Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41

Written by Dr. Avvai N Arul

“எம்முளும் உளன் ஒரு பொருநன்”

எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),
திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,கிருஷ்ணகிரி என்றால் தாது,ஓசூர் என்றால் கிருஷ்ணன்,மதுரை என்றால் சாந்தகுமார், திருப்பத்தூர் என்றால் திருமதி மணிமொழி,திண்டிவனம் என்றால் டாக்டர் பாலதண்டாயுதம்,
வடலூர் என்றால் செல்வராஜ், கோவை, திருப்பூர், உதகை, கேரளம் முதலிய அனைத்து இடங்களுக்கும் ஆடிட்டர் தமிழ்ச்செம்மல் லோகநாதன்,புதுவை என்றால் வழக்கறிஞர் முருகேசன், ஜெயராம் ஓட்டல் திரு. லட்சுமி நாராயணன், ஆனந்த முதலியார், இந்திப் பேராசிரியர் இராமசாமி,பம்பாய் என்றால் தேவதாஸ்,பூனா என்றால் கிருஷ்ணசாமி, கல்கத்தா என்றால் மு.சீனிவாசன், நக்கீரன்,பெங்களூர் என்றால் நீலகண்டன், மைசூரு என்றால் அரவிந்தன், ஐதராபாத் என்றால் ரெட்டி,
தில்லி என்றால் முனிற்கா இராமகிருஷ்ணன், சுந்தர், இலண்டன் என்றால் ஜோதி, வழக்கறிஞர் சிரி கந்தராஜா, கவிஞர் கருணானந்தராஜா,ஜெர்மனி என்றால் நித்யா,பிரான்ஸ் என்றால் சிவசண்முகம், பாலகிருஷ்ணன், இரவீந்திரன், இலங்கை என்றால் ஞானசம்பந்தன், மலேசியா என்றால் கோயில் நடராஜா, வானொலி பூபாலன், நல்லகுமார்,சிங்கை என்றால் திருமதி இந்திரா கிருஷ்ணன்,மஸ்கட் என்றால் திருமதி சித்ரா நாராயணன்,அமெரிக்கா என்றால் அரிசோனா இராஜகோபாலன் என்று ஊர்தோறும் பல நண்பர்கள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து அழைத்துப் போவார்கள். இவர்களைப்போன்ற பெறற்கரிய நண்பர்களெல்லாம் தமிழ்தானே ஈட்டித்தந்தது என்று பெருமிதமாக நாளொன்று குறையாமல் அவர்கள் நலம் பேசி மகிழ்வார் எங்கள் அப்பா.

எனக்கு அந்தச் சூழலில் பல நண்பர்களுக்குச் சென்னை வந்தால் எங்கள் அண்ணாநகர் இல்லமான ‘தாரகை’ விருந்தகமாக அமையும். அப்பாவும் அம்மாவும் விருந்து வரக்காத்திருந்த நல் விருந்தினராகத் திகழ்ந்தார்கள்.
எனக்குத் தெரிந்து செஞ்சியிலிருந்து திரு அப்பன்ராஜ் அடிகளாரும், அவர் துணைவியார் திருமதி சுமதியும் அவர்களின் குடும்பச் செல்வங்களும் எங்கள் குடும்ப உறவினர்களாகவே திகழ்ந்தார்கள்.
என்னுடைய தாத்தா உரைவேந்தர் அவர்களின் இறுதிக் காலத்தில் அவருக்கு உற்ற துணையாக, ‘வெள்ளை உடைக் கட்டிளங்காளை’ சீரங்கன் என்ற அப்பாவின் நண்பர் உடனிருந்து பணிவிடை ஆற்றியதை நாங்கள் மறக்கவியலோம்.
சென்னையில் அவருடன் ஒருமுறை ‘ஒரு தலைக் காதல்’ திரைப்படம் பார்த்த பொழுது திரைப்படத்தை விட அவர் விம்மி விம்மி அழுத காட்சிதான் எனக்குப் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் தாத்தாவிற்கு பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி விருது வழங்கிய நாள் வரை சீரங்கன் ஒட்டியே இருந்தார். அதற்குப் பிறகு, ஊர் சென்றவர் திரும்பவேயில்லை. என் சிற்றப்பா மருத்துவர்களான மெய்கண்டான், நெடுமாறன் இருவரும் மதுரை, கோவையில் இருந்தபோதும் சீரங்கனைத் தேடியும் காண முடியாது போயிற்று.
எந்தையார் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இலக்கிய உரையாற்றச் சென்றபோது மலேசிய அமைச்சர் தான்ஸ்ரீ பெருந்தகை சாமிவேலு முதல் தென்னாப்பிரிக்கா வணிக வேந்தர் திரு.முதலி வரை பல நண்பர்களைப் பெற்றார்.
மலேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய திரு குலசிங்கத்தின் மகள் சுபத்ரா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் பயில வந்தபோது, தில்லியிலிருந்து அவர் மருத்துவக் கல்வி பயில்வதில்த் தடையின்மைச் சான்று பெறவேண்டிய சூழல் இருந்தது.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான் அவர்களை அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று அந்நாளைய செய்தித்துறையின் துணை இயக்குநர் திரு. அமிர்தலிங்கம் (அப்பாவின் நண்பர்) வாயிலாக அச்சான்றிதழைப் பெற்றுத் திரும்பினோம்.
மலேசியாவைச் சார்ந்த குணா என்ற நடனக்கலைஞர் கலாக்ஷேத்ராவில் பயின்றபோது எங்கள் இல்லத்தில்தான் தங்கியிருந்து பயின்றார். அம்மாவின் முயற்சியால் சைவ உணவை விரும்பிச் சாப்பிடும் பழக்கத்திற்கும் ஆளானார்.
மலேசியாவைச் சார்ந்த ஆனந்தராஜ் என்ற மாணவரும், எங்கள் இல்லத்தில் தங்கிப் பயின்றதையும், சிங்கையிலிருந்து கவிதா தன் பள்ளிப்படிப்பை எங்கள் இல்லத்தில் தங்கிப் பயின்றதையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திருமதி மானசா தன்னுடைய நடன அரங்கேற்றத்திற்காகச் சென்னையில் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்ததையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனோ என்ற மாணவியும் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்ததையும், இலங்கையிலிருந்து இன்னிசைப் பாடகர் சிவபாலன் மற்றும் மருத்துவர் சிலோன் பாலா,
மலேசியத் திருநாட்டின் ஈப்போ நகரத்தின் பண்பாட்டுத் திலகமாகவும், தமிழ்க் களஞ்சியம் தொகுத்த பெருமைக்குரிய கவிக்குயில் கலிய பெருமாள் (எவர் தொலைப்பேசியில் அழைத்தாலும் முதல் குரலாக ‘இன்பமே சூழ்க என்னாளும் வாழ்க’ என்று வாழ்த்துச் சொல்லித்தான் பேசுவார்) போன்றோர் விருந்தினர்களாகத் தங்கிச் சென்றதைவிட

அப்பாவின் நண்பர்களின் மக்கட்செல்வங்களே எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற காலத்தில் ஒருங்கே இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

அகநானூறு…
சாரல்:7-தூறல்:1
இங்கு ‘வாயில் வேண்டிச்சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது’ என்னும் தோழிகூற்றுப் பாடலைப் பார்ப்போம். அள்ளூர் நன்முல்லையார் பாடிய மருதத்திணைப் பாடல். 46ஆம் பாடல்.
‘சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டூது பனிமல ராரு மூர!
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று,
உறையிருந்து,ஒளிருந் தாழிருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை யயர்ந்தனை என்ப, அஃதியாம்
கூறேம், வாழியர் எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னவென்
ஒண்டொடி நெகிழிறு நெகிழ்க!

தலைவன், தலைவியைச் சந்திக்க விரும்புகிறான். தலைவியோ, அவனுடைய பரத்தையர் தொடர்பால் காண விரும்பவில்லை. தோழியைத் துணை செய்யுமாறு கூறுகிறான்.
அவளோ, அவனுக்கு மாறுபடப் பேசுகிறாள். எருமை, தான் பிணிக்கப்பட்டிருந்த தொழுவத்தைச் சிறுநீராலும் சாணத்தாலும் சேறாக்கிக்கொண்டு, பிணிகயிற்றை அறுத்துக்கொண்டு, பக்கத்து வயல்வேலியையும் விலக்கிக்கொண்டு, வயலுக்குள் செல்கிறது.
வயல்மீன்கள், அஞ்சியோடுகின்றன. எருமை, வள்ளைக்கொடியைச் சிதைக்கிறது. வண்டோ, தாமரையின் தண்ணிய தேனைச் சிதைக்கிறது. மாலநேரமானதால், தாமரையும் கூம்பிவிட்டது. வண்டு, பூவில் இருக்கிறது. எருமை, அந்தத் தாமரை மலரை உண்ண விரும்புகிறது.
‘எருமையை என்னதான் செய்யவியலும்? நீ வேறொருத்தியை வீட்டிற்கே அழைத்துவந்து, மணந்து கொண்டதாக ஊர் கூறுகின்றது. உன்னையும் என்னதான் செய்யவியலும்? நீ சென்று வரலாம்.’ என்கிறாள்.
அள்ளூர் போன்ற அழகி என் தலைவி எனக்கூறும் பாங்கினை வேறு எம்மொழியிலும் நாம் காண்பதற்கில்லை.
நகரின் அழகை நங்கையின் அழகோடு ஒப்புமை செய்வது வியப்புக்குரியது.
சாரல்:7-தூறல்:2
அடுத்ததாக, முல்லைத்திணைக்குரிய பாடல். இடைக்காடனார் பாடியது.
தலைவன் கூற்றாக அமைந்தது. வினைமுற்றிய தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்னெஞ்சிற்குச் சொல்லியதாகும். 284ஆம் பாடல்.
‘சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன,
குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்,
முடந்தை வரகின் வீங்குழு ளருந்துபு,
குடந்தையும் செவிய கோட்பவ ரொடுங்கி,
இன்றுயி லெழுந்து துணையொடு போகி,
முன்றிற் சிறுநிறை நீர்கண் டுண்ணும்
புன்புலந் தழீஇய பொறைமுதற் சிறுகுடி,
தினைக்க ளுண்ட தெறிகோல் மறவர்,
விசைத்த வில்லர் வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
காமர் புறவி னதுவே – காமம்
நம்மினுந் ததன்தலை மயங்கிய
அம்மா வரிவை யுறைவி னூரே!’

சிற்றிலைகளை உடைய நெல்லிமரத்தின் அழகிய காய்போன்ற கண்களைக் கொண்டதாகவும், உடல் முழுவதும் அழகிய மயிரை உடைய சிறுமுயலானது, தலைசாய்ந்த வரகின் முதிர்ந்த தானியத்தைச் சுவைக்க விரும்பவும், வரகினைக் கொள்பவரைக் கண்டு அஞ்சி, உறக்கத்தினின்றும் விழித்துக்கொண்டு, துணையுடன் சென்று, வீட்டின் முற்றத்திலுள்ள சிறிதளவாகவே உள்ள நீரினைக் கண்டு பருகும்.
அத்தகைய காடுசார்ந்த நிலமாகிய கொல்லையில் வாழ்கின்ற சிறுகுடியைச் சேர்ந்த தினைக்கஞ்சி உண்ட சிதறுகோல் உடைய முல்லைநில வேட்டுவர், வில்லேந்தி வேட்டையாடச் சென்று, முல்லைநிலக் கொல்லையில் புல்லரிசி கிண்டும் விருப்புடைய காடு அதுவாகும்.
இன்பத்தை நம்மைவிட மிகக்கொண்டு, மனமயக்கம் கொண்ட தலைவி வாழ்கின்ற இனியவூர் அதுவாகும்.
எனவே, தலைவியைச் சென்றடைய விரைந்து தேரினைச் செலுத்த வேண்டும் என்பதாம். தலைவன், தனது நெஞ்சுக்கே தான் சொல்லியதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முயலின் வடிவம், முல்லைநில வேடுவர், தலைவியின் காதல் இப்பாடலில் வனப்புற வரையப்பட்டுள்ளன.
புறநானூறு அறிமுகம்
‘புறம்’ என்னும் சொல்லுக்குப் பக்கம், முதுகு, இறையிலி நிலம், புறத்திணை என்னும் பொருள்கள் உண்டு.
இங்குப் ‘புறம்’ என்பதற்குப் ‘புறப்பொருள்’ என்பதுவே பொருளாகும்.
அக ஒழுகலாறு நீங்கிய அனைத்துமே, புற ஒழுகலாறுகள் எனப்படும்.
பதினென்கீழ்க்கணக்கில் ‘நாலடி நானூறு’ போலவும், ‘பழமொழி நானூறு’ போலவும், எட்டுத்தொகையில் ‘அகநானூறு’ போலவும் அமைவது ‘புறநானூறு’.
புறநானூற்றின் அடிச்சிறுமை 3, அடிப்பெருமை 40.
நானூறு பாக்களில், சில பாக்கள் சிதைந்துள்ளன. எல்லாப் பாக்களுமே, ஆசிரியப்பா அல்லது அகவற்பாக்களால் அமைந்தவை.
பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், வெண்பாவின் தாக்கம் இருப்பதுபோல், எட்டுத்தொகை நூல்களில் ஆசிரியப்பாவின் தாக்கம் இருக்கும்.
ஆசிரியப்பாவின் அடிச்சிறுமையே மூன்றுதான், ஆனால், அடிப்பெருமைக்கோர் அளவில்லை.
இதுவரை நற்றிணை முதலாக அகநானூறு முடிவாக ஏழு தொகைநூல்களிலுமாக ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு பாடல்களாகப் பதினான்கு பாடல்களைப் பார்த்தோம்.
இறுதித் தொகை நூலாகிய புறநானூறோ, வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
எனவே, எட்டாம் இறுதித் தொகைநூலாகிய புறநானூற்றினின்றும் எட்டுப்பாடல்களே எடுத்துக்கொள்ளலாம்.
புறநானூற்றின் போர்வரிகள் தமிழர் பெருமைக்கு வழங்கிய தங்கப் பதக்கமாகும்.
சாரல்:8-தூறல்:1
முதலாவதாகக் கடையெழு வள்ளல்களுள் புகழ்பொலிந்த அதியமான் நெடுமானஞ்சியை அறிவரசியார் ஔவையார் பாடிய பாடல்.
தானைமறத் துறை, ‘தானைமறம்’ என்பது படைவீரம். தும்பைத்திணை, ‘தும்பை’ என்பது, அதிரப் போர் செய்வது.
87ஆம் பாடல்.
‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போரெதிர்ந்து,
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே!’

புலமைப் பெருமாட்டி ஔவையார், கடையெழு வள்ளல்களுள் அதியமான் நெடுமானஞ்சியை எதிர்க்கின்ற பகைவரை எச்சரிக்கிறார்.
எவ்வாறு? ‘பகைவரே! போர்க்களம் புகுவதைத் தவிர்த்து விடுங்கள். போரை எதிர்கொண்டு வெற்றிபெற. எங்களில் ஒரு மாவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?
ஒரு மாதத்தில் ஒரு தேரினைச் செய்யும் தச்சன், ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றவனானால் எப்படியோ, அப்படிப்பட்ட பெருமுயற்சியால் ஒரு திங்களுக்கு ஒரு சக்கரம் மட்டுமே செய்வதென்பது எத்துணை நுணுக்கப் பெருமிதம் கொண்டதாக அமைக்க முடியும்.
அத்தகைய பேராற்றல் படைத்த மாவீரன் அதியமான நெடுமானஞ்சி!’ என்கிறார்.
வளரும்…

முனைவர் ஒளவை ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment