Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 49

“பார்த்திபன் கனவும் துணிவும்”

உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அரங்கத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பேசி முடித்து அமர்ந்திருந்தபொழுது, புதுமுகமான நல்லிளைஞர் ஒருவர் என் தோளைத் தட்டி ‘வாருங்கள், ஸ்டெல்லா மாரீசு மகளிர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழாப் போட்டிக்குச் செல்லலாம்’ என்று தன்னுடைய நண்பரின் சீருந்தில் அழைத்துச் சென்றார்.
அறிமுகமே இல்லாத திருமுகம் அவர். நேர்த்தியான உடலமைப்பு, பம்பரம் போல் சுழலும் விழிகள், கற்பூரம் போல் பற்றிக் கொள்ளும் நட்புக் கேண்மை. சிரித்துக் கொண்டே என் பெயர் பார்த்திபன் என்றார்.
நான் உடனே பேராசிரியர் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நான் படித்த வரலாற்றுப் புதினம் என்று சொல்லி மகிழ்ந்தேன்.
அனைத்துக் கல்லூரிப் பலகுரல் போட்டியில் முதற் பரிசினை நண்பர் பார்த்திபன் பெற்றார்.
கல்லூரியில் கூடியிருந்த மாணவ மாணவியர் அவரைச் சூழ்ந்து பாராட்டியதைக் கண்டு நான் பெருமிதம் அடைந்தேன்.
இரண்டாமியாண்டு தமிழிலக்கியம் பயிலும் காலம் தொடங்கி (1986-87) இன்று வரை எங்கள் ஆழ்ந்த நட்பு அளவிடற்கரியது.
அப்பொழுது, அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை இராணுவவியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பல போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றதும் நன்றாக நினைவில் உள்ளது.
நான் நடத்திய குருதிக்கொடை நிகழ்வில் அவருடைய பங்கு பெரிதும் போற்றத்தகுந்தது.காயிதே மில்லத்து மகளிர் கல்லூரி முதல்வர் தொடங்கி நூற்றுக்கணக்கான மாணவியருக்குச் செல்லப் பிள்ளையாக பார்த்திபன் விளங்கினார்.மருத்துவர்களான திருமதி விமலா இராமலிங்கமும், கலையரசியும் – பார்த்திபன் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிரித்துக்கொண்டேயிருப்பார்கள்
கல்லூரி மாணவிகளுக்குக் குருதி அளிப்பு நிகழ்வு நெடுநேரமாகும்.காரணம், உணவு உட்கொள்வதில் ஈடுபாடு குறைவாகவே தான் அக்காலக் கல்லூரி மாணவிகளுக்கு இருந்தது.
நெடுநேரத்தை உடன் தீர்க்கும் வல்லமை பார்த்திபனுக்கு இயல்பாக அமைந்தது.ஈகை தரும் மாணவிகளைப் பார்த்து, ‘என் கண்களைப் பாருங்கள்’ என்று தன்னுடைய விழிகளை உருட்டி மருட்டிக் காட்டுவார்.
குருதி ஈகை தந்த மாணவி ஒருவர் அரை மணி நேரத்தில் இனிப்புகள் பல எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து, என் பெயர் பால கல்யாணி. என் பிறந்த நாள் இன்று என்று சொல்லி இனிப்புகளை வாரி வழங்கினார்.
தொடர்ந்து குருதிக்கொடை நடைபெற்ற இரண்டு நாள்களுக்குள் பால கல்யாணி பார்த்திபனைப் பெரிதும் விரும்பினார்.
ஆனால், பார்த்திபன் எந்த அன்பும் ஆர்வமும் வளர்த்துக் கொண்டவரில்லை. வலையிலும் சிக்காமல், அவருக்கு நல்லுரை சொல்லி, ‘நீ வளர வேண்டிய பெண்’ என்று சொல்லி ஆற்றுப்படுத்தினார். நற்பண்பை வளர்த்தது இளமை!
அத்தகைய பார்த்திபனுடைய பேராசிரியர் பெருந்தகை முனைவர் கே.சி. மனோகரன், மிடுக்கான தோற்றமும், ஆழமான சொற்களும், விழுமிய கருத்துகளைப் போற்றும் பேராசிரியர் ஆவார்.
அவரின் வழிகாட்டுதலின்படி, பார்த்திபன் நடந்திருந்தால் அத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்றிருப்பார்.
ஆனால், அவரும், அக்காலச் சூழலுக்கு ஏற்பப் பெங்களூரில் சட்டம் பயின்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில், அவருடைய இனிய நண்பர்களான வீரமோகன், அரக்கோணம் நிலக்கிழார் இராஜேந்திர பிரசாத், வழக்கறிஞர் வித்யா பாலசுப்பிரமணியம், மேனாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் கே. இராஜாராமின் இளவல் மருத்துவ மாமணி காந்தராஜ், திருமதி சத்திய வாணி முத்துவின் மருமகள் காந்திமதி அறச்செல்வம், மதுரை பி.டி.ஆர். பழனிவேல் இராஜனின் உறவினர் மோகன், அடையாறு சுவரம் மருத்துவமனைத் தலைவர் அரி இரமேஷ் போன்றோர் நண்பர்களாக எனக்கும் அறிமுகமானார்கள்.
பார்த்திபன் பலகுரல் மன்னர் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையில் மின்னும் நட்சத்திரமாக வாய்ப்புக் கிடைக்கப்பெற்று இது நம் தொழிலல்ல என்று விலகி நின்றவர்.
பார்த்திபன் மீது, தனிப்பாசம் காட்டியவர்கள் இயக்குநர் திலகம், டி. இராஜேந்தர், இயக்குநர் இரங்கராஜன் ஆவார்கள்.
இயக்குநர் டி. இராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கிய பொழுது, கட்சிக்கான கொள்கை விளக்கத்தினை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய பொழுது, பார்த்திபன் என்னை அழைத்துச் சென்று, எழுத வைத்துக் காட்டினார். உடனே, டி. இராஜேந்தர் அவர்கள் என்னைப் பார்த்து ‘தமிழிலக்கியம் பயிலும் மாணவனாகிய நீ, வனப்பான ஆங்கிலம் எழுதுகிறாயே’ என்று பாராட்டினார்.
1989-இல் பம்பாய் நிறுவனம் நடத்திய நட்சத்திரப் பெருவிழா நாரத கான சபையில் நடைபெற்ற பொழுது பார்த்திபனின் துணிவால் நடிகை சௌகார் ஜானகியின் பெயர்த்தி நடிகை வைஷ்ணவிக்குப் பதிலாக அவ்விழாவில் என்னைத் தொகுப்புரையாற்ற வைத்தார்.
நிரலில் இல்லாத பொழுதும் பார்த்திபனை பத்து நிமிட இடைவெளியில் பலகுரல் செய்ய வைத்ததும் அரங்கமே அதிர்ந்தது.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் முதல் பல நடிகர் நடிகைகள் அவரைப் பெரிதும் பாராட்டினார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக கலைவிழாப் போட்டிக்கு தலைமை தாங்கிய கல்வி அமைச்சரிடமும், துணை வேந்தரிடமும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதை நன்றியுரையாற்றும்பொழுது என்னைச் சொல்லச் சொல்லி துணிவு தந்தவர் பார்த்திபனேயாவார்.
1989-ஆண்டு, மோரீசில் நடைபெற்ற ஏழாம் உலகத்தமிழ் மாநாட்டிற்குச் செல்லவேண்டுமென்று பார்த்திபனும் நானும் ஏங்கினோம்.
அதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழறிஞர்கள் செல்லும் இடத்திற்கு முதுகலை தமிழிலக்கியம் பயிலும் மாணவன் செல்ல வாய்ப்புக்கிடைப்பதென்பது கானல் நீராகும்.
அப்பொழுது எந்தையார்தான் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக, அவர் தலைமையில் அறிஞர்கள் சென்றனர். ஆனால் அவரிடம் கேட்பதற்கு அச்சமாக இருந்தது.
ஆனால், நண்பன் பார்த்திபன் ஓர் அழகான திட்டம் தீட்டி, அருணா சர்க்கரை ஆலையின் தலைவர் திரு. மருதைப் பிள்ளையவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, இந்திய மோரீசு தமிழ்ப் பண்பாட்டு மையம் என்ற அமைப்பைத் தொடங்கி அவரைத் தலைவராக நியமித்து, அவர் அலுவலகத்தைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு, மடலேட்டிலும் ( Letterhead), முகவரி அட்டையிலும் ( Visiting Card) எங்கள் பெயர்களைக் அச்சிட்டு வழங்கி மகிழ்ந்தார்.
1989 திசம்பர் திங்களில் நடைபெறவிருக்கிறது ஏழாம் உலகத்தமிழ் மாநாடு. செப்டம்பர் திங்களிலேயே சுவர்தாங்குச் சாலையில் உள்ள ( Spurtank Road) உலகப் பல்கலைக் கழக அரங்கத்தில் ( WUS Centre) தொடக்க விழா நடைபெற்றது.
நாடாளுமன்றத் துணைத் தலைவர் திரு. தம்பிதுரை, மோரீசு நாட்டின் கல்வியமைச்சர் திரு. ஆறுமுகம் பரசுராமன், பேராசிரியர் திருமலை செட்டி, கவிஞர் சௌந்திரா கைலாசம், டாக்டர் காந்தராஜ், டாக்டர் கே.சி. மனோகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அவ்விழாவில் டாக்டர் விமலா இராமலிங்கத்தின் மகள் ‘கலைமயில்’ சோபா இராமலிங்கத்தினுடைய நடன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பார்வையாளர்களாக, அறிஞர் பெருமக்கள் பலர் மத்தியில் காயிலே மில்லத் அரசுக் கல்லூரி மாணவிகளும் புடைசூழ வருகை புரிந்தனர்.
தொழிலதிபர் மருதைப் பிள்ளையும், அவருடைய நிறுவனத்தின் மேலாளர் திரு. சோமசுந்தரமும் அடுத்த நாள் இருவரையும் அழைத்துப் பெரிதாகப் பாராட்டினார்கள்.
‘வருங்காலங்களில் நீங்கள் வளருவீர்கள்’ என்று வாழ்த்தினார்கள்.
மோரீசு செல்லும் வாய்ப்பு மட்டும் எங்களுக்குக் கிடைக்கவேயில்லை. எங்கள் இருவருக்கும் முதல் முகவரி அட்டை அளித்த வள்ளல் மருதைப் பிள்ளை என்று அவருடைய பெயரன் கார்த்திக்கிடம் அண்மையில் நான் தெரிவித்தேன்.
மோரீசு நாட்டுக்கு என் தந்தையார் சென்று சேர்ந்த மறுநாள், என் அம்மாவுக்கும் அரசின் இசைவு வந்தது. ‘என் மகன் அருள் செல்லாதபோது எனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம்’ என்ற மறுத்து விட்டார்கள்.
என் தந்தையும் தாயும் பின்னர் ஓய்வு பெற்ற பிறகு, மோரீசு சென்று உரையாற்றி வந்தனர்.
எந்தையாரின் நண்பர் திருமதி சாவித்ரி இராகவேந்திரா என்னை பல தருணங்களிலும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவதைப் போலவே வணிக செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துவார்.
அதற்கு ஒரு வாய்ப்பாக டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள சிற்றரங்கில் நடைபெற்ற பொருட்காட்சியில் பார்த்திபனும் நானும் சிற்றுண்டி மாடம் அமைத்து பெருலாபம் ஈட்டினோம்.
நாள்தோறும் பூவிருந்தவல்லியிலிருந்து அமைந்தகரை வரை பேருந்தில் வந்து, என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்னை முழுதும் வலம் வருவோம்.
பார்த்திபன் சட்டம் பயின்று முடித்த ஓரிரு ஆண்டுகளில் என் அறிமுகத்தால், புகழ்பெற்ற ‘வழக்கியல் திலகம்’ திருமதி நளினி சிதம்பரத்திடம் சட்ட இளையோராகப் பணியாற்றி 1993-இல் ‘கிளியா’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, என்னிடம் வந்து, ‘நாளை நாம் இருவரும், அமெரிக்கத் தூதரக அலுவலகம் செல்கிறோம். அமெரிக்காவிற்கு உடனே விசா எடுக்கிறோம். அமெரிக்கா செல்கிறோம் என்றார்.
அடுத்தநாள் அவர் என்னைப் பார்க்க வரவில்லை. நானும் எதற்கும் தயாராகவில்லை
.பத்து நாள் கழித்து அமெரிக்காவிலிருந்து பார்த்திபன் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். இந்தியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றவிருக்கிறேன் என்று சொன்னார்.
அன்று முதல் அமெரிக்க வானில் சுழலும் சுடராக மிளிர்கிறார்.
அவருடைய துணைவியார் திருமதி கலைச் செல்லம் புகழ்பெற்ற மூப்பியல் மருத்துவராகவும், அவர்களுக்குப் பெண் மக்கள் வெண்ணிலா, வானதி ஆவார்கள்.
வெண்ணிலாவுக்கு, சபையர் திரையரங்கத்திற்கு எதிரிலுள்ள ‘சர்ச் பார்க்’ மகளிர் பள்ளியில் தொடக்க வகுப்பில் நான் அவர் பெற்றோர்கள் வராமலேயே என் பரிந்துரையில் பள்ளியில் சேர்த்தேன்.
மேனாள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பயின்ற பள்ளியில் தன் மகள் படிக்க வேண்டும் என்பது பார்த்திபனின் விருப்பமாகும்.
பார்த்திபனும் அவருடைய நண்பர் டாக்டர் விஜய் பிரபாகரும் (இ.சி. பிரபாகர், இ.ஆ.ப. மகனும் அமெரிக்காவில் பெருந் தகைமையாளராகப் பொதுநலப் பணியில் பணியாற்றுகிறார்) அமெரிக்காவில் சிகாகோவில் உள்ளூர் மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் தமிழக அரசியல் தலைவி பெயரில் தெருவொன்றிற்குப் பெயர் சூட்டிய சிற்பிகளாவார்கள்.
இன்று வெண்ணிலா உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார் என்பது பெருமிதமாகவுள்ளது.
தன்னுடைய தாய், தம்பி, தங்கையையும் அமெரிக்காவிலேயே குடியமர்த்திய பெருமையும் பார்த்திபனைச் சாரும்.
சென்னையில் இன்றும் மைத்துனர் வழக்கறிஞர் சக்திவேல் குடும்பமும், பார்த்திபனின் உடன் பிறந்த தம்பி கிருஷ்ணராஜும் பார்த்திபனுக்கு உற்ற துணையாகத் திகழ்ந்து வருகின்றனர்.
பார்த்திபன் பரிவார்ந்த நண்பர், படித்தவர், பழகியவர்களுக்கு உயிர் கொடுக்கும் பண்பு கொண்டவர். நாமக்கல் கவிஞரின் பெயரன். என்னை அமெரிக்காவிற்க அழைத்துச் செல்ல விடாப் பிடியாய் நின்றார்.
கிளியாவில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பும் சிறப்பும் என்ன பெரிய அமெரிக்கா, எந்த நாட்டுக்கும் எப்போதும் குடியேற என் அதிகாரம் செல்லும் என்ற செருக்கு நிலையில் இருந்தேன்.
பார்த்திபன் கனவும் நினைவும் வெற்றி பெற்றன.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அரசு அமையும் என்று ஆறு மாதத்துக்கு முன்னே கணித்துச் சொன்னவர்.
அன்றாடம் முகநூலில் அவரின் பதிவுகளுக்கு உலகம் காத்திருக்கிறது.
டாக்டர் விஜய் பிரபாகரும், டாக்டர் பார்த்திபனும் அமெரிக்காவில் புகழோடு வாழ்கிறார்கள்.

இருவருக்கும் அரசிலோ, ஊடகத்திலோ தலைமையேற்கும் பொன்னான நாள் காத்திருக்கிறது.

பத்துப்பாட்டில் மனம் பற்றுக:
திருமுருகாற்றுப்படை
தியாகராசர் கல்லூரியில் எந்தையார் இளங்கலைத் தமிழ் வகுப்பில் மலையிலிருந்து விழும் அருவி எப்படி நக்கீரர் சொற்களில் இழுமென் ஓசையோடு அதிர்ந்து விழுவதை உணர்ச்சி ததும்பக் கூறுவார்களாம்.
அந்தக் கல்லருவிக் காட்சியைக் சொல்லருவியாகத் திகழ்ந்த நாவேந்தர் கா. காளிமுத்து மேடைதோறும் தமிழின் மேன்மைக்குச் சான்று இதோ பாருங்கள்.
அருவி விழுகிறது என்று இந்த வரிகளை அடுக்கிச் சொல்வார்.
மேடை இந்த உரையைக் கேட்டுப் பெரிதும் ஆரவாரித்தது.
அந்த இனிய பகுதியை நீங்கள் இப்போது காணலாம்.
பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீ இத் தத்துற்று
நன்பொன் மணி நிறங் கிளரப் பொன்கொழியா’
வாழை முழுமுதல் துமியத் தென்னை
இள நீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய்
அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேண் நின்று
இழுமென இழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே!

மலையுச்சியில் பல இடங்களில் தோன்றும் அருவிகள் கீழ் நோக்கிப் பாய்கையில் காற்றால் அலைப்புண்ணும் பல துகிற்கொடிகளைப் போலக் காணப்படுகின்றன.இவ்வருவிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேரருவியாய் உருவெடுத்துக் கீழ் நோக்கிப் பேரிரைச்சல் இட்டுக்கொண்டு பாய்கின்றன.
அப்பேரருவி தன் போக்கில் சிறு மூங்கிலின் வேரைப் பிளக்கிறது; தேனீக்கள் அமைத்த தேன்கூடுகளைக் கலைக்கிறது;நன்கு முற்றிய ஆசினிப் பலாப்பழங்கள் வெடித்துச் சிதறிய சுளைகளைக் கொண்டு செல்கிறது.
மலையுச்சியில் உள்ள சுரபுன்னையின் நறிய மலர்கள் அவ்வருவி நீரில் உதிர்கின்றன.அருவியின் ஓட்டத்தையும் ஓசையையும் கண்டும் கேட்டும் கருக்குரங்குகளுடன் கரிய முகத்தையுடைய முசுக்கலைகள் நடுங்குகின்றன.அருவி நீர், புகரையணிந்த மத்தகத்தையுடைய பெரிய பெண்யானை குளிரடையும்படி வீசுகிறது;
தன் போக்கில் அகப்பட்ட யானைக்கொம்புகளைத் தன்னுள் அடக்கி, பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி மேலே கொண்டு குதித்து, தத்துதலையுற்றுப் பொடியான பொன்னைத் தெள்ளுகிறது;
வாழையின் பெரிய முதல் துணியும்படியும் தெங்கின் இளநீர்க்குலை உதிரும்படியும் அவ்விரண்டனையும் மோதுகிறது;
மிளகுக்கொடியின் கரிய கொத்துகளைச் சாய்விக்கிறது; மயில்கள், கோழிகள் முதலிய பறவைகளை வெருவி ஓடச்செய்கிறது;ஆண் பன்றியையும் கரடியையும் மலைக்குகைகளில் பதுங்கும் படி செய்கிறது;
கரிய கொம்புகளையுடைய காட்டுப் பசுக்களின் எருதுகளை முழக்கமிடச் செய்கிறது. இங்ஙனம் பேரருவி பாய்கின்ற பெரிய மலையில் பழம் முற்றிய சோலை பல இருக்கின்றன.
வளரும்…

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment