Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-23

Written by Dr. Avvai N Arul

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு
……………………………………………..

சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம் சங்கரநாராயணன் அவர்கள் என்னை வாழ்த்தியது என்னுடைய வாழ்வின் பெரும்பேறாகும். பேராசிரியர் சங்கரநாராயணன் சைவத் திருமுறைகள், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், பல சங்க இலக்கியப் பாடல்கள், முழுமையாக ஒற்றை வரியிலேயே திருக்குறள், பாரதியார், பாவேந்தர் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமில்லை, அண்மையில் நீங்கள் யார் எதை எழுதியிருந்தாலும், செழுமையான ஆங்கிலத்தில், மொழியாக்கம் செய்யும் வல்லமை படைத்தவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதாளர், எண்ணற்ற மாணவர்களை உருவாக்கிய பேராசிரியப் பெருந்தகை முனைவர் சங்கர நாராயணனின் பாராட்டு வரிகள் என்னை மேலும் நெகிழ்விக்கிறது. அவர் வாழ்த்திய வரிகள் பின்வருமாறு:-

“அன்புள்ள அருள். நீங்கள் தினச்செய்தியில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளை நான் அச்செடுத்து வரிக்கு வரி படித்து வருகிறேன். சென்றவாரம் நீங்கள் எழுதிய கட்டுரை நுட்பமான கட்டுரையாகும். மிகவும் பயனுள்ள கட்டுரை. தமிழோடு இரண்டறக் கலந்த வேற்றுமொழிச்சொற்களை முற்றிலும் தவிர்த்து தமிழைத் தூய்மையாக்குவதென்பது இமைப்பொழுதில் நிகழக்கூடியதன்று. காலம் அதனை நிறைவேற்றும். ஆனால், அனைத்துத் தமிழ்ச் சொற்களையும், அதில் கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களையும் உள்ளடக்கி, ஒவ்வொரு சொற்களின் தனிச்சிறப்புகளையும் விவரித்து, அச்சொற்களுக்கு வேற்றுமொழியில் வழங்கும் பொருளையும் உள்ளடக்கி பேரகரமுதலி ஒன்றை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும் (இத்துடன், தமிழ் ஒலிக்குறிப்பு அகராதியையும், சிறப்பு ஒலி வடிவங்களையும் கருதிப் பார்க்கலாம்). இதற்கென பேரகரமுதலி வல்லுநர்களைக் கொண்ட குழுவொன்றையும் நாம் உருவாக்கலாம். ஒரேசொல்லில் இரண்டு வேர்ச்சொற்கள் இடம்பெற்றிருப்பது தமிழுக்கே வாய்த்த தனிச்சிறப்பாகும். மொழிகள் ஒன்றோடொன்று கலக்கும் இயல்பினவாகும். அவ்வாறே முரண்பட்ட பேச்சுவழக்கைக் கையாளும் திறன்பட்டனவாகும்.“அரபு முகமதியரின் சமய மொழியாக அரபுமொழி திகழ்ந்தது. திருக்குரான் மிளிர்ந்ததும் மலர்ந்ததும் இம்மொழியில்தான் என்பது நாம் அறிந்தது.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இசுலாமியப் பெருமக்கள் தமிழில் செய்யுளிலும் உரை நடையிலும் நூல்கள் எழுதி வருகின்றனர். பல அரேபியப் பெயர்களும் சொற்களும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழில் ஏறத்தாழ 61 சொற்கள் தமிழாகவே இப்போது படர்ந்திருப்பதை இச்சொற்களின் வாயிலாக அறியலாம். அல்வா, இலாக்கா, சுபேதார், புகார், சுல்தான், கல்மானா, சுன்னத்து, சேப்பு, சைத்தான், தக்சீர், தகத்து, தகரார், தகவல், தகாதா, தாக்கீது, தசரிப்பு, தணிக்கை, தத்தாரி, தப்சீல், தப்தில், தபளா, தபா, தவாவத்து, தமகு, தவில், தாவாதார், தினார், துனியா, தைக்கா, நக்தி, நகத், நிக்கா, நகல், பக்கிரி, பலானவன், பாக்கி, மக்கர், மகசூல், மராமத்து, மவுஸ், மிட்டாய், முகாம், முரப்பா, முலாம், முனிசீப்பு, முன்ஷி, முஸ்திப்பு, மொபஸில், ரத்து, லங்காடி, லாயம், வக்கீல், வஜா (நிலவரித் தள்ளுபடி), ஜப்தி (கைப்பற்றல்), ஜபர்தஸ்து (வல்லந்தம்), ஜமாய்த்தல் (திறம்பட முடித்தல்), ஜவாப் (விடை, மறுமொழி), ஜப்பா (குப்பாயம்), ஜில்லா (மாவட்டம்), ஜேப்படி (பைப்பறி), ஜேப்பி (சட்டைப்பை). மேலே அடிக்கோடிடப்பட்ட சொற்களை உற்றுப்பார்த்தால் தமிழ்ச்சொற்கள்தான் இவையென்று பட்டிமன்றமே நடத்தலாம். இந்தச்சொற்கள் அரபுச் சொற்கள் என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. எவ்வளவு ஆழமாக, அகலமாக, நீளமாக அரபுச் சொற்கள் நம்மிடையே படர்ந்து, தொடர்ந்து, வளர்ந்து தமிழ்ச் சொல்லாகவே மாறியிருக்கிறது என்பதைப் பார்த்து மொழியியலாளர்கள் வியந்து நிற்கிறார்கள்.

பாரசீகம் இந்திச் சொற்கள் உருதுமொழி வழியாகவும் பாரசீக வழியாகவும் தமிழில் படர்ந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார் பேராசிரியர் திலகம் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். மாலிக்காபூரின் படையெடுப்புகளுக்குப்பின் மதுரையில் நாற்பது ஆண்டுகள் சுல்தானியர் ஆட்சி நடைபெற்றதும் பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்தமைக்குக் காரணமாகும். தமிழில் கலந்துள்ள பாரசீகச் சொற்களைப் பற்றி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரும் சிந்தனையாளர் இந்திய நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் மூதறிஞர் இராஜாஜி நிகழ்த்திய ஆய்வு இங்கு எண்ணத்தக்கது.

“ஒரு பாஷையில் அந்நிய மொழிகள் வந்து சேருவதற்குப் பல காரணங்கள் உண்டு. அது ஒரு தாழ்வாகாது. மேன்மையுமன்று. இந்துஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய பாஷைகளில் அரபி, பாரசீக மொழிகள் ஏராளமாகக் கலந்திருப்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், தமிழிலுங்கூட அரபு, பாரசீக மொழிகள் இல்லாமலில்லை.” மிராசுதார் உலகத்தில் அடிபடும் சொற்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கிஸ்தி, மகசூல், வசூல், ஜப்தி, ஜாரி, அசல், பாக்கி, ஜாமீன், ரசீது, வக்கீல், தாவா, தாக்கல், ஜமீன், மிராசு, பசலி, மாமுல் இவையெல்லாம் அராபி அல்லது பாரசீகச் சொற்கள்தானெனினும், அராபியே அதிகமாகக் கலந்துள்ளது. இப்படித்தான் வீடுகளில் உரையாடல் நடக்கிறது.

வசந்தன் ஆபிஸிலிருந்து வந்தான். வந்ததும் தலையிலிருந்து சரிகை உருமாலையை எடுத்து, மெதுவாக மேஜைமேல் வைத்து விட்டுச் சோம்பேறி நாற்காலியில் கால் நீட்டி உட்கார்ந்து மனைவியைக் கூப்பிட்டு காமு நல்ல காபி போடுவாயா? முதல்தரமாக இருக்க வேண்டும். எவ்வளவு ஜல்தியில் முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்றான். காப்பி அராபிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. கூடவே அதன் அராபியப் பெயரும் வந்தது. இது இயற்கை., ஆனால், ஜல்தி என்ற அராபிய மொழி எதற்கு? இதைப்பேச்சில் கலப்பதில் தமிழருக்கு ஒரு தனி மகிழ்ச்சி, “சரிகை” பாரசீகச் சொல்.

“சரி” என்பது தமிழில் சரிகையாயிற்று. உருமலை என்பது பாரசீகம், ‘மாலை’க்கும் ‘உருமாலை’க்கும் சம்பந்தமில்லை. ‘ருமால்’ என்ற பாரசீகச் சொல்லின் திரிபு அது. வடநாட்டில் ‘ருமால்’ என்றால், கைக்குட்டை அதாவது முகம் துடைக்கும் துணி என்று பொருள், தமிழ், தெலுங்கு கன்னட நாடுகளில் கைத்துண்டைத் தலையில் கட்டிய காரணத்தால், ‘உருமால்’ என்பது தலைப்பாகையாயிற்று. ‘டோபி’ என்றால் இந்துஸ்தானி என்றும், ‘குல்லாய்’ என்பது நல்ல தமிழ் என்றும் சிலர் எண்ணலாம். ஆனால் ‘குல்லா’யும் பாரசீகச் சொல்லே, ‘மேஜை‘ என்பது பாரசீகச் சொல்லேயாகும். ‘முதல்தரமான காப்பி’ என்பதில் ‘தரம்’ என்பது உண்மையில் தமிழன்று.

நீங்கள் இப்படி அவசரப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். காப்பி தயாராக வைத்திருக்கிறேன். பேஷ்! அப்படியல்லவோ இருக்கவேண்டும் வாழ்க்கைத் துணைவி! பேஷ், சபாஷ், வகையறா போன்ற மகிழ்ச்சிக் குறிப்புகள் பாரசீகத்திலிருந்து தமிழருக்குக் கிடைக்காமலிருந்திருந்தால், பாட்டுக் கச்சேரிகள் தமிழ்நாட்டில் எவ்வாறு இச்சொற்களிலில்லாமல் நடந்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வகையறா என்பதற்கும், வகை என்ற தமிழ்ச் சொல்லுக்கும் ஒரு தொடர்புமில்லை. வகையறா என்பது சுத்த பாரசீகச் சொல்லாகும். அதிலுள்ள ககரம் நெஞ்சிலிருந்து வரவேண்டும்.

கச்சேரியைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. தயார் என்பது சுத்த அராபியச் சொல்லாகும். சாப்பாடு தயார். திருமணத்திற்கு எல்லா சமையற் சாமான்களும் தயாராகிவிட்டனவா? அவன் எதற்கும் தயார், என்றெல்லாம் பல வீடுகளில் பேச்சு நடக்கும்போது, அராபியச் சொல் ஒன்று எவ்வளவு நுணுக்கமாக தமிழில் படர்ந்திருக்கிறது என்பதை நோக்குங்கால், சொற்கலப்பின் சிறப்பு தெரிய வருகிறது. வசந்தன் நிமிர்ந்து உட்கார்ந்து, பேனாவை நாசூக்காக வாயில் வைத்து, மனைவியைப் பார்த்த வாக்காகக் காப்பியை உறிஞ்சினான். ‘சுமாராக இருக்கிறதா?’, என்றாள் மனைவி. ‘கொஞ்சம் சர்க்கரை ஜாஸ்தி’ என்றான் வசந்தன். நேற்று இவ்வளவேதான் போட்டேன். கம்மி என்றீர்களே? நேற்று காப்பிப் பொடி ஜாஸ்தியாக இருந்திருக்கலாம். அதனால் சர்க்கரையை எடுத்துக்காட்டவில்லை. சரி இனி எல்லாம் தராசில் நிறுத்துத்தான் நான் சமையல் வேலை செய்ய வேண்டும்.

குஸ்திக்கு வரவேண்டாம், அம்மே கேட்டதற்குப் பதில் சொன்னேன். ‘குஸ்தி’ பாரசீகச் சொல் என்பது வெளிப்படை. ஜாஸ்தி, கம்மி, தராசு, நாசூக் எல்லாம் பாரசீகச் சொற்களே. ‘ஜாஸ்தி’ என்பது மொகலாய மராட்டிய ஆட்சியில் நிலத்தீர்வை, ஜமாபந்தி மொழிகளுடன் வந்திருக்கவேண்டும். ‘ஜ்யாமிதி’ என்பது பாரசீகச் சொல்லின் சுருங்கிய உருவம். ‘சுமார்’ என்ற சாதாரண மொழியும் ஒரு சுத்த பாரசீகச் சொல்லாகும். ‘பதில்’ என்பதும் நல்ல அராபியச் சொல்லாகும், தமிழன்று. பெருமக்களே இதற்கென்ன பதில் சொல்லப் போகிறீர்கள். தோற்றத்திலும் பயன்பாட்டிலும் ‘சுமார்’ என்பது ‘ஏறக்குறைய’ என்பதைத் தோற்கடிக்கிறது. ‘பதில்’ என்பதும் அவ்வாறே ‘விடை’ என்பதைத் தோற்கடிக்கும். ‘கதர்க்கடையில் புதுத் தினுசு நிறைய வந்திருக்கிறதாம் போய்ப் பார்க்கலாம், நீங்களும் வாருங்கள். அப்படியே கலாய்க்காரனிடம் கொடுத்திருக்கும் பாத்திரச் சாமான்களையும் வாங்கி வரலாம்’ .

,‘ஒரு மாதத்தில் எத்தனை தபா கலாய் பூசுவது? மண் பாத்திரமே உபயோகித்தால் என்ன? உடம்புக்கும் கூட அது நல்லது என்கிறார்கள்’. ‘அப்படியே செய்யலாம், நீங்களும் ஆபீசில் காகிதத்திற்குப் பதில் பனை ஓலையையே உபயோகித்து வரலாம்’. ‘ரகம்’ என்பது அரபி மொழி. மோஸ்தர் என்பதும் அவ்வாறே அன்னியமொழி. ஆனால், ‘தினுசு’ என்பது தமிழ் என்று சிலர் எண்ணலாம். இது தவறு. ‘ஜினுசு’ என்றால் ஓர் அராபி வியாபார மொழியின் தமிழ்த் திரிபு.

ஜினுசு என்றால் வியாபாரச் சரக்குகள். பட்டு ஜினுசு கம்பளி ஜினுசுகள் தானிய ஜினுசுகள் என்றும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமாகப் பண்டங்களை வகை வகையாகப் பிரித்து வைத்திருக்கும் முறையில் இம்மொழியின் உபயோகம். அதுவே தினுசு என்றாயிற்று. அதிலிருந்து அவன் பேச்சு ஒரு அலாதி தினுசு, இது புதுத் தினுசு மீசை என்றெல்லாம் விற்பனைக்கு அமைக்கப்படா விஷயங்களைப் பற்றியும் இம்மொழியின் பிரயோகம் நடைபெற்று வருகிறது. ‘கலாயம்’ என்பது அராபியச் சொல்லாகும். தங்கம், வெள்ளி முதலிய நாகரிகப் பூச்சுக்கு ‘முலாம் பூசுவது’ என்பதும், அராபிய மொழிச் சொல்லாகும். ‘சாமான்’ என்பது பாரசீகச் சொல்லாகும். மகர ஒற்றும் னகர ஒற்றும் மொழியின் ஈற்றில் வந்து, தமிழ் வடிவமாகப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. ‘காகிதம்’ என்பது பாரசீகச் சொல். ‘காகஸ்’ என்பது இந்துஸ்தானியச் சொல் என்பார்கள். ‘கடுதாசி’ என்றாலும் அந்நிய மொழியிலிருந்து தப்பமாட்டோம்.

அது அராபியச் சொல்லான ‘கிட்தாஸ்’ என்பதன் திரிபு. மலையாளத்தில் அராபி மொழிச்சொற்களின் சேர்க்கை அதிகமானதால்ல், ‘கலதாஸி’ என்பது மலையாளத்தில் அதிகமாகப் புழங்கும் சொல்லாகும். “எங்கள் அம்மா கல்சட்டியில் குழம்பு செய்வாள்; அதன் ருசியே அலாதி”. “அம்மா எது செய்தாலும் உங்களுக்கு நன்றாகவிருக்கும். நான் கல்சட்டியன்று. பொன்சட்டியில் செய்தாலும்கூட உங்களுக்குப் பிடிக்காது”. மன்னிக்க வேண்டும். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ‘வாபஸ்’ என்பது பாரசீகச் சொல், ‘அலாதி’ என்பதும் அராபியச் சொல். இவை எவ்வாறு தமிழில் வந்து சேர்ந்தன என்று அராபி அறிஞர் ஒருவர் மிகவும் வியந்தார். அண்ணன் பங்கும், என் பங்கும் அலாதி என்றெல்லாம் பேச்சில் சாதாரணமாக வருகிறது. ஆசாமி பரவாயில்லை. கெட்டிக்காரர். இனாமாகக் கொடுத்தாலும் வேண்டாம். நீ என்ன அவனுக்குச் சிபாரிசு பேசுகிறாய். கடன் வாங்கின ஆசாமிகளில் பாதிப்பேர் பராரி.

இரண்டு மாதத்திற்குள் பைசல். இந்தச் செருப்புக்கு யாரும் வாரிசு இல்லை போலிருக்கிறது இத்தகைய செந்தமிழ்ப் பேச்சில், ஆசாமி, பரவா, இனாம், சிபாரிசு, பராரி, பைசல், வாரிசு எல்லாம் அராபி அல்லது பாரசீகம். அராபி மொழியை ஏன் பயன்படுத்தக் கூடாது? சமசுகிருதம் மட்டும் உயர்ந்த மொழியோ? அப்படி யாரும் சொல்லவில்லை. எந்த மொழியானாலும் சரிதான்; வழக்கத்தில் வந்து, தமிழ் வடிவம் பெற்று அனைவரும் பொருள் அறிந்த வார்த்தையாயிருந்தால், அதைப் பொருந்திய இடத்தில் பயன்படுத்துவதில் யாதொரு பிசகும் இல்லை.

வைதிகர்கள் கூட தடைசொல்ல மாட்டார்கள். தமிழிற் கலந்த பாரசீகச் சொற்கள் காக்கி, கிஸ்தி, சுவான்தார் (உரிமையன்), செஞ்சி (போர், போரகம்), சொளதாகிரி (குதிரை வாணிகன்), டகர்பாச்சி (ஏமாற்று), டப்தர் (ஆவணக்கட்டு), டவாலி, (தோட்கச்சை), டாகு (புள்ளி), தக்கியா (இரவலர் இல்லம்), தகா (ஏமாற்று), தீவாணம் (அரசாட்சி), தீவானம் (பித்து), துருஸ்து (பழுதுபார்க்கை), நமூனா (சான்றாவணம்), நாஸ்தா (சிற்றுண்டி), பஜார் (கடைத்தெரு), பிஸ்தா, மஜா, மைதானம், மைதுனம், மோர்சிங்கு, ரசீது, ரஸ்தா, லகான், லங்கடா, லுங்கி, வஸ்தாது, ஜமீன், ஜரிசை, ஜோர், ஷாமியானா.

முனைவர் ந. அருள்,
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு

தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment