Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 5

Written by Dr. Avvai N Arul

மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனுஜனுடன் நிகழ்த்திய கலந்துரையாடலில் வரும் தொல்காப்பியரைப் பற்றிய முடிவுகள் நாம் வியந்து போற்ற வேண்டியவை

அறிஞர் பெக்கர்,அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் எல்லாம் தொல்காப்பியரின் சிலையை நிறுவவேண்டும்;

ஏனெனில் மேலை உலகின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றாரோடு அவர் ஒப்பிடற்குரிய தகுதி பெற்றவர் ;

தொல்காப்பியரின்  சிந்தனையாற்றல், கற்பனைத்திறன், மொழியின்பால் காட்டிய ஆர்வம் வழியாகத் தொல்காப்பியர் தமிழின் அறிவுலகைத் திறந்துள்ளார் ;

மொழி பற்றிய நுணுக்கங்களையெல்லாம் நுட்பமான ஆய்வுக்கு உட்படுத்தினார்;

கோட்பாடுகளின் வரையறைகளையெல்லாம் தெளிவுபடுத்தினார்;

மொழியைப் புரிந்துகொள்ளத் துணை செய்யும் மரபுகளையும் நாம் ஆராயாது ஏற்றுக்கொண்ட எல்லாவற்றையும் தெளிவாக விளக்கிய திறனால் தொல்காப்பியர் இன்றியமையாத அறிஞர் என்று எடுத்துரைத்தார் ,

அறிஞர் ஏ.கே. இராமானுஜன் சொன்னது….

தொல்காப்பியர் கவிதை இயல் தந்த சிந்தனையாளர் ; 

மொழி இலக்கணம் உரைத்தவரும் அவரே ஆவார்; தமிழ் மொழிக்குச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர் செய்திருக்கிறார்; சொல்லாட்சிக்கலை , யாப்பிலக்கணம் , கவிதை இயல் ஆகிய மூன்றிலும் அவர் வித்தகர்;

மொழி இயல் ஆசான்களுக்கெல்லாம் தலையாய சான்றெனத் தக்கவர் ஆவார்;

மொழிக்கு அவர் செய்யாதது ஏதுமில்லை; அவர் தம்மொழியியல் ஆய்விற்குப் பேச்சு மொழியிலிருந்து கவிதை மொழிவரை உள்ள எல்லாக் கூறுகளையும் சூட்டியுள்ளார் .

உலகமொழி இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பியத் ஒத்தது வேறில்லை என்பதைத் தெளிவாக்கி எழுதினார் .

இந்த அரிய குறிப்பை அறிஞரும் பாராட்டுக்குரிய பெரும் பேராசிரியருமாகத் திகழும் நல்லறிஞர் ப மருதநாயகம் எழுதியுள்ளார் .

தொல்காப்பியர் தமிழுக்கு வரம்பு வகுத்தவர் .

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த ” போக்கறு பனுவல் ” என்று பாயிரம் பாராட்டும் .மரபைப் போற்றுவது தொல்காப்பியரின் மாட்சியாகும் .

நூன் மரபு ,சொன் மரபு , மரபியல் என்று பலவிடங்களில் வலியுறுத்துவார் .

எனினும் மரபென்பது புலவர்க்குக் காலிற் பூட்டிய தளை என்று கருத முடியாது .

கைக்கு அமைந்த வளை .மரபில் ஊறவும் – மரபை மீறவும் – மரபை மாற்றவும் தொல்காப்பியத்தில் இடமுண்டு .

பேரரசர்கள் நிறுவிய வரலாற்றுக் கற்றூண்களும் கற்கோட்டைகளும் சின்னமும் பின்னமும்பட்டு அழிந்தொழியும் இவ்வுலகில், ஒரு தமிழ்ப்புலவன் மூவாயிரம் ஆண்டுகட்கு முன் பனையேட்டில் எழுதிய தொல்காப்பியப் பெருநூல் சிதைவின்றி வழிவழிக் காக்கப்பட்டு, இன்றும் நம் உடைமையாக

வாழ்கின்றது என்பது நமக்கு எல்லையில்லாத பெருமிதம் அளிப்பது .

காலக்கோட்படாதும், கடும்பகைக் கோட்படாதும் இத் தனிப்பெரும் பனுவலைக் குடும்பச்சொத்துப் போற் காத்தளித்த நம் முன்னோர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தவப்பெரிது.

நம் மூதாதையர் அடித்தொண்டினைப் பின்பற்றித் தமிழினத்தின் பொதுவுடைமையான தொல்காப்பியத்தினை நம் பிந்தியோர்க்கு நாமும் காத்து வழங்கவேண்டாமா ?

என்று நாம் உறுதியேற்க முற்படுவோம் என்று செம்மல் வ.சுப.மாணிக்கம் நமக்கு வழிகாட்டினார்.

இன்றைய நிலையில் எழுத்தாளர்கள் சிலர் கொச்சைப் பேச்சினை வரையறையின்றிக் கையாளக் காண்கின்றோம்.

மக்களோ உரிய பாத்திரங்களோ பேசுவதுபடியே எழுத வேண்டும் என்ற கருத்தைக்  கொண்டவர்களாய் மூளிச்சொற்களை எழுத்தாக வடிக்கின்றனர்.

நீங்க அலைஞ்சு களைப்பா வந்திருப்பீங்க,

ஊரிலேர்ந்து வறீங்களா,

எங்கேர்ந்து வாரீங்க,

அவங்க எண்ண பண்ணுவாங்கன்னா,

மறந்து வைச்சிட்டு வந்திட்டியா, ஆம்பிளையா பொம்பிளையா பொறந்தது,

சொல்றார் ,

கொல்றார்,

நம்மாள் ,

மவராசனா இருக்கணு, புடிக்கலீங்க,

இத்தகைய மூளிச் சொற்கள் இன்றைய உரை நடையில் பல்கி வருவதைப் படிக்கின்றோம்.

வாய் வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் அடிப்படையமைப்பில் சில நுண்ணிய தனி வேறுபாடுகள் உண்டு.

ஒலியை உயிராகவுடைய வாய்வழக்கை எழுத்து வழக்கில் பெரும்பாலும் கொண்டுவர முடியாது.

பேசுகின்ற  போது தேவையானால் எழுத்து வழக்கை வாய்வழக்காக மாற்றிக் கொள்ளலாமேயன்றி, எழுத்தாளர்கள் எழுத்திலே வாய்வழக்கைப் புகுத்தலாகாது.

இது மொழிக்கு இன்னாது.

வாய் வழக்கில் ஆளுக்கு ஒரு தனித் தன்மை அமைந்திருக்கும்.

எழுத்து வழக்கில் பலர் படிக்கத் தக்க பொதுத் தன்மை அமைய வேண்டும்.

பேச்சுப் பகுதிகளை எளிய இயல்பு நடையில் அமைக்கலாம்.

ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா பிறந்தது,

ஊரிலிருந்து வருகிறீர்களா ?

நீங்கள் அலைஞ்சு களைப்பாக வந்திருப்பீர்கள்

என்பது இயல்பு நடை.

எப்பாத்திரமாயினும் இயல்புநடையே எல்லார்க்கும் விளங்கும்;

காலங்கடந்தும் விளங்கும்.

கடின நடை எவ்வாறு பலர்க்கு விளங்காதோ அவ்வாறே கொச்சை நடையும் பலர்க்கு விளங்கமாட்டாது.

அவ்வட்டாரத்து மக்கட்குக்கூடப் படிக்க விளங்காது.

விளங்கினாலும் பார்வைக்கு இனிக் காது.

தம் நூல்கள் பலர்க்கு விளங்க வேண்டும், காலச் செலவில் நிலைபெற வேண்டும் என்ற முன்னோக்குடையவர்கள் ஒரு சில சொற்களை மரூஉவாக ஆளலாமேயன்றி, தொடர் தொடராக மூளிச் சொற்களை உரை நடையில் புகுத்தலாகாது.

தன் வளர்ச்சிக்கும் மொழியின் வளர்ச்சிக்கும் மூளி நடை உதவாது என்று மேடைகளில் முழங்கி முறையிட்டவர் மூதறிஞர் வ சுப மா .

நூற்றுக்கு மேலான இடங்களில் என்ப ,மொழிப ,எனமனார், என்றிசினோரே எனத் தொல்காப்பியத்தில்  வருவதைக் காணலாம் .

இந்த நிலையில் அரிய தொல்காப்பியத்தில் சில நூற்பாக்களைத் தெரிவு செய்து எளிய தொடர்களால் விளக்கிக் காட்ட முன்னோடியாக அமைந்தது  கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா .

கலைஞரின் எழுத்துநடை எப்போதும் இயல்பு நடையாகும் .

வழக்கு மொழியைத்  தவிர்க்க முடியாத போதுதான்  அயற்சொற்களைப் பயன்படுத்துவார் .

சொற்கள் இடம் பெறுவதில்லை .

அறுபதாண்டுகளுக்கு முன்னர் நான் பராசக்திப் படத்தில் எழுதிய தாலாட்டுப் பாடலில் எழுதியிருக்கிறேன் .

அதில் கூடத் தொடக்கத்தில் வரும் தொடரில் “

பூமாலை  புழுதி மண்மேல் வந்தேன் தவழ்ந்தாய் என்பதை விழுந்தாய் என்று சொல்லக் கூடாதா ”  என்றார்கள் .”

தவழ் இனிமையானது தவழ்ந்தாய் என்பது தான் மரபு  ” என்றேன் .

கேட்ட என் மெய் சிலிர்த்தது .

அந்தத் தாலாட்டு வரியை அவர் நினைவோடு கூறினார் .

வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல

வைர எழுத்தாணி கொண்டு

தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத – உன்னைப்

பள்ளியில் சேர்த்திட வருவார் – மாமன்

அள்ளி அணைத்திட வருவார்

இந்தத் தாலாட்டில் மாமன் அடிக்க வருவதில்லை , பள்ளியில் படிக்க அழைத்துச் செல்கிறான் .அதுவும் தமிழ்ப்பாடம் என்று நகைத்தார் . இனி கலைஞரின் கைவண்ணத்தைக் காணலாம் .

“ மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப் பட்ட சொல்லி னான ”

(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா : 92)

மரபு நிலை திரியாச் சொற்களால் செய்யுள்கள் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அதற்கான இலக்கணப் பயிற்சியினை முழுமையாகக் கற்றவனில்லை யென்ற காரணத்தினால்தான் இன்றைக்கு அறுபது ஆண்டுகட்கு முன்பு நான் எழுதியவை கவிதை வரிகளாக இருந்து கவிதையாக அமைந்திடவில்லை யென்பதை நானே வெளிப்படையாக அறிவித்து, “கவிதையல்ல” என்ற சொல்லோவிய நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறேன்.

<span style="font-weight: 400;"

>பெருங்கவிஞர்களாம் தமிழறிஞர்கள் பங்கேற்ற பல கவியரங்குகளில் தலைமையேற்று,குறிப்பாகத் திருச்சி வானொலி முதல் கவியரங்கில் “ விடுதலை வீரர்கள் ” என்ற தலைப்பில் 1967ஆம் ஆண்டு நான் பாடியபோதே.

“சிறை வாழ்ந்தார் செக்கிழுத்தார் – இந்தத் தரையாண்ட வெள்ளையரை விரட்டுவதற்குக் குறை ஆயுள் பெற்றுப் பலர் கொலையும் உண்டார் !

உறை மீறி வெளிவந்த கத்தி போல உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார் !

அவர் பெருமை கூறுதற்கு அணி வகுத்த இந்த நாளில் விடுதலைக்கு உயிரீந்த எவர் பெருமை கூறுதற்கும் இவர் போலக் கவி வளத்தைப் பெற்றேனில்லை;

கவிதை பாடக் கற்றேனில்லை !

தளையறுத்த வீரர் கதை பாடுவதால் தளையகற்றிப் பாடுகின்றேன் நானும் – அவர் தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால் தொடை தட்டும் என் பாட்டும் !

<span style="font-weight: 400;"

>என் கவிதை யாப்பின்றிப் போனாலும் போகட்டும் – நம் நாடு, மொழி, மானம், உணர்வெல்லாம் காப்பிற்றிப் போதல் கூடாதெனும் கொள்கை யொன்றால் வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்கக் காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல் நெஞ்சில் ஊறுகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக் கொள்கை மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று சொல்வேன்;

எத்தனை உயிர்கள் எத்துணை ரத்தம் நித்தமும் தந்து பெற்றது விடுதலை ! இத்தரை குடைந்து மெத்தவும் உழன்று பத்தரை மாற்றைப் பெற்றபின் அதனைக் கைத்திறம் காட்டி அணிநகை பூட்டிச் சித்திரப் பெண்டிர்க் களித்திடலன்றிக் குப்பைக் குழியில் போடுதல் நன்றோ ?

புட்கள் கூவிடும் சோலையின் நடுவே முட்கள் கீறிடப் பறித்த நல் ரோஜா கட்கம் ஏந்திய வீரர் முடியில் வெட்கம் ஏந்திய மாதர் குழலில் இருந்திடல் மணமா?

அதனைத் துட்டக் குரங்கின் குறுகிய கையில் கொடுத்திடல் நலமா ?

பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்;

பெற்ற மறவர்க்குப் பெருமைகள் சேர்ப்போம் ! ”

என எழுதியிருந்தேன்.

கவிதை இலக்கணம் நிறைவாகக் கற்றுள்ள கவிஞன் நான் என நெஞ்சை நிமிர்த்துக் கொள்ளாவிடினும், நான் இதுவரை எழுதியுள்ள “ கவிதை வரி ஓவியம் ” எதுவும் காதறுந்த ஊசிகளாக ஆனதில்லை.

காதறுந்த ஊசிகளையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கற்களாகவே விளங்குகின்றன என்பதைப் பெருமிதத்துடன் அறிவிக்கும் பீடு எனக்கு உண்டு.

அதற்குரிய ஆதாரங்களாக இதோ சில :

ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும் உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும் உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூடத் தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே கணியன் பூங்குன்றன் எனும் கவிஞனாய் உலவியதைக் கவனமுடன் எண்ணிப் பார்த்தால் – அந்த மாமனிதனையும் மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ ?

இதோ ஒன்று :

பனிமுட்டை அடை காக்கும் பசும்புல்லின் தரைமீது மணித் தேர் அசைவது போல் மாதொருத்தி நடந்து வந்தாள்

கனித் தமிழ்ச் சொல் உதிர்க்கும் புலமை மிக்காள்

காக்கைபாடினி பொன்முடியார்க்குத் தமிழில் தகடூர் அதியமான் நெடுமானஞ்சி – வேள்பாரி வள்ளல் நாடன் சேரமான் மாவண் கோவன்

கானப்பேர் தந்த வழுதி – மற்றும் சோழனாம் பெருநற்கிள்ளி ஆகியோர் புகழைப் பாடித் தமிழுக்கு அணி பல பூட்டி நின்ற அறிவொளி ஔவை நல்லாள் !

மேலும் மற்றொன்று :

மானம் என் மகன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு! பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதே வேல் பிடிக்கும் வித்தையினைக் கற்றுத் தந்தேன் ஆல் விட்ட விழுது போல் தந்தைக்கு மகனாகி –

ஆட்டு வால் போலக் குட்டை மனம் கொண்ட பகை;

நம் கோல் பறிக்கக் கூடாதென்று கொந்தளித்து;

அவர் தோல் உரித்துத் துரத்திவிட்டுப் போரில் மாளுகிறான்;

பெரும் புகழை ஆளுகிறான்!

என் இருவிழி மழைதனைக் காணாதீர்;

என் இதயம் மகிழ்வதைக் காண்பீரே !

வேறொன்று :

மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு !

அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை

அடடா !

கருத்தறியப் பொய் சொன்ன கயவன் எங்கே ?

வாள் இங்கே !

அவன் நாக்கெங்கே ?

வாள் வீச்சின் ஓசையையும்,

யாழின் ஓசையையும் ஒத்ததாய்த் தமிழர்களை வீறு கொள்ளவும் வியப்புக் கொள்ளவும் செய்திட்டதும் செய்து கொண்டிருப்பதுமான இந்தக் கவிதை வரி ஓவியங்கள் போன்ற பலவற்றைத் தமிழன்னையின் காலடியில் காணிக்கையாக்கி வருகிறேன்.

மரபு நிலை கூடத் திரியலாம்,

என் மனநிலை திரியவில்லை ; திரியாது என்பதை இதுவரை நான் இந்தப் பூங்காவில் பறித்தளித்துள்ள ஒவ்வொரு மலர் நிலையும் உணர்ந்தோர் அறிவர் !

அறிந்தோர், உணர்வர் !

செம்மொழிச் சிகரத்தின் சாரலில்

தொடர்ந்து நனைவோம் ….

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment