Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2

அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் !

உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் .

அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது.

இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு.

பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம் ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

தொகுப்புப்பணியை முன்னின்று வடிவமைத்த பெருமை முன்னாள் அமைச்சர் செ .மாதவன் அவர்களையும் அவர் திருமகளார் வெற்றிச்செல்வி இராசமாணிக்கம் கலிபோர்னியாவில் ஆற்றிவரும் சீரிய தமிழ்ப் பணியின் சிகரமாகக் களஞ்சியம் அமைந்தது.

இந்தப் பணியில் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் , நான் ,மறைந்த பேராசிரியர் மோகன் ஆகிய மூவரும் பங்கு கொண்டோம்.

பல்லாயிரக்கணக்கில் விரிந்து பரந்த இலக்கிய எழுத்தோவியங்களில் எதனைத் தொடுவது எதை விடுவது என்பது பனித்துளியைக் கொண்டு பனையை அளப்பது போன்ற பணியாகும் .

மலைத்துப் போய் நின்றோம்

எண்ணுவது கலைஞரைப் பற்றி என்னும் நிலையில் முதல்வர் கலைஞரும் ஒருவாறு இசைந்த பிறகு கலைஞர் களஞ்சியம் அமைந்தது .”

தொகுப்பின் எஞ்சும் விரிப்பிற் பெருகும் ” என்ற தொடரின் பொருள் அன்று தான் புரிந்தது.

அமெரிக்க ஆய்வுப் பேரொளியாகத் திகழும் அறிஞர் ஆர்ட்டு வடமொழிப் பேராசிரியராக இருந்தும் செந்தமிழ்க் கடலில் திளைத்துச் செம்மொழி மாடத்திற்கு ஒரு தூணாகவும் வாழ்வைத் துலங்கினார் என்றால் மிகையாகாது.

கலைஞரின் எழுத்துப் பரப்பை எண்ணிப் பார்க்க முயல்வோமென்று ஒரு கணக்கிட்டோம்

.ஒரு நாளைக்குப் பத்துப்பக்கம் என்று எழுபது ஆண்டுகளுக்குக் கணக்கிட்டோம் .மொத்தம் ஏறக்குறைய 2,55,500 பக்கங்கள் என்று அளவிட்டோம் .

ஆனால் இந்தக் கணக்கு எங்களுக்கு அவ்வளவு சரியாகத் தெரியவில்லை .

கலைஞரின் செயலாளர் செம்மல் சண்முகநாதன் அவர்கள் ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் என்றல்லவா கணக்கிட்டிருக்க வேண்டும் என்றார் .

சில நிலைகளில் ஐம்பது பக்கங்கள் எழுதுவார் என்று ஒருமுறை விளக்கினார் .

இந்தக் கணக்கை இன்றைய இளைஞர்கள் மேலும் ஆராய்ந்து அரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .

கலைஞர் ஆற்றிய தமிழ்த் தொண்டு பற்றி கலைஞர் ,கலைஞர் களஞ்சியப் பதிப்பில் எழுதிய முன்னுரை அறிஞர் ஹார்ட்டு எழுதிய முன்னுரை செம்மொழி வரலாற்றின் செம்பொன் வரிகளாகும்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இலக்கியங்களைப் பற்றி அறிமுகவுரை எளிதன்று.

எந்த அளவில் எழுதினாலும் பெருமைக்கும் -திறமைக்கும் , மேன்மைக்கும் ஈடாகாது.

எவரேனும் ஒருவர் அவர் போல் இலக்கியக் கலைவடிவங்களில் எழுத முயன்றால் அதற்கு ஒரு பிறவி போதாது.

இலக்கியத்தில் மட்டுமன்று, அரசியலிலும் கலந்து மிகுந்த உயர்நிலையை அடைந்துள்ளார்.

நான் இச்சிறு அறிமுகத்தில் தமிழ் இலக்கியத்திற்கும்,தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலைஞர் பெருந்தகை செய்துள்ள பணிகளை விவரிக்க முயல்கிறேன் .

கலைஞர் இக்காலத் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தந்த மகத்தான பணிகளை எழுத்துச் செம்மல் என்றாலும், அவர் படைப்புகளை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருக்கு இந்த ஊக்கத்தை எழுச்சியை அளித்த சங்க இலக்கியங்களையும், அவை காட்டும் பண்பாட்டையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

கலைஞருடைய படைப்புகளைப் பல கண்ணாடிகள் வழியாகக் காண இயலுமென்றாலும், இது ஒரு முக்கியமான கண்ணோட்டம் ஆகும்.

நான் பல ஆண்டுகள் என் வாழ்வில் தமிழ்ச் சங்க இலக்கியத்தைப் படித்தறிந்திருக்கிறேன்.

புறநானூற்றையும், சங்க இலக்கியத்தில் பல பாடல்களையும் மொழி பெயர்த்திருக்கிறேன்.

நான் வடமொழியையும் கற்றிருப்பதால் இந்திய இலக்கியத்தில் சங்க இலக்கியத்தின் பங்கினை விளக்க இயலும் என்று நினைக்கிறேன்.

வடமொழியில் பழைமையானது ‘இருக்கு’ வேதம், உபநிடதம், புத்த மத இலக்கியங்கள் ஆகும்.

இவை தத்துவக்கருத்துகளையும், மதம் பற்றிய கருத்துகளையும் விளக்குகின்றன.

அதற்குப் பின் வந்த மகாபாரதமும், மதத்தைப் பற்றிய எண்ணங்களையே விளக்குகிறது.

மிகவும் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட வடமொழி இலக்கியம் மதம், பதவி, குலம் என்பவை பற்றிய கருத்துகளை அறிவித்தாலும் எந்தக் குலத்தார் எதைச் செய்யத் தகுதி உள்ளவர்கள் என்பதைக் கூறாமல் செல்லவில்லை .

வடமொழி வளர வளரச் சமூக, குல பதவிப் பெருமைகளை, பிரிவுகளைப் பெரிதாக அறிவுறுத்திற்று.

பெருங்கவிஞர் காளிதாசருடைய இலக்கியத்தில் கீழ்க்குலத்தார் பிராகிருதத்தில் உரையாடுகிறார்கள்.

சமசுகிருதத்தில் அன்று. இவ்வாறு நான் கூறுவதற்குக் காரணம் வட இந்திய இலக்கியம் குல வேறுபாடு பற்றிய கருத்துகளைக் கூறி வந்திருக்கிறது என்பதை விளக்கத்தான்.

புத்த மத வடமொழி இலக்கியங்களே முதலில் குல வேறுபாடுகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனால் வடமொழி குல வேறுபாடுகளை அதிகப்படுத்திக் காட்டுகிறது என்று கூறினால், அது மிகையன்று.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் சமத்துவ சமூகத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர்.

ஆனால் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களது மொழி தமிழ்தான்.

வடமொழி போல் கற்றறிந்த அறிஞர்கள் மட்டும் தமிழைப் பயன்படுத்தவில்லை .

சங்க இலக்கியம் தோன்றும் முன்னால் இப்பாடல்களை வாய் மொழிப் பாடல்களாக நாடோடி இலக்கியத்தில் மக்கள் பாடியிருக்க வேண்டும்.

சங்க இலக்கியம் இந்த வாய் மொழிப் பாடல்களிலிருந்துதான் உருவாகியிருக்க வேண்டும்.

சங்க காலத்திற்கு முன்னால் இதை முதலில் பாடியவர்கள் சாதாரணக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

சங்க காலம் தோன்றியபோது தமிழ்க்கவிஞர்கள் தமிழில் சங்கப்பாடல்களை எழுதினாலும், அவர்கள் பாடல்களுக்கு அடிப்படை நாடோடிப் பாடல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

சங்க காலக் கவிஞர்கள் உயர்ந்த குல மக்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுதவில்லை.

ஏனெனில் இப்பாடல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளன.

அவர்களது உலகம் பொதுமக்களின் உலகம்தான்.

அவர்கள் கூறும் பண்பாட்டில் பல குலங்களும், பலருக்கு உயர்ந்த பதவிகளும், பலருக்குத் தாழ்ந்த பதவிகளும், அவரவர்க்கு ஏற்ற தொழில்களும், மரபும் இருந்தன என்பதை இப்பாடல்களால் அறிகிறோம்.

சங்கப் பாடல்கள் ஒரு குலத்தின் வாழ்வைப் பற்றியோ அல்லது பண்பாட்டைப் பற்றியோ மட்டும் விளக்கவில்லை.

இதுதான் சங்கத் தமிழ்ப்பாடல்களின் தனித்தன்மை. எல்லாக் குலங்களின் வாழ்வும் அவர்களது இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

சங்ககால இலக்கியம்,வேற்றுமையின்றி அரசனாக இருந்தாலும், கற்றறியாத பாணனாக இருந்தாலும், அவர்களது வாழ்வையும், பண்பாட்டையும் பற்றி உயர்வாகவே கூறியுள்ளது.

எக்குலத்தாராயினும் அவர் மேன்மையுடையார் என்பதை இப்பாடல்கள் உணர்த்துகின்றன. ‘

யாதும் ஊரே, யாவரும் கேளிர் ‘ என்பதுதான் இப்பாடல்களின் குறிக்கோள்.

பேராசிரியர் ஏ.கே இராமானுஜன் அவர்களும் சங்க காலம் பற்றி இவ்வாறுதான் விவரித்துள்ளார்.

வடமொழிக் காவிய இலக்கியங்களில் நகரப் பண்பாட்டிற்கும், கிராமியப் பண்பாட்டிற்கும் மிகவும் வேறுபாடு உள்ளது.

மகாபாரதம் போன்ற காவியங்களிலும், பல நாடகங்களிலும் கற்றவர்கள் கிராம மக்களின் வாழ்வைப் பற்றி நகையாடுவதைக் காணலாம்.

பழந்தமிழில் இவ்வாறு வேறுபாட்டைக் காண இயலாது.

புறநானூறு பல குறு நாடுகளை ஆளும் சிற்றரசர்களின் ஈகையை, வீரத்தைப் பல பாடல்களில் போற்றிப் புகழ்கிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

அகநானூற்றின் பாடல்களைப் படிக்கும்போது
இதுதான் நகர மக்களின் வாழ்வு, இதுதான் கிராமிய மக்களின் வாழ்வு, இது இவர் மேன்மை ,
இது அவர் மேன்மை
என்று பகுத்துக் கூற இயலாது.

எல்லாவித வாழ்க்கைக்கும் மேன்மையும், பெருமையும் இருக்கின்றன என்று சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

மருத நிலத்தில் பெரும் மனைகளில் வாழும் மக்கள் அரிசிச் சோறு உண்பார்கள்.

மலைகளில் வாழும் வேடர் குல மக்கள் தினை உணவு உண்பார்கள்.

ஆனால் அவர்களைப் பற்றிப் பாடும் புலவர் அவர்களது வாழ்வில் வேறுபாட்டைக் காண்பதில்லை.

இருவர் வாழ்க்கையையும் ஒரே நிலையில் வைத்துத்தான் புலவர்கள் புகழ்கிறார்கள்.

அகநானூற்றில் பல நிலங்களில் வாழும் தலைவன், தலைவி காதலைப் பற்றிய பாடல்களைக் காண்கிறோம்.

இத்தலைவன், தலைவியர் பலவிதமான குலத்திலும், செல்வ நிலையிலும் இருந்ததாகப் பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக அகநானூற்றில் ஒரு பாடலில் ( 280 )

செல்வம் நிறைந்த ஒரு தலைவன் மீனவர் இல்லத்தில் வாழும் ஒரு மங்கை மீது காதல் கொள்வதால் தானும் மீனவனாகி அவளை மணக்க விரும்புகிறான்.

அறிஞர் சிலர் சங்ககால இலக்கியத்தில் சமத்துவம் காண்பதன் காரணம் புத்த, சைன மதங்களின் தொடர்பாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

நான் இச்சமத்துவம் இப்பாடல்களில் காண்பதன் காரணம் இவை தமிழ்ப் பாணர்கள், மற்ற விறலியர் போன்றோரின் நாடோடிப் பாடல்களிலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

இதுபற்றிய கருத்துகள் எதுவாக இருந்தாலும், சங்க காலத்திற்குப் பின்னர்த் தமிழில் நீதி நூல்கள் தோன்றின.

இவற்றை உலகத்தில் எந்த மொழியோடு இணைத்துப்பார்த்தாலும், அதற்கு ஈடான முறையில் எழுதப்பட்டுள்ளன என்பது தெளிவாகும்.

சிறந்த கருத்துகளை இவை விளக்குவதால் உலகில் இவை உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன.

தமிழர்கள் அனைவராலும் போற்றப்படும் பெரும் நூல் திருக்குறள் ஆகும்.

திருக்குறளில் இறைவனைப் பற்றிய மதக்கருத்துகள் பல இல்லை .

திருக்குறள் துறவி, அரசன், இல்வாழ்வோன் என்று பலர் வாழ்க்கையைப் பற்றிய கருத்துகளை வேறுபாடின்றி விளக்குகிறது.

திருக்குறள் தரும் பல கருத்துகளை வடமொழியில் காண்பது அரிது.

காமத்துப்பாலில் தலைவன், தலைவி அன்பு பற்றித் திருக்குறள் விளக்கும் அருமையான கருத்துகள் வேறு மொழிகளில் காண்பதும் அரிது.

தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கவிஞர்கள் திருக்குறளைப் போற்றியுள்ளனர்.

தமிழர்கள் அனைவரும் கீதை படித்ததில்லை.

ஆனால் பள்ளியில் கால் வைத்த நாள் முதல் கல்லூரியிலிருந்து வெளிவரும் நாள்வரை திருக்குறளைப் படிக்காத மாணவர்கள் தமிழகத்தில் இல்லை.

அது மட்டுமன்று, பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், பேருந்தில் செல்வோர், திரைப்பட நடிகர்கள் அனைவரும் திருக்குறளைப் பயன்படுத்துகிறார்கள்.

எதற்கும் திருக்குறளை எடுத்துக்காட்டியே தமிழர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் மேன்மையும் உயர்வும் எவ்வாறு கூறப்படுகின்றனவோ அவற்றை அவ்வாறே பக்தி இலக்கியமும் விளக்குகிறது.

நாயன்மார்களும்,ஆழ்வார்களும் பல குலத்தைச் சேர்ந்தவர்கள், பல தொழில் செய்தவர்கள், சமூகத்தில் உயர்ந்த – தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள்.

இவ்வடியார்களைப் பற்றிப் பாடிய கவிஞர்களின் பாடல்களும் நாடோடிப் பாடல்களிலிருந்து தோன்றியவையாக இருக்கலாம் என்பது என் கருத்து .

தமிழில் தலை சிறந்த கவிஞர் கம்பரும், வேறுபாடின்றிச் சமூகத்தில் உயர்ந்த தாழ்ந்த பல மக்களின் வாழ்வைத் தம் பாடல்களில் விளக்கியுள்ளார்.

இவ்வாறு உயர்ந்த, தாழ்ந்த மக்களின் வாழ்க்கையை வேறுபாடின்றிக் காட்டும் கருத்துகளை நான் வடமொழியில் காண இயலவில்லை .

முதலமைச்சர் கலைஞர், தமிழ்ச் சங்க இலக்கியம் தமிழில் சிறந்த இலக்கியம் மட்டுமன்று, அது தமிழ்ச் சமுதாயம் ஓங்கிய நிலையில் வளர உதவும் ஒன்று என்பதை உணர்த்தியும் உள்ளார் .

தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளில் சங்ககாலம் போல் அல்லாமல் பல விதங்களில் மாறுபட்டுள்ளது.

கலைஞரின் படைப்புகளில் புரட்சிக்கருத்துகளை மிகவும் காண்கிறோம்.

சமூகத்தில் புரட்சி வேண்டும், மனிதர்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும். அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற பல கருத்துகளைக் கலைஞர் அவரது இலக்கியப் படைப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெரியாருடைய பகுத்தறிவு, இன உயர்வு , தாழ்வை ஒழித்து நிகர்நிலையாக்கும் கருத்துகளில் ஈடுபாடு கொண்டு வளர்ந்தவர் கலைஞர்.

மக்க்களுக்குள் மக்கள் வேறுபாடு காட்டும் முறையில் நடத்தும் போக்கு , மற்றச் சமூக வேறுபாடுகள் மறைய வேண்டுமானால், சங்க கால வாழ்வு போன்ற சமத்துவ வாழ்வு அனைவருக்கும் மலர வேண்டும் என்ற கருத்தைக் கலைஞர் தம் இலக்கியப் படைப்புகளில் எங்கும் அறிவிக்கின்றார்.

ஏனெனில் சங்கப் பாடல்களில் புலவர்கள் மக்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துப் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.

சங்கப் பாடல்களின் பெருமையும், மேன்மையும் அது.

இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் நாம் இன்று சங்கப் பாடல்களைப் படிக்கும்போது, அவை நமக்குத் தரும் உணர்ச்சிகளை எளிதில் விளக்க இயலாது.

அத்தனை ஆற்றல் அவற்றுக்கு. காதல், வீரம், ஈகை, மனிதர்கள் மேல் நேயம் ,அன்பு , அறிவுரை இவை அனைத்தையும் பற்றிப் பாடப்பட்ட அக்காலப் பாடல்கள் இன்றும் சமூகத்தில் எந்த நிலைமைக்கும் ஏற்க வேண்டிய கருத்துகளுடன் அமைந்துள்ளன.

இவற்றைப் படித்து, உணர்ந்து தோய்ந்தவர் நம் கலைஞர்.

சங்க காலச் சமூகத்தை அவர் தம் பாடல்களில், படைப்புகளில் காட்ட விரும்புகிறார்.

ஏனெனில், சங்க காலச் சமூகம் சமத்துவ சமூகம்.சங்கப் பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவாகவே உள்ளன.

இதை உணர்ந்த கலைஞர் வடமொழிச் சொற்கள் அதிகம் இல்லாத பாடல்களை, கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவர் பயன்படுத்தும் சொற்கள் சங்க காலச் சொற்களாகவே இருந்தாலும், அவர் தரும் கருத்துகள் தற்கால நிலையையே பளிங்கு போல விளக்குவனவாகும்.

கடல் போன்ற சங்க இலக்கியத்தில், நீதிநூல்களில், அவை தரும் வரலாற்றில், பண்பாட்டில் இருந்த ஆழ்ந்த அறிவுத் தெளிவு தான் கலைஞரின் அருமையான படைப்புகளுக்குக் காரணம்.

கலைஞர் படைப்புகளைப் படிக்கும்போது தமிழ் இலக்கியத்தின் கருத்துகளை இவரைப் போல் விளக்கியவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அத்தனைச் சிறப்பு கலைஞர் படைப்புகளுக்கு அமைந்துள்ளன .

கலைஞர் புதினம், கட்டுரைகள், கவிதைகள் ,நாடகங்கள் , திரைக்கதைகள், சிறுகதைகள், வரலாற்று நெடுங்கதைகள் , அறிஞர்கள் கூறும் கருத்துகள் எனப் பலவிதங்களில் இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார்.

தமிழர்களிடம் அவர்களின் பழம்பெருமையைச் சிறந்த முறையில் உணர்த்தியிருப்பவர் கலைஞர்.

தொல்காப்பிய இலக்கணத்தைப் படிப்பது மிகக்கடுமையான ஒரு முயற்சி. அதில் ஒன்று அல்லது இரண்டு கருத்துகளை அறிவதற்கு இரண்டு அல்லது மூன்று திங்கள் கூடத் தேவைப்படலாம்.

ஆனால் கலைஞர் தொல்காப்பியத்தை மிக எளிதான முறையில் இனிமையான விளக்கங்களுடன் எழுதியுள்ளார் .

இது ஒரு படைப்பு மட்டுமே மிகவும் உயர்ந்த பெருமையை அவருக்கு அளிக்கும்.

இது மட்டுமன்று, இது போன்ற பெரும் படைப்புகளையும் அவர் வழங்கியுள்ளார் .

நாம் எவ்வாறு கலைஞரது உயர்ந்த மேன்மையை, பெருமையை ஒரு சில வரிகளில் முழுமையாகக் கூற இயலும் ?

கலைஞர் இலக்கியத்திலும், அரசியலிலும் ஆழ்ந்த அறிவுடையவர்.

வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி, தமிழர் வாழ்வின் உயர்விற்காகப் பாடுபட்டுள்ளார்.

தமிழர் எவ்வாறு வாழ வேண்டும். தமிழ் மொழியை எவ்வாறு போற்ற வேண்டும். தமிழில் எவ்வாறு இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் அவர் ஒரு பெரும் சிகரம் என்றால், அது அவரைச் சிறிதே புகழ்வதாகும்.

அவரது பெருமையை, இலக்கிய அறிவை, அரசியல் திறமையை இச்சிறு கட்டுரையால் விளக்க இயலாது.

அவருக்குச் சங்க இலக்கியத்தில் இருக்கின்ற ஆழ்ந்த அறிவை, ஈடுபாட்டை அவரது சிறந்த படைப்புகள் நமக்குக் காட்டுகின்றன.

அது மட்டுமன்று, சங்ககாலம் போன்ற வேறுபாடற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் கருத்தை அவர் இலக்கியங்களில் காண்கிறோம்.

அனைவரும் ஒரே நிலையில், மேன்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் அவரது செயல் ,சிந்தனை ,கருத்து.

அவர் போன்று எழுதும் அறிஞர்கள் அனைவரும் தமிழ் இலக்கியப் பெருமையைப் பற்றி எழுதுவது மட்டுமன்று, அவ்விலக்கியங்கள் படைத்த சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற உணர்வைக் கலைஞர் படைப்புக்களிலிருந்து பெற்று உயர வேண்டும் .

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

About the author

Dr.Avvai Arul Natarajan

Proud Son of Dr. Avvai Natarajan
Profession: Director, Translation, Govt of TamilNadu, Tamil Nadu

Education:
MA, M.Phil
Ph.D.- modern Indian languages department University of Delhi, India.

Books Authored
1. Influence of foreign words in Tamil language
2. Asian Renaissance (Tamil translation)

Leave a Comment