Saints & Gurus Sri Maha Periyava

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 010

mahaswamigal
Written by Mannai RVS
10. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
================================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்
கார்வெட்டிநகர், 1971 மார்ச் மாத ஆரம்பம்….
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஆஸ்ரம முகாம்.
#################################

1971 ஃபிப்ரவரி மாத இறுதியில் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் காஞ்சீபுரத்தை விட்டு பாதயாத்திரை கிளம்பினார். எத்தனை நாள்கள் இப்படி யாத்திரை என்று திட்டமிடல் எல்லாம் இல்லை. வடமேற்காக எண்பது கிலோமீட்டர்கள் நடந்த பிறகு ஆந்திர பிரதேசத்திலிருக்கும் கார்வெட்டிநகரை வந்தடைந்தார்.

மார்ச் மாத ஆரம்பத்தில் இந்த கிராமத்திற்கு அவர் வந்து சேர்ந்த பின்னர் சில மணித்துளிகள் அவரைத் தரிசித்தேன்.

வயலும் விவசாயமும் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். இந்தக் கிராமம் சற்றே தாழ்வான பகுதியில் இருந்தது. அதன் நீண்ட சாலைகள் வனம் மூழ்கடித்த சிறு மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருந்தன. அங்கே ஒரு பெரிய கட்டிடம் என்றால் அது ஒரு ராஜாவின் பழைய அரண்மனைதான். அதுவும் இப்போது பள்ளிக்கூடமாக இருக்கிறது. சின்னச் சின்னதாய் வெள்ளையடித்த வீடுகளின் மீது மீன் செதில்கள் போல நாட்டு ஓடுகள் சிகப்பாக வேயப்பட்டிருக்கின்றன.

அமைதியான வீடுகள். சுத்தமாக இருந்தன. வீடுகளின் பின்பக்கம் தோட்டமும் வாசலில் திறந்த தாழ்வாரங்களும் இருந்தன. வாசல் தாழ்வாரங்களின் ஓரங்களில் கைப்பிடிகளுடன் கூட திண்ணைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் திண்ணையில் அமர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் அல்லது தங்களுக்குத் தெரிந்த தொழில்களைச் செய்தும் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தார்கள்.

கிராமத்தின் ஒரு முனையில் அழகான நன்கு பராமரிக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணரின் வேணுகோபாலன் திருக்கோயில் இருந்தது. அந்தத் திருக்கோயில் வளாகத்தினுள் ஸ்ரீ ராமருக்கென்று தனிச் சன்னிதி பொலிவுடன் விளங்குகிறது. அதன் கர்ப்பக்ரஹத்தினுள் அந்த இளவரசர் வில்லினை கையில் ஏந்தி நிற்கும் அற்புத சிற்பம் காணப்படுகிறது. அவரைக் கோதண்டராமர் என்று கும்பிடுகிறார்கள். ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து கிராமத்தின் இன்னொரு முனைக்கு வந்தால் ஒரு சிறிய கோயில் சிவபெருமானுக்கு எழுப்பியிருக்கிறார்கள். கிராமத்திற்கு வெளியே இருநூறு மீட்டர் தூரம் தாண்டி காய்கறித் தோட்டம் இருக்கிறது. ஊரின் நடுவில் 120க்கு 80 மீட்டர் அளவில் அழகிய தாமரைக் குளத்தில் தண்ணீர்த் தளும்பியது. நான்கு புறங்களிலும் கற்படிகள் வெள்ளைத் தாமரைகள் மிதக்கும் குளத்து நீருக்குள் இறங்கின. அந்தப் படிகளில் நீர்வாழ் உயிரினங்களின் உருவங்கள் அற்புதமாகச் செதுக்கப்பட்டிருந்தன.

மேற்கு திசையில் ஒரு தென்னங்கீற்று வேய்ந்த ஒரு புதுக் குடிசை தென்பட்டது. அதன் சுற்றுச்சுவர்கள் மூங்கில் கம்புகளால் கட்டப்பட்டிருந்தது. அந்தக் குடிசையின் தென்புறத்தில் சிறிய முற்றம் போல இடமும் வடபுறத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சிகப்பு நிற ரிக்ஷாவுக்கான நிறுத்துமிடமும் கட்டப்பட்டிருந்தது. பின்னால் குடிநீர் கிணறு. குடிசையின் உள்ளே இரண்டு திரைகள் போடப்பட்டு மூன்று பிரிவுகளாக்கியிருந்தன. அந்தப் பிரிவுகளின் தென் பக்கம் ஒரு சின்ன உபசரிப்பு கூடம். இங்கேதான் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் கார்வெட்டிநகரில் இருந்தவரை வாசமிருந்தார்.

வடபுறமிருந்த முதல் அறையில் அவர் தங்கியிருந்தார். அந்தக் குடிசையின் கிழக்குக் கதவைத் திறந்தால் நேரே அந்தத் தாமரைக் குளம் தெரியும். வடமேற்கு திசையை ஒட்டி கிளைபரப்பி நின்றிருந்த அந்த பெரிய அரசமரம் குடிசைக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது. அந்த அரசமரத்தின் அடியைச் சுற்றி சிமெண்ட் மேடைக் கட்டப்பட்டிருந்தது. அந்த மேடையின் மீது மரத்தினடியில் நாகர் மற்றும் சிறுசிறு தெய்வச் சிற்பங்கள் நிறுவப்பட்டு பூமாலைகள் சூட்டப்பட்டு அகல் விளக்கேற்றியிருந்தது. தென்புறம் ஸ்கந்த மலை கொஞ்சம் உயரமாகவும் பாதி காடழிந்தும் காணப்பட்டது.

ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் குடிசையானது குளத்தோரத்து பெரும் அரசமரத்தின் அடியில் அமைதியான வனத்தில் இருப்பது போல காட்சியளித்தது. அது இந்திய புராண இதிகாசங்களில் கானப்படும் கற்பாந்த காலத்து ரிஷிகளின் வனாந்திர வசிப்பிடம் போல இருந்தது. அந்த இடத்தில் மரியாதைக்குரிய ரிஷிகளுடன் வாழ்வது போல ஒருவர் எளிதாக கற்பனை செய்துகொள்ளலாம்.

முண்டியடித்துக்கொண்டு வரும் பார்வையாளர்களுக்கு முன்னால் அதிகாலையிலோ அல்லது அவர்கள் எல்லாம் சென்றவுடன் இருள் கவிந்துதோதான் ஸ்ரீ மஹாஸ்வாமி குடிசையை விட்டு வெளியில் வருவார்.

அவர் அப்படி வெளியில் வரும்போது புராதன இந்திய ரிஷி பரம்பரையில் தோன்றியவர் போல அச்சுஅசலாக இருப்பார். பதினைந்து படிகள் இறங்கி தண்ணீர் அருகில் அனுஷ்டானங்களுக்காக அமர்ந்துகொள்வார். அடிக்கடி வெகுநேரம் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். குளத்தின் கடைசி படியில் ஒரு சின்ன பாயில் கால்களை மடக்கி சம்மணிட்டு அமர்ந்திருப்பார்.

அவர் காலருகே இருக்கும் தாமரைகள் தங்களை அவர் ஆசனமாகக் கருதவில்லையே என்று வருத்தப்படுவதாக இதைப் பார்க்கும் நமக்கு தோன்றுகிறது. இதயத் தாமரையில் கடவுள் வீற்றிருப்பதாக முனிவர்கள் உரைக்கிறார்கள். சில சமயங்களில் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அரசமரத்தடியின் மேடையில் ஏறி அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். அப்போது அவரது பௌதீக உருவம் மறைந்து அருகிலிருக்கும் கடவுளர்களுடன் அவர் கலந்துவிடுகிறார்.

கார்வெட்டி நகர், 1971 மார்ச் மாத இறுதி….
May be an image of 1 person
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காந்தி ஆஸ்ரமம்
################

1971ம் வருஷம் மார்ச் 15ம் தேதி மீண்டும் கார்வெட்டிநகருக்கு வந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமிகளை தரிசனம் செய்தேன். அவர் விரும்பும் வரையில் இந்தியாவில் இருப்பதற்கும் ஒரு பத்து நாள்கள் கார்வெட்டிநகரிலேயே தங்குவதற்கும் அவரிடம் அனுமதி கோரினேன். என்னுடைய இந்த இரண்டு வேண்டுகோள்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். அவரது உதவியாளர்கள் மூலமாக நான் தங்குவதற்கு ஒரு இடத்தையும் காட்டினார். அது காந்தி ஆஸ்ரமம். மஹாத்மா காந்தியின் கலாசார பண்பாட்டை பத்திரமாகப் பாதுகாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு இயக்கத்தின் அலுவலகம் அது. வேணுகோபாலன் கோயிலுக்கு அருகில் இருந்த செங்கல் கட்டிடம்.

கூரைக்கு நாட்டு ஓடு வேயப்பட்டிருந்தது. ஒரு பன்னிரெண்டுக்கு நான்கு மீட்டர் சதுர பரப்பளவுள்ள உயரமான ஒரு அறை. அவ்வளவுதான். இடதும் வலதும் பக்கத்துக்கு இரண்டு ஜன்னல்கள் காற்றோட்டமாக திறந்து இருந்தது. அதன் மேலாளர் வலது மூலையில் ஜன்னலிருக்கும் இடத்தில் இரண்டு சதுரமீட்டர் சிகப்புச் சாந்து பூசிய சிமெண்ட் தரையை எனக்காக ஒதுக்கியிருந்தார். ஒரு பாயும் போர்வையும் எனது படுக்கை. அந்த இடத்தை என்னுடைய பெட்டி மற்றும் உடைமைகளால் எல்லை வரையறத்துக் கோட்டை கட்டி எனக்கானதாக்கியிருந்தேன். ஏனென்றால் அந்த அறையை என்னைத் தவிர வேறு சிலரும் உபயோகப்படுத்தினார்கள்.

நாள்கள் பறந்தன. நான் புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது. நான் கிளம்புவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னால் ஒரு மதியநேரம் அந்த அறையில் நிதானமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று காந்தி ஆஸ்ரம மேலாளர் ஸ்ரீ மஹாஸ்வாமியின் உதவியாளர்களுடன் புயல் போல உள்ளே நுழைந்தார். அப்போது குறைந்தது ஒரு பத்து பேர் அந்த அறையில் சிதறியிருந்தோம்.

“சீக்கிரம்.. சீக்கிரம்.. எல்லாரும் வெளியே நகருங்க.. ஸ்ரீ மஹாஸ்வாமி காந்தி ஆஸ்ரமத்துக்கு விஜயம் செய்யப் போறார்.. ம்.. எல்லோரும் சீக்கிரம் வெளியே போங்க…”

எங்களைத் துரிதப்படுத்தினார்.

தொடரும்….

About the author

Mannai RVS

I am R. Venkatasubramanian a.k.a RVS.

I have completed by MCA. A software professional with information Technology space.

Headed IT & Infrastructure for one of India’s famous newspaper company.  
I am a literature buff and write a lot of articles/stories for my social media handle in Tamil.

You may view my work in the following URLs:
https://www.facebook.com/mannairvs
https://www.amazon.com/author/mannai-rvs

I have authored 8 Tamil books (of different genres) and they are also hosted on the Amazon-Kindle platform.

Leave a Comment