Tamil Language

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14

Written by Dr. Avvai N Arulஅன்றே துளிர்த்திருந்த அறிவியல் சிந்தனை
தொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைமைகள், இன்றும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு, ஒரு சில, புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் இன்றைய முடிவுகளுக்கும் ஒத்து வர இயலாத நிலையுடையதாயினும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்ளும்போது, அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே – 1
இரண்டறி வதுவே அதனொடு நாவே – 2
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே – 3
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே – 4
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே – 5
ஆறறி வதுவே அவற்றொடு மனனே – 6

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
( பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா : 27 )
இதன் பொருள் விளக்கம் :
ஓரறிவுள்ள உயிர் உடம்பினால் அறியக் கூடியது.
ஈரறிவுள்ள உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் அறியக் கூடியது.
மூவறிவுயிராவது உடம்பினால் – வாயினால் – மூக்கினால் என மூன்றினாலும் அறியக் கூடியது.
நாலறிவுயிராவது உடம்பு, வாய், மூக்கு, கண் ஆகியவற்றால் அறியக்கூடியது.
ஐயறிவு உயிர் என்பது உடம்பு, வாய், மூக்கு, கண், செவி ஆகியவற்றால் அறியக் கூடியது.
இவையேயன்றி ஆறாவதாக மனத்தினாலே அறியக் கூடியதே ஆறறிவு எனப்படும்.
இவ்வாறு உயிர்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமன்றி, ஓரறிவு முதல் ஆறு அறிவு வரை பெற்றுள்ள உயிரினங்கள் எவை எவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகிற பாங்கினை மரபியல் உணர்த்தும்போது எந்த அளவுக்கு மிகப் பழங்காலத்திலேயே தொடக்க அறிவியல் அரும்பிய அடிப்படையில் வாழ்க்கை இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது என்ற மலைப்பு ஏற்படத்தான் செய்கிறது.
உலகில் வாழும் எல்லாவுயிர்களையும் அவற்றின் உடலில் அமைந்துள்ள ஐம்பொறிகளையும் உய்த்துணரும் உட்கருவியாகிய மனத்தினையும் கொண்டு அவ்வுயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவீறாகப் படிப்படியே அறிவினாற் சிறந்து விளங்குந் திறத்தினை நமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே நுண்ணுணர்வாளர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர்.
உயிர்கள் தாம் பெற்றுள்ள மெய், வாய், கண், மூக்கு ,செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகவும் அகக்கருவியாகிய மனத்தின் வாயிலாகவும் முறையே
ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி என்னும் ஐம்புலவுணர்வுகளையும் உய்த்துணர்வினையும் பெற்று அறிவினால் வளர்ச்சி பெற்றுள்ள திறத்தை நுனித்துணர்ந்து அவற்றை அறுவகையுயிர்களாகப் பகுத்துரைக்கும் இவ்வுயிர்ப் பாகுபாடு பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாக உள்ளது .
புல்லும், மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

( பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா : 28 )
எனும் நூற்பா, புல்லும் மரமும் எனும் இருவகைத் தாவரங்களும் உடம்பினால் அறிந்து கொள்ளக்கூடிய ஓரறிவுடைய உயிர்களாகும் என்பதைக் குறிப்பிடுகிறது.
“பிறவும்” என இந்த இரண்டிலும் அல்லாத பிற உயிர்கள் என்றும் உணர்த்தப்படுகிறது.
அவற்றுக்கும் உடலால் அறிந்து கொள்ளக் கூடிய ஓரறிவுதான்.
தாவரங்கள் பற்றியும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர் பெற்றிருந்த தெளிவைக் காட்டுவது தொல்காப்பியம் என்பதற்கு இதைவிடச் சான்று வேறு எதுவும் தேவையா ?
உடம்பால் உணர்ந்து கொள்ளக்கூடிய புழுக்கள், புற்கள், மரங்கள், கொடிகள், செடிகள் எனப்படும் ஓரறிவுடைய பட்டியலுக்கு அடுத்து;
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா : 29)
சங்கு, நத்தை, கிளிஞ்சல் போன்றவையும் ஈரறிவு உயிர்களாம். தாக்கப்படும்போது அறியும் உணர்வும், இரை கொள்ளுவதால் வாயுணர்வுமென இரு அறிவு கூறப்படும்.
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா : 30)
ஈசல், எறும்பு, கறையான் இவற்றுக்கும் இவற்றையொத்த பிற உயிர்க்கும் மூவறிவு உடலால், வாயால், மூக்கினால் அறியக் கூடிய உயிரினங்கள் இவை.
நண்டும் தும்பியும் நான்கறிவுடையவை எனவும், விலங்குகளும், பறவைகளும் ஐந்தறிவுடையவை எனவும் மரபியல் விளக்குகிறது.
மக்கள் ஆறறிவுடையோராவர் – ஆறில் ஒன்றிரண்டு குறைவதற்கும், நிலையாக இருப்பதற்கும், இந்த இலக்கணம் பொறுப்பன்று !
இவ்வாறு தொல்காப்பியப் பூங்காவில் கலைஞர் வரைந்த திறம் புலவருலகுக்கு வியப்பைத் தருவதாகும் .
சொல்லதிகாரத்தில் உயர்திணைக்குரிய ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாட்டினைக் கூறிய தொல்காப்பியர் மரபியலில் அஃறிணைக்குரிய இளமைப்பெயர், ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர் பற்றிய சொல் மரபுகளை பொருண்மை அடிப்படையில் உணர்த்தியுள்ளார்.
உணர்வின் அடிப்படையில் பல்வகை உயிர்களை ஆறுவகையாகப் பகுத்துக் கூறும் தமிழ் மரபும் கூறப்பெறுதலாலும் மரபியல் எனப் பெயர் பெற்றது .
தமிழகத்துச் சமணர்களாகிய உமா சுவாமி ( கி.பி.50 ), குந்தகுந்தர் ( கி.பி. 50 ) உள்ளிட்டோர் உயிர்வகைப் பாகுபாடு பற்றி தமிழகத்தில் வழங்கிய கருத்தினைத் தம் பிராகிருத நூல்களின் வழி மற்றையோர்க்கு எடுத்துக் கூறியுள்ளனர் என்று அறிஞர் சோ ந கந்தசாமி குறிப்பிட்டுள்ளார் .
தொல்காப்பியம் தோன்றிய 1500 ஆண்டுகட்குப் பின்னரே உரையாசிரியர்கள் விளக்கம் காண முற்பட்டனர் . .
தொல்காப்பியர் குறிக்கும் அஃறினைப் பொருள்களின் அறிதிறன் மாட்சி உரையாசிரியர்க்குக் கலக்கம் தருவது இயல்பாகும் .
சான்றாக நண்டுக்கு மூக்குண்டோ என்று கேட்டு ஆசிரியர் கூறலான் உண்டென்க என்று அமைதி காண்கின்றனர் .
அறிவியல் துளிர்த்த நிலையில் ஆய்வு நுட்பம் மேலும் சிறப்படைவதற்கு வாய்ப்பின்றிப் போனது நமக்கு வருத்தம் தருவதாகும் .
இன்றும் மனம் ,மூளை இரண்டையும் வேறு பிரித்துக் காண்பதில் அறிவியலாளர்கள் மருள்கின்றனர் .
செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ….

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment