Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4

Written by Dr. Avvai N Arul

ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் – கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி ,ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன .

வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர்

போர்வீரர்களின் புகழும் – வீரர்களின் வெற்றியும் சிறப்பாக எப்போதும் போற்றப்பெற்றன .

விழித்த கண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்க ணவர்க்கு

என்ற திருக்குறள்

பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது விழிகள் மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ ?

என்பது பொருள் .

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

வீரன் தன் வாழ்வில் கழிந்த தன் நாள்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாள்களை எல்லாம் பயன்படாமல் தவறிய வீணான நாள்கள் என விலக்குவான் .

 

முத்தமிழறிஞர் கலைஞர் ஒருமுறை தன் உரையாடலில் பெண்களின் கண்களைப் பார்த்தால் வேல் போன்ற விழிகள் ,வாள் போன்ற பார்வை,அம்பு போன்ற நோக்கு என்று கூறுவதால் வேலும் வாளும் அம்பும் வில்லும் வீட்டில் அவ்வளவு பழகிய பொருள்கள் எனத் தெரிகின்றன .

அந்த நாளில் சிறுவர்கள் விளையாடும் போது ஏர் ஆட்டம் விளையாடுவது உண்டு .

எதிரே ஒரு பையன் நின்று கொண்டு தன் விரலை நீட்டி நீ பயப்படுவாயா என்று கண்ணெதிரில் நின்று காட்டுவான்

பயத்தில் கண்ணை மூடிக்கொண்டால் தோற்று விட்டான் என்று பொருள் .

வேல் தேய்ந்து விரலான கதை என்று நான் எங்கோ எழுதினேன் .

இந்தக் கருத்தைத் திருக்குறளில் வேல் வந்தால் விழி இமைக்காத வீரன் என்று குறிப்பிட்டுள்ளார் .

இது கற்பனையாகக் கூட இருக்கலாம் .

மேலும் கூறினார்

நேற்றொருவர் ஈமச்சடங்குகள் பற்றிய ஒரு நூலைக் கொடுத்துச் சென்றார் .

குழந்தைகள் , சிறுவர் சிறுமியர் திடுமென இறந்தால் காது குத்திப் புதைப்பார்கள் .

சிலர் ஒரு கையில் காயம் வந்த புண் வேண்டுமென்று ஒரு கத்தியால் கீறுவார்கள் , தழும்பில்லாமல் சாகக் கூடாதாம் .

எனக்குப் புறநானூற்றுப் பாடல் தான் நினைவுக்கு வந்தது .

முத்தமிழறிஞர் கலைஞரின் விளக்கத்தைக் காணலாம் .

மயிர் நீப்பின் வாழாத கவரிமான் போல் மானம் வரின் உயிர்நீப்பர் எனும் திருக்குறளுக்குத்,
தயிர் கடைந்தால் தலைகாட்டும் வெண்ணெய் போன்று தமிழ்ச்சங்கக் காலத்து வீரன் வாழ்வே உண்மைச் சான்று !.


தவழ்ந்து வரும் தன் மகவை முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல்
தலைக்கு மேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச்சிங்கம் அவன் !


தாமரை மொட்டிரண்டை ஏந்தி வரும் தன் பட்டத்து அரசியையும்
நெளியாமல் நிமிர்ந்து நின்றே நெஞ்சகத்தில் அணைத்துக் கொள்வான்.

நிலம் நோக்கும் வழக்கமின்றி நேர்பார்வை செலுத்தித்தான்

நிலவு முகத்தரசி நெற்றியிலே இதழ் பதிப்பான்.

படுத்திருக்கும்போது பஞ்சணையில் வினாக்குறிபோல் வளைய மாட்டான் – வில்லில் தொடுத்திருக்கும் கணையைப்போல் கால்நீட்டித் துயில் கொள்வான் !

‘வளையாத முதுகெலும்பு பெற்றவனோ ?

வணக்கம் எனும் பொருள் விளையாத வயற்காடோ அவன் இதயம் ? ‘ என வியந்து, வாய் பிளந்து மூக்கின்மேல் விரல் வைத்து – அவனை வாழ்த்தியவர் பலருண்டு !

‘ இரும்பொறை ‘ மரபில் வந்த இணையிலா வீரனவன்.

இரும்பொத்த கணையமரம் போலக் கால் படைத்த சேரனவன்; –

அதனாலே சேரமான் கணைக்கால் இரும்பொறை யென்னும் செந்தமிழ்ப் பெயருடன் செங்கோல் ஏந்தினான்.

தொண்டித் துறைமுகம் அவன் ஆட்சித் தலைநகர் – அதனைத் ‘திண்டிஸ்’ என்று யவனர்கள் அழைத்தனர் !

மூவன் என்னும் முடியுடை வேந்தனை வீழ்த்தி – அவன் முகவாய் நொறுக்கிப் பற்களைப் பெயர்த்துத் – தனது
கோட்டை வாயிற் கதவின் பெரிய பூட்டின் மீது பொருத்தி வைத்தான் என்று
‘களவழி நாற்பது’ பாடிய பொய்கையார் எனும்புலவர் – அவனது களப்புகழ் பலபடக் கூறிக் களித்திடுவாரே!

தமிழரிடையே ஒற்றுமை என்பது அத்திப்பூ – ஆடிப்பிறை – அதனாலே தமக்கிடையே போர் தொடுத்துத்
தமிழினம் பிளவுபட்ட சேதி கூறும் வரலாற்று ஏடுகளின் வரிகளாக ஆகிவிட்டார் – தமிழர் வாளாற்றல் காட்டுதற்கு வரிந்து கட்டி இனத்துக்குள் இரண்டுபட்டார் !

செங்கணான் எனும் சோழன், செருமுனையில் சிறுத்தை போன்றான் !

எங்கணும் வெற்றி கண்டு புகழ்வானில் பறக்க விட்டான் புலிக் கொடியை !

அது கேட்டுச் சேரமன்னன் ஆர்த்தெழுந்தான் ! ) அணி தேர்ப்புரவி ஆட்பெரும்படை அவன் ஆணை கேட்டுப் பின்தொடர,

“ மங்குமோ என்றன் வீரம் ? என் மாவலித் தோளின் முன்னே தங்குமோ சோழன் பெற்ற வெற்றி ” யென்று கணைக்கால் இரும்பொறை கர்ச்சித்துக் கங்குல் கிழித்தெழும் ஒளியாக எதிர்ப்பட்டான் !

முரசுகள் போலே மத்தகம் படைத்த முரட்டு யானைகள் மோதிடவே அரசுத் தேர்களின் அச்சாணி கழன்று ஆயிரம் சுக்கல்கள் ஆயினவே !

குளத்து நீரில் செத்து மிதக்கும் குறுங்கெண்டைமீன் போலே குதிரைகள் குளம்படி குருதிச் சேற்றில் அழுந்திப் பதிந்தனவே !கட்கம் ஏந்திய காலாட் படையினில் காயம் ஒருசிலர் முதுகில் பட்டிடவே வெட்கம் துரத்த – அவர்கள் வீழ்ந்து மடிந்தனரே !

உறுதி முழக்கமும் குருதிப் புனலும் இறுதிப் பயணமும் எங்கும் நிறைந்த களம்!

பொருதிடும் இருவரில் வெல்வது யாரென அறுதியிட முடியாமல் அமைந்த களம் !

ஆளுக்கொரு மின்னலை எடுத்து வாளுக்குப் பதிலாக வீசினரோ – எனச்
சோழன் சுழற்றும் வாள்பட்டுச் சூரர் தலைகள் ஆயிரம் உருளும்!

சேரன் வீசும் வாளின் பயனாய்ச் செக்கர் வான்போல் சிவந்தது நிலமும்!

ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை எனும்
இலக்கணத்தை இருவருமே இதயத்தில் பதித்தவர்தாம் என்றாலும்
சேற்றில் சிக்கிய களிறெனவே – இறுதியில் சேரமான் இரும்பொறை சிக்கிவிட்டான்!
ஆற்றல் முழுதும் காட்டி நின்றான்; ஆயினும் சோழன் முன்னே அவன் தோற்று நின்றான்!


திருப்போர்ப் புரமெனும் சமர்க் களத்தில் திண்தோள் சேரன் தோற்றவுடன் –
அட்டா; அவனைச் சோழ மன்னன் குடவாயிற் கோட்டச் சிறைதனில் அடைத்தான்.
உறைவிட்டெழுந்த உடைவாள் பட்டே உயிர்விட்டுப் போரில் புகழ் சேர்க்க முடியாமல்
சிறைப்பட்டு வாழும் நிலை வந்ததே என்று சிந்தை அணு ஒவ்வொன்றும் நோக வாடினான் சேரன்.


தாகம் ஒருநாள் அவன் நாவை உலர்த்த – சிறைக் காவல் வீரனை அருகே அழைத்து – தண்ணீர் விரைவில் கொணர்க என்றான் – சற்றுத் தாமதமாகக் குவளையில் தண்ணீ ர்
கொண்டு வந்து கொடுத்ததனாலே – நெருப்பை மொண்டு தகித்தது சேரனின் நெஞ்சம்!

பண்டு வாழ்ந்த குலப் பெருமை யெலாம் துண்டுபட்டுப் போனதெனத் துவண்டுவிட்டான்!

ஏடொன்று எழுதிவைத்தான் எதிர்காலத் தமிழகமே – அதனைப் பாடென்று விட்டுச் சென்றான்!

‘பிள்ளையொன்று இறந்து பிறப்பினும் – சதைப் பிண்டமொன்று பிறந்து தொலைக்கினும்
மூப்பு கொண்டு மடிந்திடினும் முடிவிலொரு நோய் கண்டு முடிந்திடினும்
போரில் கலந்து விழுப்புண்பெற்று – மானமிகு வீரர் என மாண்டிடாத பழி துடைப்பதற்காக
வாள் கொண்டு உடலில் கீறி – வான்புகழ் வாழ்வில் சேர்த்தபின்பே

உடலடக்கம் செய்திடும் மான மரபே அடலேறுகள் மலிந்திடும் தமிழர் மரபு!
அந்தப்
பண்பாட்டு மரபு வழி வந்துதித்த நானோ – மனப் புண்பட்டுப் பகையரசின் சிறைப்பட்டு நாய்போலத்
தண்ணீர்க்கும் காத்திருக்கலானேன் – இனி உண்ணீர் என்று பன்னீர் தந்து உபசரித்தபோதும்
தகுதியன்று இனி உயிர்வாழ்தல் – அதனாலே தமிழ்த்தாயே! என் மானங்காக்க
உன் மடிதனிலே விழுகின்றேன்; தாங்கிக் கொள்க!
இப்படி
ஏழடிப் புறப்பாடல் ஒன்றை எழுதிவிட்டுச் – சிங்க ஏறுபோல் சேரமன்னன் பெயரைப் புகழில் நட்டான்!


எப்படிப்பட்டோர் இருந்தார் மறைந்தார் என்பது – அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பதற்கொப்ப
சேரமான் கணைக்கால் இரும்பொறை வீரவாளினை ஓலையாய்க் கொண்டு
தீட்டிய புறப்பாடலை நீட்டுகின்றேன் உம்மிடையே –
படித்துப் பாரீர்! – உணர்ச்சியால் துடித்துப் போவீர்!

“குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத் தானே.”

(புறநானூறு : பாடல் : 74 பாடியவர் : சேரமான்

கணைக்கால் இரும்பொறை)

பொருள் விளக்கம்:

ஊன்தடி = சதைப்பிண்டம்.
ஆள் அன்று என்று வாளின் தப்பார் = ஆளல்ல என்று கருதாமல் வாளால் வெட்டிடத் தவறமாட்டார்.
ஞமலி = நாய். கேளல் கேளிர் – பகைவர்.
மதுகை – மனவலிமை.

பழங்கால மரபு அங்கங்கே மின்னுவதை நம்பிக்கையோடும் உறுதியாகவும் சொல்லலாம். சிந்து வெளிப் பண்பாட்டைப் பற்றிய எனது பதினேழு ஆண்டுக்கால ஆய்வின்போது பல நண்பர்கள் என்னை

, “ சிந்துவெளி நாகரிகம் அழிந்துபோனதன் காரணங்கள் யாவை ? ” என்று கேட்டிருக்கின்றனர். அந்த அழிவென்பது இதுவரை மெய்ப்பிக்கப்படாத ஓர் ஊகமே.

அழிவிற்குப் பின்னும் அவற்றில் சிறப்புற்றிருந்த பண்பாட்டுக் குறியீடுகள் வாழ்கின்றன .

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய நாடு மிகுந்த மாறுதலுக்குட்படாமலேயே இருந்து வருகிறது.

முற்றுகைகள் நிகழ்ந்தன;

இந்தியப் பெருநிலத்தில் போர்கள் செய்யப்பட்டன ; புதிய நாடுகளும் இனங்களும் அதனை வென்று ஆட்சி செய்தன; வேற்று நாகரிகங்கள் புதுப்புது கருத்துகளையும் குறிகோள்களையும் கொண்டு சேர்ந்திருக்கின்றன:

ஆனால் இந்திய நாடு, அதன் தொல்பழம் நாகரிகம் ஆகியவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனடிமும் உருமாற்றம் பெற்றிருக்கக் காணலாம்.

எகிப்து, பாபிலோனியா, அசீரியா ஆகிய நாடுகளின் தொன்மையான நாகரிகங்கள் உலகப்படத்திலிருந்து தடம் தெரியாமல் நீக்கப்பட்டு விட்டன.

எனினும் இக்காலத்தில் இந்து நதிக்கரையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒளிச் சின்னங்களைக் கொண்ட இந்திய நாகரிகமானது இன்னும் உயிருடன் இருக்கிறது.

 

இந்திய நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு இறந்த காலத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியைச் செய்யும் வரலாற்று ஆய்வாளனுக்கு இது உண்மையிலேயே ஒரு பெரிய பேறு ஆகும்.

நாம் இன்னும் அந்தப்படை வீரர்களை வளர்த்த சூழலைத்தான் எண்ணி வாழ்கிறோம்

.மீனவர்களும்,
பரதவர்களும், வேளாளர்களும், குடகர்களும் இன்னும் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தப் பெறுகின்ற எழுத்துக்கள் சிந்துவெளியில் காணப் பெற்ற குறியீடுகளின் இயல்பான நிறை வளர்ச்சியே என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிந்துவெளி மக்கள் பேசிய தொன்மையான மொழியின் எதிரொலிகளே நம்முடைய காதுகளில் தொடர்ந்து உரக்க ஒலிக்கின்றன.

இவ்வாறு
எழுதிய அருட்தந்தை ஈராசு அடிகள் ஓரளவேனும் புறநானூற்றுப் பாடலுக்குப் பொருந்தி அமைகிறது .

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

மானம் காத்த மன்னன்

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment