Spiritual

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 011

Written by Mannai RVS

11. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
================================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்

அயல்தேசத்துக்காரனான எனக்கு பாரம்பரியப்படி சந்நியாசி வரும் அறைக்குள் வசித்திருக்க உரிமையில்லை. துள்ளிக்குதித்து எழுந்தேன். பாய்படுக்கைகளை வாரிச் சுருட்டினேன். எப்போதுமே பாதி அடுக்கப்பட்டிருந்த பெட்டியில் மீதியிருக்கும் துணிகளை அமுக்கிக்கொண்டு அறைக்கு வலதுபுறமிருக்கும் வெளி வராண்டாவுக்கு ஓடி வந்துவிட்டேன். உள்ளே நானிருந்த இடத்தின் சுவருக்குப் பின்னால் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே என் கடையை விரித்துவிட்டேன்.

ஐந்து நிமிஷங்கள் கூட ஆகியிருக்காது. ஸ்ரீ மஹாஸ்வாமிகள் மதில்சுவர் கதவருகே வந்துவிட்டார். மானேஜரின் மனைவி என்ன மாயம் செய்தார்கள் என்று தெரியவில்லை ஸ்ரீ மஹாஸ்வாமி வருவதற்குள் அந்த இடத்தை தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்து வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு வரவேற்றார். தண்ணீர் நிறைந்த வெங்கலக் குடத்தின் வாயில் தேங்காயும் அதைச் சுற்றி மாவிலைகளைச் சொருகியும் கையில் வைத்திருந்து எதிர்கொண்டு வரவேற்பது பூரண கும்ப மரியாதை எனப்படும். ஸ்ரீ மஹாஸ்வாமியை வரவேற்க அவரும் அவரது உதவியாளர்களும் சம்ஸ்க்ருத வேதகோஷங்களை அப்போது ஓதினார்கள்.

ஸ்ரீ மஹாஸ்வாமி அந்த பூரண கும்பத்தில் இருந்த தேங்காயை எடுத்து தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரிடம் கொடுத்துவிட்டு மாவிலைகளினால் அந்தக் குடத்தின் நீரை அவ்விடத்தைப் புனிதப்படுத்துவதற்காக தெளித்தார். பின்னர்தான் அந்த அறைக்குள் அவர் நுழைந்தார். அவரது இந்தச் செயல்களை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த நான் அவர் இங்கே தங்கப்போகிறார் என்பதை முடிவுசெய்தேன்.

இடதுபுறத்திலிருந்து தனது கண்களால் எப்படி நுணுக்கமாக அந்த அறையை சோதனை செய்தார் என்பதைப் பார்த்தேன். அந்த அறை அவருக்குப் பிடித்தமாதிரி இல்லை போன்று தோன்றியது. கிட்டத்தட்ட முழு அறையையும் கண்களால் துழாவிவிட்டார். அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லையென்றால் என்ன செய்வது என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். இறுதியில் அறையின் வலதுபுறத்தில் இருந்த அந்த இரண்டு சதுர மீட்டர், நானிருந்த அந்த இரண்டு சதுர மீட்டர், சிமெண்ட் தரையின் மீது அவரது பார்வை விழுந்தது. சில விநாடிகள் அந்த இடத்தையே கூர்ந்து பார்த்தார். பின்னர் தயக்கமேதுமின்றி அந்த இடத்தை நோக்கி நடந்தார்.

கமண்டலத்திலிருந்து நீரைத் தெளித்து கால்களை மடக்கி சம்மணமிட்டு நானிருந்த அதே இடத்தில், மிகத் துல்லியமாக, துளிக்கூட இங்கேயும் அங்கேயும் மாறாமல், அமர்ந்தார். அவரது உதவியாளர்களிடம் அன்றிரவு காந்தி ஆஸ்ரமத்தில் தங்குவதாக அறிவித்தார். யாரோ வெளியிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த ஜன்னலைச் சார்த்தினார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு ஒற்றைச் சுவர் மட்டுமே என்னையும் ஸ்ரீ மஹாஸ்வாமியையும் அப்போது பிரித்திருந்தது.

என்னுடைய வாழ்நாளின் மிகவும் அமைதியான இரவுகளில் ஒன்றாக அது கழிந்தது. அடுத்தநாள் காலையில் ஸ்வாமிஜி அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டார். அவர் அறையைவிட்டு வெளியே வரும்போது என்னால் நமஸ்கரிக்க முடியவில்லை. திரும்பவும் அறைக்குள் நுழைந்த முதல் ஆள் நான்தான். என்னுடைய பழைய இடத்துக்கு மீண்டும் சென்றேன். அவரது இருத்தலால் பரவிய வெம்மை இன்னும் அங்கே இருந்தது. சில புஷ்பங்கள் கீழே சிதறியிருந்தன. அப்புறம் அவருடைய உதவியாளர்கள் அவருக்குத் தலையணையாகப் போட்டிருந்த இரண்டு செங்கற்கள் கிடந்தன. அந்த இரண்டு புனித செங்கற்களையும் வேறெதற்கும் பயன்படுத்தாமல் வெகுகாலம் என்னுடன் பத்திரமாக வைத்திருந்தேன்.

எனக்காக ஸ்ரீ மஹாஸ்வாமிகள் செய்த மிகவும் சிறியதொரு செய்கையானது பெரிதாகப் பேசப்பட்டது. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தில் அவர் துயில் கொள்ள தேர்ந்தெடுத்தது அங்கே அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்து எனக்கொரு புது மரியாதையைப் பெற்றுத்தந்தது.

நான் கிளம்பத் திட்டமிட்டிருந்த நாளுக்கு முதல் நாள் மேனேஜர் என்னிடம் வந்து நான் இன்னும் தங்குவதாக இருந்தால் வெளியே இருக்கும் ஒரு குடிசையில் வசிக்கலாம் என்று ஆலோசனைக் கூறினார். ஒரு இந்தியக் கிராமத்தில் நாம் மட்டும் தனியாக நமக்கான ஒரு அறையில் வசிப்பது என்பது கிடைப்பதற்கரிய அபூர்வமான ஒன்று. நான் அங்கிருந்து புறப்படவேண்டாம் என்பதற்காக ஏதோ ஒன்றுதான் மேனேஜரின் மூலமாக இந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாக எனக்குத் தோன்றியது. கார்வெட்டிநகரில் மேலும் சில காலம் தங்குவதற்கான அனுமதி வேண்டினேன். ஸ்ரீ மஹாஸ்வாமி அருள்கூர்ந்து அதை ஆமோதித்தார்.

அந்த அறையை வாழுமிடமாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கினேன். எளிமையான உணவு சமைத்துச் சாப்பிடுவதற்காக உள்ளூர் கடையில் சில சாமான்கள் வாங்கினேன். ஒரு காடா மண்ணெண்ணெய் விளக்கு சமைக்கும் ஸ்டவ்வாகியது. படுக்கைக்கு கீழே வைக்கோலை பரப்பி அதன் மீது கடினமான பெட்ஷீட்டையும் போர்வையையும் விரித்துப் போட்டேன். அட்டைப்பெட்டிகள் உட்காரும் ஆசனங்களாகப் பயன்பட்டது. அருகிலிருந்த கிணற்றடி திறந்தவெளிதான் குளியலறை. அங்கே காண்பதற்கரியதான மிகவும் சுத்தமான கழிவறை வசதியும் கிடைத்தது நான் செய்த பெரும் பேறு!
தொடரும்…..

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி11

About the author

Mannai RVS

Leave a Comment