Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 50

Written by Dr. Avvai N Arul

“சாதித்து வெல்பவர் சாந்தகுமார்”

1974-ஆம் ஆண்டு முதல் 1992 வரையில் தலைமைச் செயலகத்தில் எந்தையார் செய்தித் துறையின் துணை இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர்திரு அரசு செயலாளராக அமர்ந்திருந்த வரையிலும், தமிழன்பர்களுக்கும், புலவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் இளைப்பாறும் குளிர்நிழல் தென்றலாக, மன்றமாக அவரின் அலுவலகத்தைப் போற்றிப் பாடினார்கள்.
என் பாட்டனார் உரைவேந்தரின் நண்பர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் எந்தையாரை வந்து அந்நாள்களில் தலைமைச் செயலகத்திலேயே சந்திப்பது என்பது பெரும்பேறாகக் கருதினார்கள்.
அவ்வண்ணம் மதுரையில் காந்தி நகரில் இருந்த என் பாட்டனாரின் அடுத்த வீட்டு நண்பர் பெரியவர் கரையாண்டி (தமிழ்நாடு அரிசன சங்கத் தலைவர்) தன் தொண்டர்களையும், நண்பர்களையும் அப்பாவிடம் அறிமுகம் செய்வது வாடிக்கையாகும்.
1982-ஆம் ஆண்டில், அண்ணா நகர் இல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர்தான், திரு. சாந்தகுமார் ஆவார்.
அந்நாட்களில் மதுரையில் மீனாட்சி நகைக்கடை உரிமையாளராகவும் திகழ்ந்தவர்.
அவருடைய உயரிய அன்பிலும், குடும்பப் பரிவிலும், நாங்களும் ஆட்பட்டோம்.
வாரந் தவறாமல் மதுரையிலிருந்து சென்னைக்கு வரும்பொழுதே மதுரையில் புகழ்பெற்ற சுமங்கலி இனிப்பகத்திலிருந்து இனிப்பு, கார வகைகளுடன் முகம் மலர திருநீற்றுக் குங்குமம் பூண்டு முகப்பொலிவுடன் விடியற்காலை ஏழு மணியளவில் வருவது வாடிக்கையாகும். பெற்றோர்கள் இருவரும் அவரைப் பாராட்டிய வண்ணமே இருந்தார்கள்.
பள்ளி நாட்களில் என்னையும் என் உடன் பிறந்தவர்களையும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது அவரின் வழக்கமாகும்.
ஒருமுறையும் திரையரங்கத்தில் விற்கப்படும் (ரூ.1.10, ரூ2.90, ரூ.4.50) மதிப்பீட்டிலான திரைச்சீட்டுகளைப் பெற முடியாமல் இருப்போம். காரணம் அத்திரைப்படங்களெல்லாம் கமல், ரஜினி நடித்த முதல் நாள் முதல் காட்சிகளாகும்.
எப்பொழுதும் அதற்கு மேல் பணம் செலுத்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
அமைந்தகரையிலுள்ள இலட்சுமி திரையரங்கம், முரளிகிருஷ்ணா திரையரங்கம், புரசையிலுள்ள அபிராமி, அண்ணாசாலையிலுள்ள அலங்கார் மற்றும் தேவி குழுமத் திரையரங்கம் செல்வது குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.
திரைப்படம் முடித்து மும்மீன் அல்லது ஐமீன் உணவகங்களில் உண்பதும் அவர் அறிமுகத்தால் தான் பழகினேன்.
பீடும் மிடுக்குமாக அவர் செய்த செலவுகள் எண்ணற்றவை.
ஒருமுறை சோழா ஐமீன் உணவகத்தில் நீச்சலடிக்க வேண்டும் என்று முனைந்தபொழுது என்னையறியாமல் மூழ்கி விட்டேன். உடனே, அங்கிருந்த பயிற்றுநரிடம் ரூ.100/- வழங்கி தம்பி அருளை மீட்கச் செய்தார்.
அவர் கொண்டுவரும் பலகார வகைகள் எங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் கவிஞர் சௌந்திரா கைலாசம், திரு. கிருஷ்ண பாரதி, இ.ஆ.ப., எழுத்து வேந்தர் கோ. வி. மணிசேகரன், இல்லங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று வழங்குவார்.
மதுரைக்கு அப்பா செல்லும் போதெல்லாம் அவரை வரவேற்று நிற்பவர் சாந்தகுமார் ஆவார். அப்பா மதுரையில் தங்கும் ஆரத்தி உணவகத்தில் தலைமை விருந்தினராக அவரே மிளிர்வார்.
மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் இராஜாஜி மருத்துவமனையின் தலைவராக அம்மா திகழ்ந்தபொழுது உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் பெருமனம் கொண்டவராவார்.
அவரின் ஒருங்கிணைப்பில் அம்மா, நயவுரை நம்பியின் இல்லத்தரசி (நினைவில் வாழும் அனுசூயா அம்மையாருடன்) ஆகியோருடன் நானும் குற்றால அருவிக்குச் சென்று வந்தது பசுமையான நினைவாகும்.
நான் இளங்கலை தமிழிலக்கியம் இறுதியாண்டின் போது, சாந்தகுமாரின் திருமணம் மிகச் சிறப்பாக மதுரையில் நடைபெற்றது (27.03.1988).
எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள் பலர் எனப் புடைசூழ தொடரியின் முழுப்பெட்டியையே பதிவு செய்து அழைத்துச் சென்ற பாங்கு வியப்பில் ஆழ்த்தும்.
எந்தையாரின் நன்முயற்சியில் என் சித்தப்பா சமயப் பொழிவாளர் திருநாவுக்கரசை, மலேயாவுக்கு அழைத்துச் சென்றதும்
அவ்வண்ணமே 1990-ஆம் ஆண்டில் எனக்கு முதன்முறையாக கடவுச்சீட்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அடைக்கலராஜின் நல்லுறவால் சுற்றுலா முகவர் ஜான் தாமஸ் முயற்சியில் கிடைக்கப் பெற்றதும் சாந்த குமாரின் ஒத்துழைப்பால்தான் என்பதை மறக்கவியலாது.
சாந்தகுமார் வளமாக வணிகம் செய்த பொழுது பெற்றோர்கள் அடிக்கடி அவரிடம் வலியுறுத்துவது, ‘செலவு நிறைய செய்ய வேண்டாம், சாந்தகுமார் இது சேமிப்புப் பருவம், பணம் ஈட்டுவதை செல்வமாக காத்து வைக்க வேண்டும்’ என்பதுதான்.
ஆனால் அவைகள் எல்லாம் கரைந்துபோய் மீளமுடியாத கடன்துயரில் ஆட்பட்ட பொழுதும் மனம் கலங்காமல், கடினப்பாதையை உய்த்துக் கடக்கும் காளையாக நிமிர்ந்து துன்பமும் துன்புறும் வண்ணம் மீண்டெழுந்தவர் எங்கள் சாந்தகுமார்.
சென்னை நோக்கி தன் திசையை மாற்றினார். என் இனிய நண்பர் லியோ இரவிக்குமாரும் அவரின் தந்தையார் திரு. பழனிச்சாமியின் நன்மணத்தாலும், அவர்கள் நடத்திவந்த நுங்கம்பாக்கம் சாலையிலுள்ள கடையிலேயே பின்வாயிலில் சாந்தகுமார் திவ்யா நகையகத்தைத் (1991) தொடங்கி வெற்றி பெற்றார்.
எவ்வளவு தான் பொன் வணிகத்தில் உழைத்தாலும் பட்ட காலிலேயே படும் என்பதுபோல மீண்டும் சரிவுற்றார்.
என்ன பணி செய்வது என்று தெரியாமல் மருண்டிருந்த சாந்தகுமார் வாடகை உந்துகளைத் தொழிலாகச் செய்யலாமா என்று நினைத்து, அதிலும் வெற்றி பெற முடியாமல் இருந்தார்.
அப்பொழுது நான் கிளியா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது பல விளம்பரங்களை மக்கள் குரலில் வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது இதழாளர் திரு. சித்தரஞ்சன் அவர்களிடம் சாந்தகுமாரின் திறமையைப் பரிந்துரைத்தேன்.
உடனே, என்னிடம் அவரை அனுப்புங்கள் செதுக்கிக் காட்டுகிறேன் என்று சொன்ன பெருவுள்ளத்தின் பெட்டகம் சித்தரஞ்சன் ஆவார்கள்.
அவருடைய நல்லுள்ளத்தால், மாலை நேர இதழான மக்கள் குரலில் பணிசெய்ய சாந்தகுமாருக்கு 1992-இல் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.
இன்றுவரை வேறெந்தப் பணியிலும் கவனம் சிதறாமல் சிந்தனை ஒருநிலையாக மக்கள் குரல் இதழின் விளம்பர வளர்ச்சியின் தூணாக விளங்குகிறார்.
நகைத் தொழிலே மரபாக வளர்ந்ததால், கல்லூரிக் கல்வியைப் புறக்கணித்து, வாழ்வின் உயரத்துக்குச் சென்று ஆழ்ந்த துயரத்துக்கு ஆட்பட்டு இப்போது அரசியல் தலைவர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர்கள், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் இ.ஆ.ப., இ.கா.ப. உயரதிகாரிகள், மருத்துவ மேதைகள், இதழாளர்கள் மத்தியில் பரிவோடு பழகும் பண்பாளராக பலர் போற்ற சாந்தகுமார் மிளிர்வதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
அப்படிப்பட்ட சாதனைச் செம்மல் சாந்தகுமார், தன்னந்தனியராக அந்நாட்களில் (1988-ஆம் ஆண்டு) புதுதில்லி சென்று மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு ஆர்.வீயைப் பார்த்து தங்கவிலையேற்றத்தால் பொற்கொல்லர் தவிப்பதை எடுத்துக் கூறினார். அந்த வயதில் அந்த அனுபவம் எவருக்கும் வாய்க்காது.
பள்ளம், மேடு, சேறு, சரிவு என்று பாராமல் மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் என்ற திருக்குறளை அவரிடம் அடிக்கடி கூறுவேன். வாழ்க்கை எப்படியெல்லாம் வளைகிறது என்று சொல்வேன். மீண்டும், மீண்டும் நான் சொல்வதை சொல்லச்சொல்வார்.
இன்றுவரை எதுவும் இயலாது என்று சொல்லாமல் முடிந்தவரை முயல்வேன் என்று வாழ்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
சாந்தகுமாரின் திருமகன் பிரவீன் பொறியியல் கல்வி முடித்து அலுவலில் சேரவிருக்கிறார்.
எந்த நேர்முகத்திற்கும் காலையில் வரச்சொல்லி மாலையில் ‘இல்லை’ என்று சொல்வது இயற்கையான நிலை ஆகிவிட்டது என்று அடிக்கடி இப்பொழுது என்னிடம் சொல்வார்.

நான் மீண்டும் சொல்வேன், ‘நல்ல அலுவல் பிரவீனுக்கு அமையும். உங்கள் பொன் மனத்திற்கு நல்லவைகளே நாடி வரும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படைக்கு அடுத்ததாகப் பொருநராற்றுப்படை அறிமுகத்துக்கு முன் ஓர் இனிய தகவலை சேர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடந்த பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் மாநாட்டில் என் பாட்டனார் உரைவேந்தர் திருமுருகாற்றுப்படைப் பற்றி ஆற்றிய உரை ஒரு புதையலாகும்.
அவ்வுரை:-
செந்தமிழ் நாட்டுப் பண்டைய இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தலையாயவை. மிக்க தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்துக்கும் தொன்மை மிக்க பாட்டுக்கள் சங்க இலக்கியங்களுள் உண்டு என்பர்.
அவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என இருதிறப்படும் அவற்றுள் பத்துப்பாட்டின் கண் முதற்கண் நின்று இனிய இலக்கியக்காட்சி வழங்குவது திருமுருகாற்றுப்படை.
முதற்கண் நிற்கும் திருமுருகாற்றுப் படையின் வேறாக, நான்கு ஆற்றுப்படைகள் இப்பத்துப் பாட்டினுள் உள்ளன.
அவை பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படையாகிய மலைபடுகடாம் என்பனவாகும். திருமுருகாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படையீறாக, நான்கனையும் முறையே நிறுத்தி, வேறு பாட்டுகள் ஐந்தனை இடையே நிறுத்தி இறுதியில் கூத்தராற்றுப் படையை வைத்துப் பத்துப் பாட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் உள்ள பாட்டுப் பத்தனுள், செம்பாகம் ஆற்றுப்படையாகவே இருப்பதும், தொடக்கத்தில் நான்கு ஆற்றுப்படைகளை நிறுத்தி, இறுதியிலும் ஆற்றுப்படையே நிற்கத் தொகுத் திருப்பதும் காணுமிடத்து ஆற்றுப் படைபத்து என்று பெயர் கூறுமாறு இஃது அமைந்து இருப்பது புலனாகும்.
சில உரையாசிரியர், இப்பத்துப்பாட்டை, ஆற்றுப்படையென்பதும் இதனால் பொருத்தமாதல் தெளியப்படும்
ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர் பாடு தற்குக் கொண்ட பாட்டுவகைகளுள் ஒன்று. ஆற்றுப்படையாவது ஆற்றின் கட்படுப்பது;
ஆறு என்பது வழி; படுப்பது செலுத்துவது. அஃதாவது, ஒருவர்க்குச் செல்லவேண்டும் வழி துறைகளைச் சொல்லித் தெரிவித்து அவற்றைப் பின்பற்றிச் செல்க எனச் செலுத்துவது என்பதாம்.
ஆகவே செல்ல வேண்டும் குறிப்பு உடைய ஒருவனுக்குச் சென்று பயின்ற ஒருவன் செல்லுதற்குரிய நெறியைத் தெரிவித்துச் செலுத்துவது ஆற்றுப் படையின் கருத்தாம்.
இக்கருத்தே முடத்தாமக் கண்ணியாரது பொரு நராற்றுப்படையிலும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரது சிறுபாணாற்றுப்படையிலும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரது பெரும்பாணாற்றுப்படையிலும், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கோசிகனாரது கூத்தராற்றுப் படையிலும் அமைந்திருக்கிறது.
ஏனைப் புறத்திலும் பதிற்றுப்பத்திலும் காணப்படும் ஆற்றுப் படைகளும் இக்கருத்தையே குறித்து நிற்கின்றன.
இனி, (ஆசிரியர் தொல்காப்பியனார், “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவு றீஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும்,
என்று ஆற்றுப்படையின் இயல்பைப் பொதுப்படக் கூறினார் பின்வந்த சான்றோர் புரவலன் ஒருவனிடம் சென்று பெரும்பொருள் பரிசிலாகப் பெற்ற பொருநர், பாணர், விறலியர், புலவர் முதலியோருள் ஒருவன் ஏனைப் பரிசிலருள் ஒவ்வொரு திறத்தார்க்குப் புரவலனுடைய நாடு, ஊர், பெயர், பரிசில் முதலியவற்றை எடுத்தோதி அவன்பாற் சென்று தாம் பெற்றவாறே பெறுக எனச் சொல்லி விடுப்ப தென்றும், இவ்வாறு பாடும் பாட்டு ஆயிரம் அடிப் பெருமை உடைய தென்றும் கூறினார்.
இவ்வாறு இயன்றுவரும் ஆற்றுப்படைகள் பலவும், பரிசில் பெற்ற ஒருவன் பெறா தான் ஒருவனுக்குத் தான் பெற்ற பெருவளத்தையும் அதனை நல்கிய தலைவன் பாற் செல்லுதற்குரிய வழி துறைகளையும் எடுத்துச்சொல்லி அங்கே சென்று பெறுமாறு செலுத்துவது கருத்தாக அமைந்துள்ளன.
இது நிற்க. சிலர் ஆற்றுப்படையை வழி காட்டி போல்வதென்று கருதுகின்றனர்.
வழிகாட்டியென்பது ஆற்றுப்படைபோல வழிச்செல்வோனை அவ்வழியையே பின்பற்றிச் சென்று பயன்பெறுமாறு வற்புறுத்தும் நீர்மைய தன்று. ஆசிரியர் தொல்காப்பியனார்
சென்று பயனெ திரச் சொன்னபக்கம்” என்று விளங்கக் கூறுவது ஆற்றுப்படையின் கருத்தா தலைத் தெளிதல் வேண்டும்.
இனி திருமுருகாற்றுப் படையில் வரும் ஆற்றுப்படைப் பகுதி ஏனை ஆற்றுப் படைகளிலும் ஓராற்றால் வேறுபட்டதாகும்.
ஏனைப் பொருநராற்றுப்படை, பாணாற்றுப்படை முதலியவற்றால் சிறப்பிக்கப் பெறும் தலைவர், மக்களிற் சிறந்த முடிவேந்தரும், குறுநிலத் தலைவருமாவர்.
அவர் நல்கிய பெருவளம் உலகியற் செல்வங்களாகும். ஆதலால், அவைகள் ஆற்றுப்படுக்கப்படுவோரால் பெயர் – கூறப்படுகின்றன.
பொருநனை ஆற்றுப்படுப்பது பொருநராற்றுப்படை; பாணனை ஆற்றுப்படுப்பது பாணாற்றுப்படை; கூத்தரை ஆற்றுப்படுப்பது கூத்தராற்றுப்படை; விறலியை ஆற்றுப்படுப்பது விறலியாற்றுப்படை; புலவரை ஆற்றுப்படுப்பது புலவராற்றுப்படை என வருவது காணலாம்.
முருகாற்றுப் படையில் வீடுபேறு கருதிய சான்றோர் ஒருவரை, முருகன் திருவருளால் வீடுபேற்றுக்குரிய திருவடி ஞானம் கைவரப்பெற்ற சீவன் முத்தரொருவர், முருகன்பால் ஆற்றுப்படுக்கின்றார்.
வீடுபேற்றுக்கமைந்த திருவருள் ஞானத்தை நல்குதலில் தலைசிறந்து நிற்கும் குரவன் முருகப்பெருமான் ஆதலால், ஆற்றுப்படைக்கு இடனாகின்ற வகையில் முருகப் பெருமான் திருப்பெயரால், இந்த ஆற்றுப்படை திருமுருகாற்றுப்படை என வழங்குகின்றது.
இவ்வாறு ஏனை ஆற்றுப் படைகளிலும் ஒரு வகையில் வேறுபட விளங்குவது பற்றி முருகாற்றுப்படையென்பது வேறுபொருள் கொள்ளும் வகையில் நிற்கின்றது.
இம்முருகாற்றுப்படை குறவர்கள் முருகனை வழிபடும் இடத்தை “முருகாற்றுப் படுத்த உருகெழு என்று குறிக்கின்றது.
முருகாற்றுப்படுத்த என்பதற்கு நச்சினார்க்கினியர் “பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின” என்று பொருள் கூறுவர்;
“பிள்ளையாரைத் தம் வழிப்படுத்தின” என்பர் பிறர். ஆறு: வழியெனவும், படை, படுப்பதெனவும் பொருள்படுதலின், ஆற்றுப் படையென்பது வழிப்படுப்பது எனப் பொருள்படு மாறும் காணப்படும். படவே, முருகாற்றுப்படை என்பது முருகன் அருள் வழிப்படுவது என்று பொருள் தருமாறும் பெறப்படும். முருகனை வழிபடுவதாவது, முருகன் உறையும் இடமறிந்து சென்று வழிபடுவதென்பதாம்.
வழிபாட்டின்கண் முருகன் திருவுரு நலமும், திருவருள் நலமும், அவன் உறையும் திருப்பதிகளின் நலமும், வழிபடும் திறமும், வழிபாட்டின் இறுதியில் அப்பெருமான் போந்து அருள் வழங்குந் திறமும் நன்கு விளக்கப்படும்.
இச்சிறப்புக் கருதியே, இது சைவத்திருமுறைகளுள் பதினொராந் திருமுறையில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
வளரும்…

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment