Spiritual

பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி

Written by Mannai RVS

இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவி யென்று பலராலும் ஏசப்பட்டேன் ” என்று நேர்பட உள்ளத்துணிவோடு திருமதி. செல்லம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் வாசித்தேன். இப்போது பார் புகழும் பாரதியார் அப்பொழுது வாழ்ந்த நிஜக் கதை. பல இடங்களில் வாசிக்கும் எனக்கு கண்ணீர் வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக இருந்த பாரதியார் தான் எழுதியபடியே வாழ்ந்திருக்கிறார்; வாழ்ந்ததை எழுதியிருக்கிறார் என்பது திருமதி. செல்லம்மாவின் வார்த்தைகளில் தெரிகிறது.
பாரதியாருக்கு என்னைப் போலவே தோசையும் காப்பியும் பிடித்திருந்திருக்கிறது. தோசைப் பிரியர்களெல்லாம் பாரதியாடா? என்று எக்கி என் சட்டையைக் கொத்தாகப் பிடிக்காதீர்கள். இன்னொரு ஒப்பும் இருக்கிறது. தோசையில் தயிரைப் பெய்து சாப்பிடுவார் என்கிறார் செல்லம்மா பாரதி. கடைசி தோசைக்கு தயிரில்லாமல் பந்தியை விட்டு எழும் பழக்கம் எனக்கும் இல்லை.
கல்யாணம் செய்துகொண்ட போது பாரதியின் செயல்….

விவாகத்தின் நாலாம் நாள் , ஊர்வலம் முடிந்து , பந்தலில் ஊஞ்சல் நடக்கிறது . ஓர் ஆசு கவி இயற்றினார் . அதை இனிய ராகத்தில் பாடி , பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்று செய்தார் . கல்யாண விமரிசையைப் புகழ்ந்து , அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும் , என் தகப்பனார் கல்யாணத்திற்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து , வித்துவான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது .

பாஞ்சாலி சபதம் இயற்றுவதற்கு காரணமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி திருமதி. செல்லம்மாள் பாரதி….
அந்த நாளில் கீர்த்தி பெற்ற நாடகக் கம்பெனியான ‘ ‘ கலியாணராமன் செட் ‘ ‘ என்ற கம்பெனி யில் நடந்த சில நாடகங்களுக்குப் பாரதியாரும் , சர்மாவும் போவதுண்டு . முக்கியமாகப் பாரதியாரின் மனத்தைக் கவர்ந்தது பாரதத்தில் “ துரோபதை துகிலுரிதல் ” என்ற நாடகம் . அன்று துரோபதை வேடந்தரித்தவர் கல்யாணராமன் . அவரது சாமர்த்தியமும் , சாதுர்யமும் பாரதியார் மனத்தைக் கவர்ந்தன . கெளரவர்களின் சபையில் வீற்றிருந்த மகான்களான பீஷ்மர் , துரோணர் முதலியோரை , பதில் சொல்ல வகையறியாமல் குனிந்து விழிக்கும்படி கேள்விகேட்ட பாஞ்சாலியை மனத்திற்குள் மிகவும் வியந்தார் . கேவலமான உடன்பாடு , வழக்கம் என்பதற்காக , ஞானத்தில் மிகுந்த யுதிஷ்டிரர் கூடத் தமது உயிர்த் தேவியைக் கீழ்மக்கட்கு அடிமையாக்கியதைக் கண்டு , அவர் மனம் நோவுற்றது . அண்ணன் தாங்க முடியாத அளவுக்குத் தப்பிதம் செய்துங் கூடச் சகோதரர்கள் அவனுக்கு மரியாதையாக அடங்கி வணங்கியது அவரது மனத்தை நெகிழச் செய்தது . பின்னால் , உலகத்தார் வியக் கும் வண்ணம் அவர் இயற்றிய பாஞ்சாலி சபதத்திற்குச் சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியே காரணமாயிருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் சில வியாசங்கள் எழுதினாரம். ஷெல்லியின் மீதிருந்த காதல்! பாண்டிச்சேரிக்கு அருகிலிருந்த கிராமத்து சிறுவர்களுக்கு படிப்புச் சொல்லிக்கொடுக்க தனது நண்பர்களை பாரதியார் அனுப்புவார் என்ற செய்தி எனக்கு புதிது. கையில் தம்படி இல்லாத காலத்திலும் மனநிறைவோடு வாழ்க்கை நடத்தினோம் என்று திருமதி. செல்லம்மாள் எழுதியிருக்கிறார்.
சில சமயம் அரிசி இராது . பாரதியார் மாடியில் பத்துப் பேர்கள் சிஷ்யர்களோடு , ‘ ‘ பூணூல் வேண்டுமா ? வேண்டமா ? ‘ ‘ என்று வாதம் செய்து கொண்டிருப்பார் . ‘ யாகம் ‘ செய்யும் கருத்து என்ன என்ற சர்ச்சை பலமாக நடக்கும்.
அடிக்கடி மௌன விரதம் இருப்பாராம் பாரதி. ஒரு நாள் இரண்டு நாளில்லை… பதினைந்து இருபது நாள்கள் தொடர்ந்து மௌன விரதம் இருப்பார்.. ஆனால் பாட்டு மட்டும் பாடுவாராம். மித்த லௌகீக சம்பாஷணைகள் எழுத்து மூலம் நடக்குமாம். கடையத்தில் இருக்கும்போது நடந்த ஒரு சம்பவம்.

ஒருவனுக்குச் சாமி ஆவேசம் வந்து பாடும் பாட்டாகிய “ பாக்கும் வச்சான் , பழமும் வச்சான் , வெத்திலை வச்சான் . போயிலை வச்சான் , – ஒண்ணு வைக்க மறந்திட்டான் ; சுண்ணாம்பில்லே , சுண்ணாம்பில்லே ‘ ‘ என்ற பாட்டைக் கேட்டதும் , பாரதி ‘ கொல்’லென்று சிரித்தார் . அருகிலிருந்தவர்கள் , ” ஏன் சிரிக்கிறீர் ? ‘ ‘ என்றார்கள் . “ இந்தப் பாட்டு நமது நாட்டு மக்களுக்கும் ஒருவாறு பொருந்தும் ‘ ‘ என்றார் பாரதி . ” எப்படி ? ” என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர் . ‘ ‘ தமிழ் மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான் , பலமும் வச்சான் , நிகரில்லாத செல்வம் வச்சான் . – ஒண்ணு வைக்க மறந்திட்டான் ; புத்தியில்லே , புத்தி யில்லே ‘ ‘ என்றார் . நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சமூகத்தின் மீது பாரதியாருக்கு இருந்த எள்ளலும் கோபமும் இதில் வெடிக்கிறது. பாரதியார் தான் பயின்றதை அனுபவத்தில் கற்றுக்கொண்டதை அப்படியே கடைபிடிக்க ஆரம்பித்த போது அவரைப் பைத்தியம் என்று ஊர் பழிக்க ஆரம்பித்தது. இதை திருமதி. செல்லம்மாள் எழுதுகிறார்..
நமது ஜனங்களுக்குக் காதல் , வேதாந்தம் , எல்லாம் புத்தகத்தில் படிப்பதோடு சரி . காளிதாசன் சாகுந்தலத்தை அனுபவிப்பார்கள் ; புத்தபிரானது அன்பு உபதேசத்தையும் ரசிப்பார்கள் ; அர்ச்சுனனது வீரத்தை யும் , கர்ணன் கொடையையும் , தருமரின் சத்தியத்தையும் புராணத்தில் வாசித்துப் புகழ்வதோடு சரி . எவனாவது ஒரு மனிதன் தற்சமயம் அதே தருமத்தை நடத்திக் காண்பித்தால் , அவனைப் பைத்தியமென்றுதான் மதிப்பார்கள்.
பாரதியார் கவிதை எழுதியதைப் பற்றிப் பேசும் திருமதி. செல்லம்மா பாரதி….
பாரதியார் அறியாத கலை பணமுண்டாக்கும் கலை . என் கணவர் , வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை . அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெற வில்லை . ஆர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுத மாட்டார் . இரவோ பகலோ , வீட்டிலோ வெளியிலோ , கடற்கரையிலோ , அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

காலத்தினால் அடித்துச்செல்லமுடியாத அமரத்துவமான கவிதைகளை எழுதிய மகாகவி வாழ்ந்த போது பணக்கஷ்டத்துடன் குடும்பம் நடத்தவேண்டியிருந்தது. பகைவனுக்கருள்வாய் பாட்டு உருவான சம்பவம் படிப்பவர் நெஞ்சத்தை உலுக்கும். ஆனால் அவருடைய ஞானத்தினால் மனக்கஷ்டம் அடையாமல் எப்போதும் தமிழன்னையின் மடியில் சுகித்திருந்தார் என்பது திருமதி. செல்லம்மாள் பாரதியார் அவர்களின் எழுத்துக்களில் நாம் புரிந்துகொள்கிறோம்.
பாரதியைப் போற்றும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம்.
#பாரதியார்_சரித்திரம்
#செல்லம்மாள்_பாரதி
#கிண்டில்

About the author

Mannai RVS

Leave a Comment