Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 6

Written by Dr. Avvai N Arul

தகடூரான் தந்த தமிழ்க்கனி !
சோவியத்தின் இலக்கியச் சிகரமான டால்ஸ்டாயின் எழுத்தின் தொகுதி 90 மடலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன .
எழுதிய மடல்கள் , அவருக்கு வந்த கடிதங்கள் 32 தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன .
இந்தியத் தலைநகரான கொல்கத்தாவில் – முதன்மைத் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த பெருந்தகை கர்சான் தன் கையால் நூறு பக்க அளவில் தன் துணைவியாருக்குக் கடிதம் எழுதினார் .
இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாள் தவறாமல் தன் மனைவியாருக்கு இங்கிலாந்துக்குக் கடிதம் எழுதி வந்தாராம் .
அண்ணல் காந்தியடிகளும் ,நேருவும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் எழுதினர் .மடல்கள் என்ற நிலையில் மட்டும் 4000 க்கு மேல் கலைஞர் எழுதியதாக ஒரு குறிப்பை ஐ நா அலுவலர் அறிஞர் கண்ணன் தம் ஆங்கிலக் கட்டுரையில் எழுதியுள்ளார் .
ஓய்வில்லாமல் இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் வென்று நின்று கலைஞர் எழுதியவற்றை ஆய்வாளர்கள் வகைப்படுத்தி வரையறையிட்டு ஆராயத் தொடங்கியுள்ளனர் .
நூற்றாண்டில் நூறு தொகுதிகளாக மலரும் என்று தமிழுலகம் ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளது .
தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய வரலாறு நம் முத்தமிழ் அறிஞர் கலைஞராலேயே முடிந்தது .
திருவள்ளுவரையும் ,இளங்கோவையும், சங்கப் பாடல்களையும் இன்றைய வாழ்வுக்கேற்ப, மீட்டுருவாக்கி, மீள் மெருகூட்டி நாட்டு மக்களிடையே எளிமையாக நடமாடச் செய்த பெருமை கலைஞரையே சேரும்.
முன்னைப் பழமைக்குப் பழமையான சங்கப் பாடல்களை, பின்னைப் புதுமைக்கும் பறைசாற்றி புதுமைக்குப் புதுமையாய் புத்தாக்கம் செய்து, பழமையில் ஒளிந்திருந்த இளமையை, புதுமையை, முழுமையை ,பெருமையை வெளிகொணர்ந்து இன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்கு ஏற்ற முறையில் சங்கத்தமிழின் சாறு பிழிந்து தாயன்போடு ஊட்டிய தமிழ்ப்புலமையை எடுத்துப் படிப்பவர் இதயம் மகிழ்வர் .
தமிழகம் – தமிழினம் – தமிழ்மொழி வரலாற்றில் நிகழ்ந்த சங்கம் நிறுவிய அருஞ்செயலை நாம் இங்கே குறிப்பிடவேண்டும்.
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிக்கென்று ஒரு சங்கம் கண்டது . அது ஒரு மொழிப்பேரவையாக நின்றது ,அதனால் இனமும் நாடும் எழுச்சி பெரும் என்று ஆண்ட்ரே கருதினர் .
ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்னே மொழிச்சங்கம் கண்டனர் .
இது மொழியின் தோற்றத்தையும் தொன்மையையும் அளந்தறிவார் யார் ? அளந்தறிய இயலுங்கொல் ?
என்று அறிஞர் வியந்தனர் .
தமிழ்ச் சங்கங்கள், அவற்றின் நிலைபேற்றுக் காலங்கள், காவிய மூதூர்கள், புலவர்தம் தொகை, புரவலர்தம் தொகை, பாடல்கள் தொகை என்பன பற்றிய குறிப்புக்களை இறையனார் அகப்பொருளுரை காத்து நல்குகின்றது.
அவ்வுரைக் காப்பினால் தமிம் வரலாறு ஒளியுடையதாக இலங்குகின்றது.
தலைசான்ற சங்க வாலாற்றினைத் தாங்கி நிற்கும் அந்தவுரை நமக்கு வழிகாட்டியாகும் .
முச்சங்கங்கள் நிலவி நின்ற கூட்டாண்டுகள் 9990, புலவர்களின் கூட்டுத்தொகை 8598, என்றினைய பேரெண்ணிக்கைகளைப் பார்த்து, சங்கம் இருந்திருக்குமோ என ஐயப்படும் ஆய்வாளர்கள் உள்ளனர் .
இவ்வெண்ணிக்கையில் மிகை குறையிருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டு, சங்கம் இருந்தமைக்குச் சான்று பல காட்டுவார் பலர்.
இந்த நிலையில் சங்கத்தமிழின் பாடல்களை நாளும் படித்து மகிழ்கின்ற நல்வாய்ப்பாக சங்கத்தமிழ் உருவாயிற்று .
மீட்டுருவாக்கம் தமிழிலக்கிய உலகுக்குச் சற்றுப் புதுமையானது தான்.
ஆங்கிலத்தில் “ஹாம்லெட்” என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தைப் பல்வேறு புதிய கோணங்களிலும் வடிவங்களிலும் பலர் படைத்துள்ளார்கள்.
இதை மொழிக்குள்ளே செய்யும் மொழியாக்கம் என்றும் மொழியலாம் . தொன்மையான உயிர்ப்புள்ள . இலக்கியத்தை, இன்றைய மொழியில் அடுக்கிக் காட்டும் அழகிய நடையில் நிகழ்கால ஒளியின் புத்துருவாக்கம் செய்வதுதான் இன்றைய இலக்கியத்தின் நெறி முறையாகும் .
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஒவ்வொரு காலமும், அந்தந்த வளர்ச்சிக்கேற்பக் கண்ணாடி வழியாகப் பார்த்து அளக்களாகா பொருள் வளங்களை அகழ்ந்தெடுக்கிறது.
கலைஞர் விளக்கும் சங்கப்பாடல்கள் சிலவற்றை இன்றைய மொழியில் மக்கள் இலக்கியமாக மறுபடைப்புச் செய்துள்ளார்.
இவற்றைக் கவிதை விளக்கங்கள் என்று கலைஞரே பெயரிட்டுக் கூறுவார்.
இந்தப் பாடல்களுக்குத் தொடக்கத்தில் அவர் ஒரு சூழல் இடவாய்ப்பு முன்னோட்டம் இரு – மூன்று பாடல்களின் தொடர்பாக்கம் அமைத்துத் தருகிறார். பிறகு அந்தப் பாடலின் சிறப்புக்குரிய காரணத்தையும் காட்டி, அந்தப் பாடலை விரிவாகத் தன் விளக்கத்தோடு இணைத்துத் தருகிறார்.
எடுத்துக்காட்டாக, நாம் முன்னர் கண்ட கணியன் பூங்குன்றனின் ” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற பாடலின் தொடக்கம் கலைஞர் பூங்குன்றத்துக்குப் போவதைக் குறிப்பிட்டுத் தனது நாட்டையும், காதலையும் பற்றிப் பாடும் கவிஞர் களுக்கிடையே தனக்கெனத் தனிவழிவகுத்துக் கொண்டு ” எல்லா ஊரும் பொது ஊரே எல்லா மனிதரும் எமது உறவே ” எனத் தொடங்கியதாகக் கூறி முழுப்பாடலையும் தனது நடையில் தந்துள்ளார் கலைஞர்.
இந்தப் பாடல் ஊழின் இயல்பைக் கூறுவதாகக் கருதப்பட்டாலும் மனித செயல்களுக்கும் மன உறுதிக்கும் முதன்மை தருகிறார் மேலும் வினைக்கு ஆன்றோர் காட்டிய அரிய வினைகள் என விளக்கம் தருகிறார்.
கலைஞரின் சங்கத்தமிழில் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் தமிழ், தமிழிலக்கிய மனம்,தமிழர் உள்ளத்தில் ஊறித் ததும்பும் தமிழெழுச்சி உணர்வு மூலத்தை வென்று தனியாகப் பேசப்படுகிறது.
எடுத்துக்காட்டாக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தந்தது பற்றி ” அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன் ? அவ்வவையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும் தகடூரின் பெயர் உள்ளவும் நான் வாழ்வேன் தமிழ் உள்ளளவும் வாழக அவ்வையே ” எனக் கூறியதாக கலைஞர் விளக்கிய பாங்கு, அவரது ஆழ்ந்த தமிழ்ப் பற்றின் அரிய திறப்பாடு.
ஆங்கிலம் அருந்தமிழ்ப் பெரும்புகழ் பெற்ற பேராசிரியர் கா செல்லப்பன் நுணுக்கமாகக் கலைஞரின் மீட்ருவாக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் .
திருக்குறளில் இனியவை கூறல் என்ற அதிகாரத்தின் பத்தாம் குறள் நாடறிந்த குறட்பாவாகும் .
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
என்ற திருக்குறள் பாடலுக்கு உரையெழுதிய பரிமேலழகருக்குக் கனியிருப்பக் காய் கவர்தல் என்ற தொடரைக் கண்டவுடன் இனிய கனிகள் என்றது ஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை என்றெழுதினார் .
கனியென்றதுமே மா ,பலா ,வாழை எனக் கருதாமல் நெல்லிக்கனியை நினைவு கூர்ந்து சங்கக் காட்சியில் தோய்ந்த உரையாசிரியரின் உள்ளத்தையும் இது காட்டியது .
இனிக் கலைஞரின் கவிதையைக் கண்டு மகிழலாம் .
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி எனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதன் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தான்
அதன் இனிப்பைத் தமிழில் கண்ட அவனின் முன்னோர்
அதியர் குடிப்பிறந்ததாலே அதியமான் ஆனான்.
தகடூரைத் தலைநகராய்க் கொண்டு – அந்தத்
தமிழூரில் தலைநிமிர்ந்து ஆண்டான்.
திண்தோளில் வலிமைதனைத் தேக்கிக்
கண் அசைவில் பகைப்புலத்தைப் போக்கி
மண்மீது புகழ் நிலைக்க மார்பில்
புண் ஏந்தி வீழ்வதையே விரும்பி
அஞ்சியெனப் பெயர் பூண்ட போதும்
அஞ்சாத வரிப்புலியாய் மானத்துடன் வாழ்ந்தான் !
அவ்வையாம் கவியரசி அவனுக்காக
அணிமணிகள் தமிழால் செய்து
அகமாரப் பூட்டி மகிழ்ந்தாள் – அவன்
அறம் வியந்து திறம் புகழ்ந்தாள்.
‘களம் புக எண்ணுகின்ற பகைவர் அறிக – எம்
உளம் நிறை வீரன் ஒருவன் இருக்கின்றானய்யா !
ஒரு நாளில் எட்டுத்தேர் செய்கின்ற தச்சன்
ஒரு திங்கள் உழைத்தமைத்த ஒரு தேர்க்காலுக்கொப்ப
உடல்வலிவும் உரமும் பெற்றோன்
அடலேறு அதியமான்; தெளிக !’ என்றே,
அவ்வை பாடிய செய்யுள் இஃதே :
“களம்புக ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே”
அவ்வீரன் அதியமான் ஒரு நாட் காலை
அடவியிற் சென்று அலைந்து திரிந்து
விலங்குகள் மீது வேல்களைப் பொழிந்து
வேட்டையை நிகழ்த்தி விரைந்து திரும்பினான்;
வழியில் மலையிடைப் பிளவொன்று கண்டு
விழியினைச் செலுத்தி வியப்பாய் நோக்கினான்;
தனிமையிலே நெல்லி மரமொன்றுயர்ந்து
தன் கிளையினில் சிறு இலைகளுக்கிடையே
கனியொன்றே ஒன்றைத் தாங்கி நின்றது.
‘இனிப்பாக இருக்குமென்றும் அதனையுண்டால்
இறப்பேதும் அணுகாதென்றும் இஃதுண்மையென்றும்
தலைப்பாகைத் துறவியொருவர் புதுமையாகப் புகன்றவுடன்
இமைப் போதும் தயங்காமல் அக்கனியைப் பறித்துக் கொண்டான்
தனைக் காக்க மன்னவனும் அக்கனியை உண்பான் என்று,
தகடூர் வீரரெல்லாம் எண்ணிக் கொண்டு
தடந்தோள் உயர்ந்திடவே தலைவன் பின் நடைபோட்டார்.
மாளிகைக்கு வந்தவுடன் நெடுமானஞ்சி
மாணிக்கத் தமிழ்பாடும் அவ்வையை அழைக்கலுற்றான்.
“மன்னவனே ஏன் அழைத்தாய் எனத் தெரியும்;
மாற்றானாம் தொண்டைமானிடம் எனைத் தூதாக அனுப்பத்தானே?”
என்று கேட்ட அவ்வை அம்மை
“சென்று வரத் தயார்தான்” என்றாள் – தூதில்
வென்று வருவதற்கு முன்னே – இதைத்
தின்று சுவைத்திடுக என வேண்டி,
நெல்லிக்கனியை நீட்டினான் வேந்தன் – நிலவில்
அல்லி மலர்வது போல முகமலர்ந்தாள் அவ்வை !
“சுவையான கனிதான்” என்று சுவைத்துப் பார்த்து; அரசு
அவைக் கவியான அவ்வை சொன்னாள்.
“அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியுண்டால்
ஆயுள் நீளுமென்று அடவியில் துறவி சொன்னார்.
அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன் ?
அவ்வையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும்
தகடூரின் பெயர் உள்ளளவும் நான் வாழ்வேன்
தமிழ் உள்ளளவும் வாழ்க அவ்வையே” என்றான்.
உண்மையை முன்கூடடி உரைத்திட்டால்
உண்ணாமல் மறுத்திடுவாள் அவ்வையென்று
தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழத்
தகடூரான் தந்தகனி நெல்லிக்கனி;
அதியமான் தமிழ் ஆர்வம் போற்றி
அவ்வை தந்த நன்றிக்கனி; இந்தச் செய்யுட்கனி !
“வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும் நீயே! தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே”
( புறநானூறு : பாடல் : 87, 91 பாடியவர் : அவ்வையார் )
பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவர். பொருநன் = வீரன். வைகல் = ஒருநாள்.
வலித்த = செய்யப்பட்ட. வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்.
ஒன்னார் = பகைவர். ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது.
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment