Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 40

Written by Dr. Avvai N Arul

“ வாழ்வியல் காட்டிய வளம் ! ”

சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ்வண்ணமே எங்கள் அண்ணா நகர் இல்லத்தில் எந்தையார் புதிய தொடராக ‘ விழிப்போடு வருக ’ என்ற பெயர்ப்பலகையை வைத்திருந்தார். இப்பெயர்ப்பலகை அந்நாளில் பல வார இதழ்களில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
1974 முதல் 1998 வரையில் எங்கள் இல்லத்தின் அசைக்க முடியாத அருந்துணையாக நான்கு கால் நண்பராக, வெவ்வேறு காலங்களில், காவல் தெய்வங்களாக, ‘காரி’, ‘டாமி’, ‘சீசர்’, ‘ஜூலி’, ‘அஞ்சலி’ வலம் வந்தது பசுமையாகவுள்ளது. இவை எங்களுடன் பின்னிப்பிணைந்து மிக விழிப்பாக எங்களைக் கண்காணித்ததை மறக்க முடியாதது.
எந்தையார் மீதும், தம்பி பரதன் மீதும், அண்ணன் கண்ணன் மீதும் உச்சந்தலை வரை தொட்டுத் தொட்டு விளையாடுவதும், அவர்களுடைய செவிகளில் உராய்வதும் காணக்கிடைக்காத காட்சிகளாகும். சைவப் பிறவிகளாகிய நாங்கள் எங்கள் நாயகர்களையும் கடுஞ்சைவமாக வளர்த்தது எங்கள் அன்னையாரின் பெரும்பணியாகும். பாலும், தயிரும் உண்டாலும், அணுவளவும் சீற்றங்குறையாமல் எங்கள் பெற்றோர் எப்போதாவது ஒருமுறை எங்களிடம் குறைகாணும்பொழுது தவறிக் கையுயர்த்தினால் சீசரின் வேகத்தால் அவர்கள் அமைதியாவார்கள். எங்களைப் போலவே, கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபாடும், பூப்பந்தாடும்பொழுது அந்த உயரத்திற்கு எட்டித் தாவுவதும், ஊஞ்சலில் எங்களுடன் சரிசமமாக ஏறியமர்ந்து விளையாடுவதும் மறக்க முடியாத காட்சிகளாகும்.
சில நேரங்களில், மதிற்சுவரின் மேல்தான் எங்கள் பேச்சரங்கம் நடைபெறும். அவ்வேளைகளில் சீசரும் மதிற்சுவரில் உடன் அமர்ந்திருக்கும். இக்காட்சியைக் கண்டு, எங்கள் வீட்டுக்கு எதிரிலுள்ள அம்மாவின் பேராசிரியர், டாக்டர் சி.டி. திருஞானசம்பந்தம் அவர்கள் எங்கள் அம்மாவிடம் முறையிட்டாராம். முறையீட்டில் ‘ என்ன தாரா ! இப்படி உன் பிள்ளைகளும், நான்குகால் நண்பரும் மதிற்சுவரில் நிற்பதா ?’ என்று திகைத்துக் கேட்டாராம். அம்மா அடிக்கடி இதை எங்களிடம் சுட்டிக்காட்டுவார்கள்.
வேற்றொரு தருணத்தில், அஞ்சலியைக் காலை நடைக்கு அழைத்துச் சென்றபோது, வேற்றொரு இன நண்பரைப் பார்த்துச் சீற்றங்கொண்டு கைச்சங்கிலியிலிருந்து விடுபட்டு ஓடியபொழுது, விரைந்து வந்த சரக்குந்தில் அடிபட்டு இறந்த காட்சியைக் கண்டு நான் கலங்கி இரண்டு நாள்கள் உணவருந்தாமல் தத்தளித்தேன். எங்கள் இல்லத் தோட்டத்தில் எலுமிச்சை மர நிழலில் அஞ்சலியை மீளாத் துயில்கொள்ள வைத்தோம்.
தீபாவளி வந்தால், நாயகர்கள் நடுங்குவதைக் கண்டதால், அப்போதே, பட்டாசுகள் மீது எங்களுக்குக் கோபம் வந்துவிட்டது. இன்றும்கூடத் தோழர் நெமிலியை வளர்க்க வேண்டும் என்று என் மகள் ஆதிரை அடம் பிடிக்கிறார். என் அண்ணன் மகள் மருத்துவம் பயிலும் தாரா நிகிதா தன் தங்கையாக ‘மெலடி’யை ஆஸ்திரேலியாவில் பதினைந்து ஆண்டுகளாக வளர்க்கிறார்.
என் பெற்றோர்கள் இருவருக்கும் அற்புதமான பழக்கமுண்டு. அவர்களைவிட மூத்தவர்களையும், பதவியில் முதுநிலையில் உள்ளவர்களையும் மதிப்பதையும், அவர்களைவிட இளமையாகவுள்ள நண்பர்களைப் போற்றி வளர்ப்பதையும் கண்டு நான் பெருமிதங் கொள்வதுண்டு.
ஆண்டுத் தொடக்கமான சனவரி 1-ஆம் தேதியன்று, அப்பா முதல்வரையும், அருட்செல்வர் ந. மகாலிங்கம் அவர்களையும் சந்திப்பது போல், அம்மா டாக்டர் திருமதி மரக்காயரைச் சந்திப்பது தவறாத வழக்கமாகும்.
அம்மாவுடன் பணியாற்றிய மருத்துவத் திலகங்கள் எங்கள் மீதும் அன்பு சொறிந்தனர். இவர்களில், இராயப்பேட்டை மருத்துவமனை (1970-1978) டாக்டர் மங்கலம், டாக்டர் சுசீலா, டாக்டர் மெகருன்னிஷா, டாக்டர் பெர்லின் ஜோசப், அம்மாவிடம் பயிற்சியெடுத்த டாக்டர் தியாகராஜன், வசுந்தரா தியாகராஜன், (நங்கநல்லூர் பி.எம். மருத்துவமனை உரிமையாளர்கள்) டாக்டர் கமலக்கண்ணன் (அம்மாவைப் போல இலிபியாவில் பணியாற்றியவர்), டாக்டர் கிருபாகிரி மற்றும் செவிலியர் திருமதி தெரெசா, திருமதி பிளோமினா; ஸ்டான்லி மருத்துவமனை (1980-1981) நண்பராக டாக்டர் சந்திரா, தொழிலக மருத்துவமனையில் (1981-1982) மருத்துவர் தாராபாய்; கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (1982-1987) மருத்துவர் சினேகலதா (என் வகுப்புத் தோழர் தீபக்கின் அம்மா), எழும்பூர் குழந்தைநல மருத்துவமனையில் (1987-1989) டாக்டர் பார்வதி, டாக்டர் நர்மதா, டாக்டர் கே.ஜி. கமலா, மருத்துவர் இராமமூர்த்தி, மதுரை மருத்துவமனையில் (1989-1991) அம்மா முதல்வராக இருந்தபொழுது உதவியாளர் திருமதி இராதா போன்றோரும் மற்றும் குடும்ப நண்பர் ஓமியோபதி மருத்துவர் முருகன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர்.
என் பல்வரிசையை ஒருசீராக அமைப்பதற்குக் கம்பி கட்டிய பல்மருத்துவர் அண்ணா நகரிலுள்ள டாக்டர் பாணிசங்கர், புரசைவாக்கத்தில் டாக்டர் எம்.ஜே. இராமகிருஷ்ணன் (அம்மாவைப் போல இலிபியாவில் பணியாற்றியவர்), இராதாகிருஷ்ணன் சாலையில் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் ஆவர். எனக்குக் கண்ணாடி அணிவதற்காக கண் சிகிச்சை செய்த அண்ணாநகரிலுள்ள டாக்டர் சிவப்பிரகாசம் மயிலையிலுள்ள டாக்டர் பிரேமா அனைவரும் அம்மாவின் நண்பர்களே.
மழலை மருத்துவத்தின் மாத இதழாக மலரும் ‘Indian Academy of Paediatrics’ இதழை அம்மா எழுத்தெண்ணிப் படிப்பது வழக்கமாகும்.
என் மகள் ஆதிரைக்கு குழந்தைநல மருத்துவராகவுள்ள டாக்டர் பிரபாகரனிடம் நான் ஏதாவது மருத்துவக் கேள்வி கேட்டால், “என் பெருமைக்குரிய பேராசிரியராகிய உங்கள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்” என்பார்.
அவ்வண்ணமே நான் தமிழ்ப் பேராசிரியர்களிடம் இலக்கியத்தில் ஐயம் கேட்டால், “அப்பாவைக் கேட்டுத் தெரிந்துகொள்” என்பார்கள். முதுபெரும் மருத்துவர்களான டாக்டர் சீலா தம்பையா, டாக்டர் சௌமினி, டாக்டர் கனகா, டாக்டர் நம்மாழ்வார், டாக்டர் பாஸ்கர் ராவ், இதய மருத்துவர்களான டாக்டர் சிவராஜ், டாக்டர் லலிதா காமேசுவரன், டாக்டர் சே.நெ. தெய்வநாயகம், டாக்டர் சண்முக சுந்தரம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன் முதலியோரை எப்போதும் பெருமிதமாக அம்மா பேசுவார்.

மாபெரும் மருத்துவராகிய அம்மாவைப் போலவே மருத்துவர்களாக நாங்களும் வரவேண்டும் என்று நினைத்த எங்கள் குடும்ப உறவினர்கள் பதினெட்டு பேர் மாமருத்துவர்களாக மிளிர்கிறார்கள் என்பதே அம்மாவின் பெருஞ் சாதனையாகும்.

கலித்தொகை அறிமுகம்
கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது கலித்தொகை. கருத்து வளமிக்க நூல்; காதலைப்பற்றிக் கூறும் நூல்; தமிழர் பண்பாட்டைப்பற்றிப் பேசும் நூல்; அன்பு, பண்பு, முறை, நிறை, பொறை, போற்றுதல், ஆற்றுதல் போன்றவற்றுக்கு விளக்கங்களைத் தருகின்ற நூல்; வலிமைக்கு எளிமையான நூல்; எளிய சொற்களைக் கொண்டு, அரிய நீதிகளைக் கூறும் நூல். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், முதுமொழிக்காஞ்சி தவிர, வெண்பாவில் அமைந்தவை.
எட்டுத்தொகை நூல்கள், ஆசிரியப்பா அல்லது அகவற்பாவில் அமைந்தவை.
சாரல்: 6-தூறல்:1
மொத்தமுள்ள 150 பாக்களில், முதலாவதாகத் தோழிகூற்றாக அமைந்துள்ள 133ஆம் பாடல்; சோழன் நல்லுருத்திரன் பாடியது. 19 அடிகளை உடைய பாடலில், 6 முதல் 14 அடி முடியவுள்ள 9 அடிகளை மட்டும் இங்கு காணலாம்.
திருக்குறள் சார்ந்த நெறிகளையே எடுத்தியம்பும் திறத்தைக் காண்போம்.
‘ஆற்றுத லென்பதொன் லந்தவர்க் குதவுதல்;
போற்றுத லென்பது புணர்ந்தாலைப் பிரியாமை;
பண்பெனப் படுவது தன்கிளை செறாஅமை;
அறிவென படுவது பேதையார் சொல்நோற்றல்;
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை;
நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை;
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்;
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்!

ஏதுமற்ற ஏழை எளியவர்க்கு – வறியவர்க்கு வேண்டுவன ஈதல்வேண்டும்; முதலாவதாகப் பசிப்பிணி அகற்றும் மருத்துவராக இருத்தல் வேண்டும்; அடுத்த அடிப்படைத் தேவைகளான உடை வழங்குதல், உறையுள் வழங்குதல் வேண்டும். மொத்தத்தில் உற்றுழியும் உதவுதல் உயர்ந்தநெறி. புணர்ந்தாரை எனில், நட்புச் செய்தாரை என்பது பொருள்.
அவரை ஒருபோதும் பிரிதல் கூடாது. அந்த நட்பும் நுனிக்கரும்பிலிருந்து அடிக்கரும்பைச் சுவைப்பதுபோல்-அதாவது வளர்வதாக இருத்தல் வேண்டும். அதைத்தான் ‘போற்றுதல்’ என்கிறார்.
பண்பெனப்படுவதும் குணமெனப்படுவதும் ஒன்றுதான். முன்னோர் சென்ற நன்னெறியில் நாமும் நடைபயில்வதே ‘பண்பு’ எனப்படும். அன்பெனப்படுவது தெரிந்தவர்மாட்டுக் கொள்ளும் பற்றுள்ளமாகும். எனவே, உற்றாரும் உறவினருமாகிய அனைவரிடத்திலும் அன்புகொள்ள வேண்டும்.
‘அருளென்னும் அன்பீன் குழவி’ என்பார் திருவள்ளுவர். மேதையர் எனப்படுவோர், பேதையர் பிதற்றும் தகாச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளலாகும். அறிவானது, அற்றம் காக்கும் கருவியில்லையா? ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பதையும் நினைவிற் கொண்டு, வாழ்வதே அறிவுடைமையாகும்.
செறிவென்பது, ‘திண்மை’ எனப்படும். ஒருவர், முன்னர்க் கூறியதை மறக்காமலும், மறைக்காமலும் இருப்பதே ‘செறிவு’ எனப்படும். மறைபொருள் என்பது, ஒன்றைப் பிறர் அறியாமல் பாதுகாத்துக்கொள்வது. இல்லையெனில், வெளிப்பட்டு வேதனைப்படுத்தும், இத்தகைய நிலைப்பாடே ‘நிறை’ எனப்படும். கண்ணோட்டம் என்பது, இரக்கம் எனப்படும். அத்தகு இரக்கம் கொள்ளாமல், உயிரைக் கொல்லுதல் கூடாது. ‘வௌவல்’ என்பதற்குக் கவர்தல் என்பது பொருள்.
எனவே, இரக்கமின்றி அரக்கத்தனமாக எந்த உயிரையும் வௌவுதல் கூடாது. மன்னவன், மக்களை ‘முறை’ செய்து காக்க வேண்டும். ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப்படும்’ இல்லையா? மனுநீதிச்சோழன், தன் மகனென்றும் பாராமல் வீதிவிடங்களைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதை ‘முறைசெய்தல்’ எனலாம். ‘முறை’யெனில், ‘நீதி’யென்க! ‘பொறை’ என்பதன் பொருள், பொறுமை என்பதாகும்.
தன்னைப் பிறர் போற்றாமல் தூற்றியபோதும் பொறுத்துக்கொள்ளுதல், ‘பொறை’ எனப்படுவதாகும்.
சாரல்:6-தூறல்:2
அடுத்ததாகக் ‘கண்டோர்கூற்று’ என்னும் தலைப்பிலான 9ஆம் பாடல். 24 அடிகளைக் கொண்ட அதிலிருந்து 12ஆம் அடி முதல் 20ஆம் அடி முடியவுள்ள 9 அடிகளைக் கொண்ட பகுதியைக் காண்போம்.
‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்வர்க் கல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கவைதா மென்செயும்?
நினையுங்கா லும்மகள் நுமக்குமாங் கனையளே!
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை,
நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செயும்?
தேருங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே!
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை,
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செயும்?
சூழங்கால், நும்மகள் நுமக்குமாங் கனையளே!’

பழங்காலத்தில், ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தனர். திருமணத்திற்குத் தடையென்றால், தலைவன் தலைவியை உடனழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வான்.
அவ்வாறு ஒருவன் ஒருத்தியை அழைத்துச் சென்றுவிட்டான். அவரைத் தேடிச் செவிலித்தாய் செல்கிறாள். துறவியர் சிலர், எதிர்ப்படுகின்றனர். அவரிடம் அவள், ‘ஓர் இளம் இணையர், இவ்வழியே சென்றாரா?’ என வினவுகிறாள்.
அவரும், ‘அவ்விணையர் சென்றதை யாமும் கண்டோம்; அவர் செய்த செயல்தான் யாதோ? இல்லறம் மேற்கொள்ளத்தானே செல்கின்றனர்? அது நல்லதுதானே?’ என்றனர். இதுதான் ‘கண்டோர் கூற்று’. ‘சந்தனம் மலையில் பிறந்தாலும், மலைக்குப் பயனில்லை; பூசுபவர்க்கே அது பயனாகும். முத்து கடலில் பிறந்தாலும், கடலுக்குப் பயனில்லை; அணிபவர்க்கே அது பயனாகும். இசையோ யாழில் பிறந்தாலும், யாழுக்குப் பயனில்லை; செவிமடுப்பவர்க்கே அது பயனாகும்.
அவற்றைப் போலவே, உம்மகள் பிறந்த இடத்திற்குப் பயன்படுவதைக் காட்டிலும், புகுந்த இடத்திற்குத்தானே பயன்பட முடியும். சிறந்த முடிவைத்தானே தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, துயர்களைக! என்று, கண்டோர் அறிவுறுத்தினர்.
அகநானூறு அறிமுகம்
‘அகம்’ என்னும் சொல்லுக்கு உள், மார்பு, மனம், ஞானம், பாவம், வீடு, பூமி, மலை, மருதம், அகத்திணை ஆகிய பொருள்கள். இங்கு ‘அகம்’ என்னும் சொல்லுக்கு ‘அகப்பொருள்’ என்பது பொருள்.
வீட்டு வாழ்க்கை பற்றியது. மனம் பற்றியதாகவும், மனைவாழ்க்கை பற்றியதாகவும் அமைவதெனலாம். பதினெண்கீழ்க்கணக்கில் நாலடி நானூறு போலவும், பழமொழி நானூறு போலவும் எட்டுத்தொகையில் அமைவது ‘அகநானூறு’ எனலாம்.
அகநானூற்றின் அடிச்சிறுமை 13; அடிப்பெருமை 31. இதனைத் தொகுத்தவர், மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவன் பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி. சரிபாதி அதாவது 200 பாடல்கள், பாலைத்திணைக்குரியன. மேலும், தோழிகூற்றே மிகுதியாகவும் உள்ளன.
வளரும்…

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment