Spiritual

நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 001

சிந்தையால் விந்தை செய்த
அந்தண அடியார் பூசலார் .

மனமது சுத்தமானால் மந்திரம் கூட ஜபிக்க வேண்டாம். மனத்தால் இறையை நினைத்தாலே இனங்கி வந்து அருள்புரிந்து ஆட்கொள்வான் என உலகிற்கு உணர்த்திய நாயனார் அவர்களின் வரலாற்றினை சிந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பிற்கு முதலில் இறைவனை நெஞ்சார துதிக்கின்றேன்.

மண்ணுலகத்திலே எக்காலத்திலும் நல்ல ஒழுக்கம் விளங்கும் பெருமையுடைய தொண்டை மண்டலத்திலே,
நான்கு வேதங்களும் விளங்கும் பழைய ஊரிலே
பூசலார் அந்தணர் குலத்திலே அவதரித்து தம் கொண்ட கொள்கையில்  நிலையாக நின்ற ஊர் திருநின்றவூர்.

சித்தத்தில் வரும் உணர்வுகளெல்லாம் சிவ பெருமானின் திருவடியைச் சேரும்படி நெறி தவறாது வளர்ந்து அன்பும் வளர்ந்தோங்க  உண்மையான மெய்பொருளை அடைவதற்கு ஏதுவான வேதம் உள்ளிட்ட கலைகளை கற்றவர்.

சிவபெருமானுக்கும்,அவரது அடியார்களுக்கும் பணிகளைச் செய்வதே நல்லது என கருதி  பொருளைத்தேடித் தந்து, கோவில் அமைப்பதற்கு பெருஞ்செல்வம்  தம்மிடம்  இல்லாத நிலையிலும், இறைவன் மகிழ்ந்து எழுந்தருள கோயிலைக்கட்டும் செயலை தன் உள்ளத்தில் கொண்டார்.

எங்கு தேடியும் பொருள் கிட்டாமையால், இனி என்ன செய்வேன்? என வருந்தி, நினைவால் கோயில் எழுப்பிடத் துணிந்து, செல்வங்களையெல்லாம் உள்ளத்தால் சேர்த்துக் கொண்டார்.

கோயில்  கட்டவதற்குறிய பொருள்களையும், தச்சர்களையும்,மனத்தில் தேடிக் கொண்டு, நல்ல நாள் குறித்து, ஆகம விதிப்படி அத்திவாரம் எடுத்து, அன்பின் மிகுதியால் இரவும் பகலும் உறங்காது கோயில் எடுக்கலானார்.

அடிநிலை வரி முதல்
உபான வரி வரை எல்லாவற்றையும்,
ஓவிய வேலைப்பாடுகள் மனத்தினாலே செய்து, தூபியைப் பொருத்தி,சுண்ணச் சாந்து பூசி, சிற்ப இலச்சி வகைகளைச் செய்து,மதில்கள் எடுத்து, தீர்த்தங் கிணறு தடாகமும் அமைத்து,
இறைவனை தாபிக்கும் நாள் நெருங்கியபோது

காடவர் பெருமான் பல்லவ மன்னன் காஞ்சி நகரத்திலே கற்கோயில் எடுத்து இறைவனை தாபிக்க நியமித்த நாளுக்கு முதல் நாள், அவனது கனவில் தோன்றி,

பூசல் எனும் அன்பன், திருநின்றவூரிலே நீண்ட நாட்களாக எண்ணி எண்ணி செய்த கோயிலில் நாம் புகப்போகிறேன், எனவே உனது கோயிலின் செய்கையை நாளைக் கழித்து வைத்துக்கொள்க என்ற இறைவன்,அன்பரின் கோயிலைக் கண்டருள எண்ணிச் சென்றார்.

தொண்டரான பூசலாரை இவ்வுலகத்து மக்கள் அறியச் செய்யும் பொருட்டு சிவ பெருமானே இங்கனம் அருளிச் செய்தார் என்று உறக்கம் கலைந்த மன்னர் அந்த திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்க வேண்டும், என்ற ஆவலில் திருநின்றவூரை அடைந்தான்.

மன்னர் திருநின்றவூரை அடைந்து, பூசலார் என்ற அடியார் கட்டிய கோயில் எங்குள்ளது ?  என அங்கியிருந்தவர்களிடம் கேட்க,
நீங்கள் கூறிய பூசலார் கோயில் ஏதும் கட்டியதில்லை என்றுரைத்தனர்.

எல்லா அந்தணர்களையும் அழைத்த மன்னர், குற்றமில்லா பூசலார் யார் ? என்று வினவ,  கூடியிருந்த மறையவர்களெல்லாம், அவர் குற்றமற்ற அந்தணர் என கூறினர்.

தாமே சென்று அந்த இறையடிவரைக் காண்பதே சிறந்தது என நினைத்த மன்னன் பூசலாரை அடைந்தான்.

அவரை வணங்கி, இவ்விடத்து எல்லாரும் போற்றும்படியாக எடுத்த கோயில் எது ? தேவர் பெருமானை இன்று தாபித்தருளும் நாள் அறிந்து உங்களை கண்டு திருவடி வணங்கவே நான் வந்தேன் எனக் கூறினார்.

மருட்சியடைந்த பூசலாரும், என்னையும் ஒரு பொருட்டாக கொண்டு எம் பெருமான். அருளிச்செய்தாரானால்,
நிதி கிடைக்காமையால் உள்ளத்தினால் முயன்று நினைந்து நினைந்து செய்த கோயில் இதுவாகும் என சிந்தையில் செய்த விந்தையை எடுத்துரைத்தார்.

பூசலார் கூறக் கேட்ட மன்னன், மணமாலை கீழே படியும்படி வாழ்ந்த வணங்கி,முரசுக்கள் ஒலிக்க படைகளுடன்  திரும்பினான்.

பூசலாரும், உள்ளத்தில் அமைத்த ஆலயத்தில், சிவபெருமானை நல்ல நாளில் தாபித்து பூசைகளை பல நாட்கள் விரும்பிச்செய்து  பொன்னம்பவான்னின் திருவடியைச் சேர்ந்தார்.

சிவா,  திருச்சிற்றம்பலம்..

About the author

Ayyasami Balasubramanian

Leave a Comment