Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 36

Written by Dr. Avvai N Arul

“சங்க இலக்கியச் சாரலிலே”

பங்குச் சந்தை வாயிலாகப் பொதுமக்களிடமிருந்து பங்குகளாக நிதி திரட்டுகின்ற நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுகின்ற சிறப்பு வாய்ந்த நிறுவனமாகக் கிளியா நிறுவனம் திகழ்ந்தது. சென்னையில் முதன்முதலாக 06.05.1992-ஆம் நாளன்று இரு நிறுவனங்களின் (பென்டாபோர் மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்.ஐ. வீடு கட்டும் நிறுவனம்) பங்கு விளம்பரங்களை வெளியிட்டோம். அன்று முதல் 1997 வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுக் கருப்பு வெள்ளை, வண்ண விளம்பரங்கள், இந்தியா முழுதும் செய்தியாளர் கூட்டங்கள், பங்கு முகவர்கள் கூட்டங்கள், முதலீட்டாளர் கூட்டங்கள் என்றெல்லாம் பல தரப்பட்ட வழிகளில் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.
பங்குச் சந்தையில் நிதி திரட்டும் நிறுவனங்கள் அவை திரட்டப்போகும் தொகையில் 6 முதல் 8 சதவீதத்தை விளம்பரத்திற்காகவே ஒதுக்கிச் செலவிடுவார்கள். 1993-94-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 154 நிறுவனங்கள் மொத்தம் ரூ.21,850 கோடியைப் பங்குவெளியீட்டின் மூலம் திரட்டியிருக்கின்றன. அதாவது, ஏறக்குறைய ரூ.1500 கோடியை இந்நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே செலவளித்திருக்கின்றன.
கடந்த 1990 முதல் 1994 வரையிலான நான்காண்டுகளில் பங்குச் சந்தையில் திரட்டடப்பட்ட நிதியானது, ஏறத்தாழ ஆண்டுதோறும் 98 சதவீதம் உயர்ந்திருப்பதால் பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் பங்குநிதி விளம்பரங்கள் மீதுதான் தமது திருப்பார்வையைச் செலுத்திப் பணியாற்றினார்கள்.
குஜராத்தைச் சேர்ந்த திரு.சுனில் கௌதம், கேரளாவைச் சேர்ந்த திரு.வேணுகோபால், 1980-களில் ஒருசேரப் பிரஸ்மேன் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி அங்கிருந்து விலகி, குஜராத்தைச் சேர்ந்த திரு. தவல் தேசாய் உடன் கிளியா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். திரு. வேணுகோபால் ரிலையன்ஸ் அம்பானியிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய பெருமை பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்க் கிளியா நிறுவனத்தில் தமியராகச் சேர்ந்தவுடன் எனக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. ‘தி இந்து’ பத்திரிகை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையுடைய தலைமைச் செய்தியாளர்களை எஸ்ஸார் நிறுவனத்தின் எஃகுத் தொழிற்சாலையைச் சூரத்திலுள்ள அசீராவிற்குப் பார்வையிடுவதற்காக வருவதற்கு வானூர்திச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பிவைக்குமாறு வேண்டினார். தற்செயலாக ‘தி இந்து’ பத்திரிகை தலைமையாசிரியர் வரமுடியாத சூழலில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலைமைச் செய்தியாளர் திரு. தாமஸ் செல்வதற்கு ஆயத்தம் நடந்தது. உடனே கிளியா வேணுகோபால் என்னை அழைத்து இந்து செய்தியாளருக்குரிய விமானச்சீட்டில் நீ உடன்வா என்று ஆணையிட்டார்.

ஒன்றும் தெரியாமல் மருட்சியாக இருந்த நான் அசீராவுக்கு உடன் சென்றேன். என்னை அங்கு அரவணைத்து, “இது ஒரு தொடக்கப்புள்ளிதான் நீ இன்னும் பல இடங்களுக்குச் செல்வாய். பல நாடுகள் கண்டு வெல்வாய்” என்று வாழ்த்திய உயர்ந்த உள்ளத்தை நான் என்றும் மறப்பதற்கில்லை. அவருடைய மூத்த பெண் மௌசத்தின் அரங்கேற்றத்தைச் சென்னை மியூசிக் அகாதமியில் நடத்த வேண்டும் என்ற பேரார்வம் அவரிடம் இருந்தது. அதனைப் பேச்சுவாக்கில் தெரிந்துகொண்டு, அதற்குரிய ஆயத்தங்களையெல்லாம் செவ்வனே செய்து, கவியரசியாகத் திகழ்ந்த சௌந்திரா கைலாசம் அம்மையாரின் தலைமையில் நிகழ்ச்சியைப் பாங்குற நடத்த உறுதுணையாக இருந்தேன். ஆங்கிலப் புதினமொன்றில் வரும் பெண்மணியின் பெயர்தான் கிளியா.

மிகவும் திறமையும், அறிவுச் சிறப்புமிக்க, சக்திவாய்ந்த, எதையும் நினைத்தவுடன் சிறப்பாகச் செய்து முடிக்கிற குணம் இந்தப் பெண்ணிற்கு உண்டு. பொதுவாக, விளம்பரம் என்பதே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒரு செயல்தானே. பத்தாண்டு நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி, ஒருபக்க விளம்பரம்பரத்தில் நாங்கள் சொல்லிவிடுவது போல, நிறுவனத்தின் அனைத்துக் கொள்கையையும் ஒரே சொல்லில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கிளியா என்ற பெயரை இம் மூவரும் தேர்வு செய்தனர். எஸ்ஸார் குழும நிறுவனத்திற்காக ஒரே நாளில், ஒரே நேரத்தில் 7 வெவ்வேறு இடங்களில் செய்தியாளர்கள் மற்றும் பங்கு முகவர்கள் சந்திப்பை நடத்தியதைக் கிளியா நிறுவனத்தின் பெரிய சாதனையென்றுதான் சொல்ல வேண்டும்.

விளம்பரங்களைத் தயாரிப்பதில் கிளியா நிறுவனத்தின் அணுகுமுறை சற்று வேறுபாடானது. நாங்கள் எப்போதும் தகவல்களுக்கு முதன்மை கொடுப்பதில்லை. தகவல்களை உறுதிப்படுத்தும் பொருண்மைகளுக்குத்தான் முதலிடம் கொடுப்போம். சான்றாக, ஒரு பொருளைப்பற்றி அதிகத் தகவல்களை அளித்துவிட்டு அதைத்தேடி வாடிக்கையாளர்களை அலையவிடுவதைவிட அப்பொருள் சந்தையில் இந்த இடத்தில் இன்ன விலையில் கிடைக்கும் என்று சொல்வதையே நாங்கள் விரும்புவோம். இதுதான் வாடிக்கையாளர்களை நெறியான வழியில் இட்டுச்செல்வதாயிருக்கும்.

அடிக்கடி எங்கள் இயக்குநர்கள் வலியுறுத்தியதை நினைவுகூர்கிறேன். விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசியல் தலைவரின் பொறுப்புணர்ச்சியும், இலக்கியவாணரின் அழகுணர்ச்சியும் இன்றியமையாதது என்பார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டால்தான் மக்களுக்கு எளிதில் போய்ச்சேரும்.

‘சங்கம்’ என்பதற்குக் கூட்டம், சபை, அவை, சங்கு, அழகு, கைவளை, நெற்றி, கணைக்கால், சேனைவகை, இலட்சம்கோடி எனும் பொருள்கள் உண்டு.‘இலக்கியம்’ என்பதற்குத் தொல்காப்பியத்தில் இடமில்லை. ஒருசொல் தன்மையாகிய இச்சொல்லை, இலக்கு+இயம் எனப்பிரிக்கலாம். ‘இலக்கு’ என்பதற்குக் குறி, குறிப்பொருள், சமயம் எனும் பொருள்கள். ‘இயம்’ என்பதற்கு வாச்சியம், மத்தளம், ஒலி, சொல் எனும் பொருள்கள்.
‘சாரல்’ என்பதற்குப் பக்கமலை, கிட்டுகை, தூவானம் எனும் பொருள்கள்.
‘இயம்புதல்’ என்பதற்கு ஒலித்தல், வாச்சியமொலித்தல், சொல்லுதல், துதித்தல் எனும் தொழிற்பெயர்ப் பொருள்கள். மேற்காண் ‘இயம்’ என்பது பெயர்ச்சொல்.எனவே, ‘சங்க இலக்கியச் சாரல்’ என்பதற்குச் சங்ககாலத்தில் தோன்றிய இலக்கியங்களின் தூவல்கள் எனம் பொருள் கொள்ளலாம். மழைச்சாரல் என்பது போல, இலக்கியச்சாரல் என்பது பொருந்தும்.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனச் சங்கங்கள் மூன்று. முதற்சங்கத்தைத் தலைச்சங்கம் என்பர். முச்சங்க வரலாற்றைக் காண்போம். சங்கங்களை நிறுவியவர் பாண்டியர்.
தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என, இத்தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப.

அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவரால் பாடப்பட்டன எத்தனையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என, இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்பது, அவரைச் சங்கமி இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் ‘அகத்தியம்’ என்ப.
இடைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர் காப்பியனாரும், சிறுபாண்ட ரங்கனாரும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என, இத்தொடக்கத்தார் ஐம்புத்தொன்மதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவராற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என, இத்தொடக்கத்தன என்ப.

அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பயமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர், மூவாயிரத்து எழுநுற்றாண்டு சங்கமிருந்தார் என்ப. அவருள் சங்கம் இர்இணினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மா என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர், சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரம் என்ப. அக்காலத்துப் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது போலும்.
கடைச்சங்கம் இருந்தால் சிறுமேகாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரானாரும், பெருங்குன்றூர்க்கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்என, இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர்அவருள் கவியரங்கேறினார் மூவர் என்ப. அவர், சங்கம் இருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.
‘இலக்கியம்’ என்னும் சொல், சூளாமணியில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். ‘காமநூலினுக்கு ‘இலக்கியம்’ காட்டிய வளத்தார்’ – (சூளா.455).
எட்டுத்தொகை சங்க இலக்கியங்களை, தொகையும் பாட்டும் என்ப. அவை எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் என விரிவன. முதலில் எட்டுத்தொகை குறித்த வெண்பா
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அறம்புறமென்று
இத்தீறத்த எட்டுத் தொகை’

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எட்டுத்தொகையாகும்.
திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம் என்ற பொருள்கள் உண்டு. எனவே, ‘நற்றிணை’ என்பதை நற்குலம் அல்லது நல்லொழுக்கம் எனலாம்.
நற்றிணை அறிமுகம் தொகை நூல்களில் முதலிடம் பெறுவது நற்றிணை. ஏழடிச் சிற்றெல்லையும், பதின்மூன்றடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களை உடையது. நானூறு பாடல்களைக் கொண்ட இந்நூலில், 234ஆம் பாடல் கிடைக்கவில்லை. நற்றிணையைத் தொகுத்தவர், யாரெனத் தெரியவில்ல; தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி. பாடிய புலவர் 192.
சாரல் 1: – தூறல் 1:
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லிய கூற்று. கபிலர் பாடிய குறிஞ்சித்திணைப் பாடல். நூலின் முதற்பாடலும் இதுதான்.
‘நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்று என்தோள் பிரிபறி யலரே!
தாமரை தண்தாது ஊறி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்றப் புரையோர் கேண்மை
நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந் தருள்
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே!

சொன்னதைச் செய்வபனே தலைவன்; செய்வதைச் சொல்பவனே தலைவன்; என்றும் மாறாத இனிய மனம் படைத்தவனே! எந்தச் சூழலிலும் தலைவியைப் பிரியமாட்டாதவனே! தாமரை மலரின் குறிர்ச்சி பொருந்திய நறுந்தேன் கொண்டு, மணக்கின்ற சந்தனமரத்தில் அதனைச் சேர்த்தது போன்ற நற்பண்பு உடையவன்! மேலும், நீரில்லாமல் இந்த நீளுலகம் இல்லாதது போலவே, அத்தன்மை உடையவனே தலைவன். அதனால், அவள் பிரிவினை கருதமாட்டாதவனே தலைவன், எனத் தலைவி தோழியிடம் கூறுகின்றாள்.
சாரல்:1-தூறல்:2
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லிய கூற்று. தேய்புரிப் பழங்கயிற்றனார் பாடியது. இது, அவர்தம் இயற்பெயரன்று; பாடலில் இடம்பெறும் உவமையினால் அமைந்த பெயர்.
புறந்தாழ் இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈரிதழ்ப் பொலிந்த வுண்கள்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வா மென்னும்
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
எய்யா மையோடு இழிவுதலைத் தருமென,
உறுதி தூக்காத் தூக்கி யறிவே
சிறிதுநனி விரையல் என்னு மாயிடை
ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல-
வீவது கொல்லென் வருந்திய வுடம்பே!

(284)
பொருளீட்டச் சென்றுள்ளான் தலைவன். தலைவியின் பிரிவு, அவனை அலைக்கழிக்கிறது. அன்பு மேலிட, உணர்வு ‘பார்க்கச்செல்’ என்கிறது. கடமை மேலிட, அறிவு ‘பொருளீட்டு’ என்கிறது. இவ்வாறாக உணர்வுக்கும் அறிவுக்கும் நெடும்போராட்டம் நிகழ்கிறது. உணர்வும் ஒரு யானை; அறிவும் ஒரு யானை. இரண்டு வலிமைமிக்க களிறுகள், கயிறிழுக்கும் போட்டி நடத்துகின்றன. கடமை முடியாமல் பார்க்கச் செல்வதால், இழிவுதருமென அறிகிறான்.

உணர்வோ தலைவியைக் காணாமல் தடுமாறுவதையும் உணர்கிறான். ஒருபுறம் அறிவுப் போராட்டம்; மறுபுறம் உணர்வுப் போராட்டம். தலைவனின் உள்ளமோ, இருதலைக் கொள்ளி எறும்பென ஆயிற்று. உடல் நோகின்றது; உள்ளம் வேகின்றது. இரண்டு யானைகளும் பற்றி இழுப்பதோ, தேய்ந்துபோன- பிய்ந்துபோன மிகப் பழங்கயிறு. இப்பக்கமும் இல்லாமல் அறுந்துபட்டது. அந்தக் கயிற்றைப் போல, அவன் வருந்திய உடம்பானது அழிந்துபடுவதோ என வருந்துகின்றான்.
வளரும்…

முனைவர் ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment