் மனிதனின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் நிலைப்படுத்தவும் உதவின.
வாலில்லாத குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும்
மரபுக்கூறு. மாற்றத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே மனிதன்.
விரிவாகப் பேசுவதற்கும். விளக்கமாக உரைப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்று மானுடவியல் வல்லுநர்கள் முன்மொழிகிறார்கள்.
குரல்வளை, தொண்டை நாக்குப் பகுதி என்று பேசும் உறுப்புகள் வளர்ச்சியடைந்ததால் மனிதன் எண்ணற்ற ஓசைகளை ஒலிக்கக் கற்றுக்கொண்டான்.
அவன் மொழியை வாளாகவும் – கேடயமாகவும் பயன்படுத்தக்
கற்றுக்கொண்டான்.’விலங்குகளும் தமக்குள் தத்தம் மொழியைப் பயன்படுத்துகின்றன.
மலரின் மணம் வண்டுகளை வா என்று வரவேற்பது மகரந்தச் சேர்க்கை செய்வதற்காக, குயில்கள் இணையைத் தேடி இசைக்கின்றன. சிங்கம் இருப்பை உணர்த்த முழங்குகிறது.
அச்சத்தின் காரணமாக அவறுகிறது குரங்கு ,ஆசை வந்தால் தோகை விரிக்கிறது மயில், பூக்கள் இருக்கும் இடத்தை நடனத்தின் மூலம் வெளிப்படுக்க தேனீக்கள்.தன்னைப் பெண் தவளைகளுக்கு அடையாளம் காட்ட ஆண் நுணல் வாயால் அழைத்துக் கெடுகிறது.
விலங்குகளின் மொழி இனப்பெருக்கத்திற்காகவும் இரையைத் தேடுவதற்காகவும் உள்ளது ,மனிதன் மட்டுமே இதயத்தைத் தேடவும் மொழியைப் பயன்படுத்தினான்.அவன் மொழியில் கடந்த காலத்தின் சுவடுகளும் எதிர்காலத்தின் கனவுகளும் இடம்பெற்றன.
அவன் அடுத்த தலைமுறையினருக்குத் தன் அறிவை மொழியின் மூலம் பரிமாறினான்.மரபுக்கூறை மட்டுமல்ல .அறிவையும் இனவழிச்சரடாக எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பரிசாகத் தந்தான்.
தாய்மொழி கருவில் இருக்கும்போதே தாயின் சொற்களிடமிருந்து குழந்தை மொழியைக் கற்றுக்கொள்கிறது.கருப்பைக்குள் பிஞ்சு விரல்களை அசைக்கும்போதே தாயின் குரல் அசைவையும் கண்டுகொள்கிறது.
அதனால்தான் அதற்குத் தாய்மொழி என்று பெயர்.நோம் சாம்ஸ்கி என்ற புகழ் வாய்ந்த மொழியியல் அறிஞர் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறபோதே தாய்மொழியின் கூறுகளுடன் பிறக்கிறது” என்று தன் ஆய்வில் குறிப்பிடுகிறார்.அதனால்தான் எளிதாகத் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
பழமை பேணுவதும், போற்றிப் பாதுகாப்பதும் வெறும் ஒலிகள் குறித்ததும் எழுத்துகள் குறித்ததும் தொடர்பான பற்று அல்ல.
தொன்றுதொட்டு வந்த விழுமியங்களையும் பண்பாட்டுக் குறியீடுகளையும் அறிந்தும், உணர்ந்தும் அவற்றைப் பிறழாமல் பின்பற்றி நெறியோடு கடைப்பிடித்து மேன்மையடைவதற்காக நம்மையும் அறியாமல் தாய்மொழியின் மீது நம் ஆழ்மனத்தில் பற்று ஒன்று படிந்து வடுகிறது.
அதனால்தான் தாய்மொழி அரவம் கேட்காத அயல்நாடுகட்குச் சென்றால் யாராவது தமிழ்மொழியில் திட்டினால்கூடத் தித்திக்கிறது.
தமிழ்மொழி
தமிழ் மொழி உலகில் வழக்கில் இருக்கும் தொன்மையான மொழிகளில் ஒன்று என்று மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பழமையும் ,தொடர்ச்சியும், வழக்கும் உள்ள செம்மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்ல, புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியைக் கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைந்திருக்கிறார்கள்.
உயிருக்கு இணையாக மொழியைத் தமிழர்கள் போற்றுவதை உலகமே அதிசயித்துப் பார்க்கிறது.
தமிழைக் குறித்துச் சிந்திக்கும்போது அதன் சிறப்புகளும் அணிவகுத்து வருகின்றன.தமிழ் என்கின்ற சொல்லே இனிமையானது.தமிழுக்கு இனிமை என்ற பொருளும் இருக்கிறது என்னும் காரணத்தால்.
‘தமிழ் தழீஇய சாயலவர்’ என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.வல்லினமும்,இடையினமும், மெல்லினமும் தமிழ் என்கின்ற சொல்லில் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
தமிழின் சிறப்பு ழகரம். தமிழை அமிழ்துக்கு இணையாகப் புரட்சிக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
அமிழ்திலும் ழகரம் உண்டு .
அழகிலும் ழகரம் உண்டு .

ழகரமும்,றகரமும், னகரமும் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகள்.எண்ணற்ற மொழிகளைக் கற்ற மகாகவி பாரதியார்
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று குறிப்பிட்டார்.
மணிமேகலையும்,
திருவாய்மொழியும் ,
கம்பராமாயணமும்

தமிழின் இனிமையைப் பெரிதும் போற்றிப் பேசுகின்றன.தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ்ச் செல்வன், தமிழாசி என்றும் தமிழின் பெயரால் பலருக்கு இயற்பெயர்கள் உள்ளன.அவர்கள் தமிழை ஆர்வத்தோடு பாராட்டும் அந்த இயற்பெயர்களே காரணப் பெயர்களாக மாறுகின்றன.
தமிழ் என்ற சொல்
தமிழ் என்ற சொல் எவ்வாறு உருவானது என்பதே ஆய்வுக்குட்பட்டது.தமிழ் என்பது திராவிடம் என்பதன் மருவிய வடிவம் என்று அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.ஆனால் அறிஞர் மு வரதராசனார் தமிழை மற்ற மொழியினர் சரியாக ஒலிக்க முடியாமல் அதைப் பிறழ்வாகக் கூறியதன் தொடர்ச்சியாகத் திராவிடம் என்று மாறியது என்கிறார்
தம்+ இல் என்று தனக்கு இணையில்லை என்று வழங்கப்பட்ட சொல்தான் தமிழானது என்று சொல்பவர்களும் உண்டு.அசோகர் காலத்துப் பாறைச் சாசனங்களிலேயே தமிழ்நாடு அவர் ஆட்சி எல்லைக்கு உட்படாமல் தனித்திருந்தது தெரிய வருகிறது .
தமிழின் சிறப்பு
தமிழ் செம்மொழி மட்டும் அல்ல. இன்றும் வழக்கில் இருக்கும் பயன்பாட்டு மொழி.அதைக் காட்சிக்கூடத்தில் வைத்து அழகு பார்க்கவும் முடியும், கைகளில் ஏந்தி பலனடையவும் முடியும்.எண்ணற்ற மாற்றங்களைத் தன்னுள்ளே அகவயப்படுத்தி விரிந்து கொண்டே செல்கிறது.கடல் ஆழமாகவும், விரிவாகவும் இருப்பதற்குக் காரணம்.
அது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் தன் கைகளை விரித்துத் தயாராக இருப்பதுமே, தமிழ் ஆழியைப்போல. பல மொழிகளின் தாக்கத்தைத் தன் சொற்களால் உள்வாங்கி வளர்ந்துகொண்டே செல்கிறது.
அதனால்தான் அதில் குறிஞ்சியின் அழகைப் பற்றிப் படித்து, மலைச்சாரலில் மழைத்தூரலில் நனைந்த மகிழ்ச்சியையும் பெற
முடியும் .தகவல் தொழில்நுட்பத்தைக் குறித்த கலைச்சொல் உருவாக்கத்தையும் காண முடியும் .
இலக்கியம் ,அறிவியல் வரலாறு ,மானுடவியல் ,புவியியல்,மண்ணியல் ,உயிரியல் ,இயற்பியல் ,தாவரவியல் ,வேளாண்மை என்று அனைத்துத் துறைகளிலும் புதிய புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டே தமிழ் ஆழ்கடலாய் விரிந்து கொண்டே செல்வதால் தமிழர்கள் அதில் இன்பத் தோணிகளைச் செலுத்தி மகிழ்ந்திருக்க முடிகிறது .
நிறைவுரை
தமிழ் வளர்ச்சித்துறை இவ்வரசால் பெரிதும் போற்றப்படுகிற துறையாக இருக்கிறது .
இத்துறை கலைசொற்களை உருவாக்கியும்,
சொற்பிறப்பு அகராதிகளை வடிவமைத்தும்,
தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தும்,

பைந்தமிழ் நூற்களில் ஆய்வுகளை முடுக்கிவிட்டுத் தமிழறிஞர்களைப் போற்றியும்,
எழுத்தாளர்களுக்கு ‘விருதுகள் அளித்தும் உலகத்தரம் வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் மற்ற மொழிகளில் பெயர்த்தும் ஆட்சிமொழியைச் செவ்வனே நடை முறைப்படுத்தியும் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் எதிகாலத் தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியை அயராமல் ஆற்றி வருகிறது.
இத்துறை இயந்திர வாழ்வில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் மனித மனங்களைச் சீர்மிகு இலக்கியங்கள் பக்கம் அழைத்துச் சென்று இளைப்பாற வைத்து அவர்களுக்குள் தமிழ்நாட்டின் விழுமியங்களாகத் திகழும் விருந்தோம்பல், வீரம், கண்ணோட்டம், சான்றாண்மை ஆகியவற்றை இணைத்து ஒரு கண்ணில் வீரத்தோடும் மறு கண்ணில் ஈரத்தோடும் திகழ வைத்து உன்னதமான தமிழ்ச் சமுதாயத்தை உலகுக்குப் படைத்துக்காட்டும் தன் முயற்சியில் இளைப்பின்றித் தொடர்ந்து பாடுபடும்.

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment