Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-22

Written by Dr. Avvai N Arul

கன்னடம், உருது சொற்கள் வந்த வரலாறு

சென்ற வாரம் வெளிவந்த ‘தெலுங்கு மலையாளம் சொற்கள் வந்த வரலாறு’ கட்டுரையை நூற்றுக்கணக்கான அன்பர்கள் படித்து மகிழ்ந்து பலர் என் மின்னஞ்சலில் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலத் தொடங்கியபோது, நெடிதுயர்ந்த ஆய்வு மாணவியாக சற்குணவதி அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இலக்கியத்துறை மாணவ மாணவிகளுக்குப் பாடம் நடத்திய விதம் பாங்குற உள்ளளது என்று என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பல ஆண்டுகள் கழித்து அண்மையில் அவர்களுடைய நூலை, அதே பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் வெளியிடும் வாய்ப்புப் பெற்றேன். பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வித் துறையின் தலைமைப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும், பல்கலைக்கழகம் அவரை விடுவதாக இல்லை. மீளமீள அவருக்கு ஆய்வுப் பணிகளை ஒப்படைத்து வருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கு படைத் தளபதியாக மிளிர்கிறார். தமிழ்நாட்டில் மலையின மக்களின் வாழ்வு வரலாறு பண்பாடு என்று யார் கேட்டாலும் அத்தலைப்பில் கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறார். முதுமுனைவர் சற்குணவதி அம்மையார் என்னைப் பாராட்டி, ”நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாறும் தெலுங்கு, மலையாளம்- தமிழுடன் கலந்துள்ள சொற்களும் படிப்பதற்கே மலைப்பாக உள்ளது நம்மை அறியாமலேயே பயன்படுத்துகிறோம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று கட்டுரை அருமை வாழ்த்துகள்” என்று எழுதிய வரிகள் என்னை மலைக்க வைத்தது.

கன்னடம் சங்க இலக்கியங்களில் வரும் ‘வடுகர்’ என்னும் சொல் கன்னடர்களைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. யாப்பருங்கலக் காரிகை உரை, குணகாங்கேயம் என்கிற கன்னட யாப்பு நூலைக் குறிப்பிடுகிறது. அட்டிகை, இதா, எகத்தாளம் எட்டன், சமாளித்தல், சாடுமாலி, ஒரு சிறை, அரிசி, சொத்து, பட்டாக்கத்தி, பம்பு, மூங்கில், பீக்கலட்டம் முதலிய சொற்கள் கன்னடத்திருந்து வந்தவையே.

டாசு மாலி (வீடு பெருக்கி), தண்டால், தப்பிலி, தவுக்கை (மாழைத்தட்டு), திகளர் (தமிழர்) ரகளை, ஜவுளி ஆகிய சொற்களும் தமிழில் கலந்துள்ள கன்னடச் சொற்களே. தமிழில் இன்றும் வழக்கில் உள்ள கருமாறி, கருமாறிப் பாய்ச்சல் ஆகிய சொற்கள் பழங்கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த வரலாறு, சுவையும் பயனும் அளிப்பதோடு, கன்னடம் தமிழில் கலந்த முறையையும் தெளிவாக்குகிறது செந்தமிழ்ச் செல்வியில் கூறப்பட்ட அவ்வரலாறு.

இந்தச் சான்றுகளினாலே கருமாடம் என்னும் சொல் உண்டென்பதும், அதன் பொருள் மாடிவீடு என்பதும் நன்கு தெரிகின்றன. எனவே, நக்கீரர் தம்முடைய நெடுநல்வாடையில், கருவொடு பெயரிய இல் என்னும் தொடருக்கு அவர் கருதிய சொல் கருமாடம் அல்லது கருமாடி என்பது ஐயமறத் தெரிவாகத் தெரிகிறது. கருமாடம் என்னும் சொல் பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வழக்கொழிந்து விட்டபடியால், மிகப் பிற்காலத்தவரான நச்சினார்கினியர், இச்சொல்லுக்குக் கர்ப்பக் கிரகம் என்ற தவறான பொருத்தமற்ற உரையை எழுதி விட்டார் என்பதும் அறிந்தோம்.

பழந்தமிழகத்தில் வழங்கி வந்த கருமாடம் அல்லது கருமாடி என்னும் சொல் பிற்காலத்தில் மறைந்து விட்டாலும், திராவிட இன மொழியாகிய கன்னடத்தில் இச்சொல் இலக்கிய நூல்களில் இன்றும் நின்று நிலவுகின்றது. கருமாடி என்னும் சொல் தமிழ்நாட்டில் இலக்கிய வழக்கில் மறைந்து போனாலும், இச்சொல் பேச்சு வழக்கில் நெடுங்காலம் வழங்கி வந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் மட்டும் இருந்தபடியால், இச்சொல் சிதைந்து வழங்கிற்று.

கருமாடி என்பது பேச்சுவழக்கில் கருமாறி என்று திரிந்து விட்டது. சில ஊர்களில் கருமாறியம்மன் என்னும் பெயருள்ள காளி (கொற்றவை) கோயில்கள் உள்ளன. கருமாடியம்மன் என்பதே கருமாறியம்மன் என்று திரிந்து வழங்குகிறது என்பது தெளிவு, பெரிய மாடமாக அதாவது பெரிய கோயிலாக அமைந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் என்பது இதன் கருத்து அல்லது கருமாடமாகிய அரண்மனையில் அமைந்த அம்மன் கோயில் என்பது இதன் கருத்தாகும். கருமாடி என்னும் சொல் கருமாறி என்று பிற்காலத்தில் திரிந்து விட்டது என்பதை அறிகிறோம். காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் குளக்கரையின் மேல் ஒரு கருமாடி உண்டு, அது, மூன்று நிலையுள்ள மாடக்கோயில், அக்கருமாடியில் இப்போது நின்றான், இருந்தான், கிடந்தான் என்னும் பெயருள்ள மூன்று திருமால் திருவுருவங்கள் எழுந்தருளியுள்ளன. முற்காலத்தில் இந்தக் கருமாடியில் மூன்று புத்த உருவங்கள் நின்றான் இருந்தான் கிடந்தான் என்னும் அமைப்பில் இருந்தன என்பதைப் புராணங்களால் அறிகிறோம்.

இந்தக் கருமாடி பிற்காலத்தில் உருமாறி என்று திரித்து வழங்கப்பட்டது. இடைக்காலத்தில், உற்சவக் காலத்தில் இந்தக் கருமாடியின் மேல் தளத்திலிருந்து குளத்தில் குதிப்பது ஒரு காட்சியாக நடைபெற்றது. அக்காட்சியை மக்கள் திரண்டு வந்து கண்டனர். அதற்குக் கருமாறிப் பாய்ச்சல் என்பது பெயர். கருமாடிப் பாய்ச்சல் என்பதுதான் கருமாறிப் பாய்ச்சல் என்று தவறாக வழங்கப்பட்டது.

பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்தவரான காளமேகப்புலவர் கருமாறிப் பாய்ச்சலைக் கூறுகிறார் அவர் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்த ஆறு சிறப்புச் செய்திகளை அவர் கூறுகிறார். அவர் கூறிய செய்யுள் இது. “அப்பா குமரகோட்டக் கீரை செவிலிமேட் டுப் பாகற்காய், பருத்திக் குளநீர் – செப்புவா சற் காற்று, கம்பத் தடியில் தவம், கருமா றிப் பாய்ச்சல் யார்க்கும் இனிது.” – (தனிப்பாடல்) காளமேகப் புலவர் காலத்தில் காஞ்சிபுரக் குமரகோட்டத்துக் கொல்லையில் விளைந்த கீரையும், செவிலிமேட்டுக் கொல்லையில் விளைந்த பாகற்காயும் சுவையாக இருந்தனவாம். இப்போதும் மண் வளம் குன்றாமல் அவை சுவையாக இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. பருத்திக்குளம் இப்போது பாழடைந்துள்ளது. ஆகையால், அதன் நீர் இனிமையாக
இருக்கமுடியாது. செப்புவாசல் என்பது செப்பினால் செய்யப்பட்ட கோபுரவாயில், அங்குச் சென்று தங்கினால் காற்று இனிமையாக
வீசுமாம். அந்தச் செப்புவாசல் இப்போது இல்லை. கம்பத்தடியில் தவம் என்பது திருவேகம்பத்தில் உமையம்மையார் தவம் செய்தார் என்பது புராணக்கதை இந்தக் காட்சியை இன்றும் ஏகாம்பர ஈசுவரர் கோயிலில் காணலாம். கருமாறிப் பாய்ச்சல் என்பது, காமாட்சியம்மன் குளக்கரைமேல் உள்ள கருமாடி என்னும் மாடக் கோயிலின் உச்சியிலிருந்து குளத்தில் குதித்துப் பாய்வது, கருமாடிப் பாய்ச்சல் என்பது காளமேகப்புலவர் காலத்தில் கருமாறிப் பாய்ச்சல் என்று வழங்கப்பட்டது.

கருமாடிப் பாய்ச்சலைக் கருமாறிப் பாய்ச்சல் என்று நாலாயிரத் திவ்யப்பிரபந்த வியாக்கியானமும் கூறுகிறது. கருமாடி என்னும் சொல்வழக்கு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபட்டுக் கருமாறி என்று வழங்கியதை இதனால் அறிகிறோம். இவ்வாறு கன்னட மொழியும் தமிழில் கலப்பு நிகழ்த்திய மொழியே என்பதை அறியலாம்.உருது தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆண்டபோது, தெக்காணி உரு அவர்களால் ஓங்கியது. இதன் விளைவாக உருதுச் சொற்கள் மிகப்பலவாகத் தமிழில் கலந்தன.

இன்றும் தமிழில் வழக்கிலுள்ள உருதுச் சொற்கள் மிகப் பலவாகும். 181 உருதுச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டுள்ளேன். உருது – தமிழ் (சொற்பட்டியல் 181) கந்திரி (இரவலன்), கசர் (கொசுறு), குலாபு (நீர்மலர்), குலாம் (அடிமை), குந்தா (துமுக்கியடி), குரிசி (நாற்காலி), குஜிலி (அந்திக்கடை), சக்ரத்து (இலவசம்), சப்பிராசி (வேலையாள்), சுனாவணி (வேண்டுகோள் படிக்கை), சூத்தி (செருப்பு), செரு (துண்டுநிலம்), செலாவணி (பொருண்மாற்று), சேந்தி (கள்), சேர்பந்து (சாட்டை), சோகாரிகன் (வேட்டைக்காரன்), சோராவரி (கொள்ளை), செளடால் (டப்பாசு), டாணா (காவலிடம்), தகலுப்பு (ஏமாற்றுகை), தண்டை (சொந்தரை), தப்புத் தண்டா (குற்றம்), தமாம் (முழுவதும்), தமுக்கு (வார்ப்பறை), தர்கா (பள்ளிவாயில்), தர்பீத்து (பயிற்சி), தர்மா (ஊதியம்), தர்முஸ்தாஜர் (உட்குத்தகைக்காரன்), தரத்தூது (முயற்சி), தரப்பு (பக்கம்), தராசு (துலாக் கோல்), தரீப்பு (தீர்மானம்), தரோபஸ்து (முழுவதும்), தலாக் (மனைவிக்கு), சிறாயத்து (குச்சி), சுபேதார் (படையதிமான்), சூர்மா (கண்மை), செண்டா (கொடி), சேடை (நீர்க்கட்டு), சேம்பா (சளிநோய்), சோக்கு (பகட்டாரம்), சோட்டா (தடிக்கம்பு), சோல்னா (தொங்குபை), டக்கர் (குழப்பம்), டபேதார், டாபர் (கூட்டுபவன்), தண்டா (சண்டை), தண்டோரா (பறையறிவிப்பு), தபால் (அஞ்சல்), தமாஷ் (வேடிக்கை), தயார் (அணியம்), தர்ணா (மறியற்போராட்டம்), தர்மா (அறமன்றம்), தர்ஜமை (மொழிபெயர்ப்பு), தரப்தார் (கீழ்ப்பணிஞன்), தரா (வகை), தரி (நன்செய்நிலம்), தரோகா (பொய்), தலப்பு (ஊதியம்), தலாயத்து (ஏவலன்), தலால் (தரகன்), தாலவி (உசாவல்), தவுஜி (ஓய்வூதியம்), தஜ்வீஸ் (தீர்ப்பு), தஸ்தா (24 தாள்கள் கொண்ட தொகுதி), தஸ்தாவேஜூ (உரிமைச் சான்றாவணம்), தஸ்து (தாண்டிய இருப்புத் தொகை), தாக்கலா (கணக்கிற்பதிகை), தலாலி (தரகு), தவுடு (படையெடுப்பு), தனியா (அரைக்கச்சை), தஸ்கத் (கையெழுத்து), தஸ்துர் (வழக்கம்), தாக்கல் (குறிப்பீடு, அறிக்கை), தாக்கீது (உத்தரவு), தாசில்தார் (வட்டாட்சியர்), தாதி (முறையீட்டாளன்), தாபிதா (பட்டாடை), தபேதார் (சாரியன், பின்னடையன்), தமாஷ் (நேர்ப்பகிர்வு), தாயத்து (சுருள்தகடு), தாரிப்பு (மதிப்பு), தாரோகா (ஏவல் தலைவன்), தாலுக்கா (வட்டம்), தாளா (ஒப்பு), திக்குறு (புனமுருங்கை), திண்டேல் (கப்பல் கண்காணி), தில்பசந்து (உயரொட்டுமா), திவான் (அரசிறையதிகாரி), தீன் (மதம்), துனியா (நாடு), துபாஷ் (இருமொழிவல்லான்), மொழியெர்ப்பாளன், தும்பால் (கொடை), துரஸ்து (தூய்மை), தாசில் (வட்டாட்சி), தாத்து (முறையீடு), தாதுபிராது (அறிகுறி), தாபே (பின்பற்றி), தஹசீல் (நிலவரித்தண்டல்), தாம் (விலை), தாமேஷா (ஈவு), தாயி (முறையீட்டாளன்), தாரிக் (நாள்), தாலாப்பு (குளம்), தாவா (வேண்டுகை), தாஜா (புதியது), திகர் (வேறு), திம்மாக்கு (வீண்பெருமை), திவால் (பணகொடி), தினிசு (பொருள்வகை), தீன்தார் (அழிவு), துபாரா (இருமுறை), துராய் (முத்துத்தலையணி), தேக்சா (குடுவி, குடக்கலம்), பிராது (முறையீடு), பீடி (இலைச்சுருட்டு), புகார் (பெருங்கூச்சல், முறையீடு), பில்லை (தலைவல்லை), புதினா (ஈயெச்சக்கீரை), பூரி (மரப்பூதி, பூதி), பேசரி (மூக்கொட்டி), பேட்டி (நேருரை), பேமானி (மானமிலி), பேஷ் (மிகநன்று), பைசா (காசு), போதை (வெறிமயக்கம்), மசூதி (பள்ளிவாயில்), பூந்தி (பொடிக்கோளி), பேக்கு (மடையன்), பேட்டா (படிப்பயணம்), பேடி (விலங்கு), பேஜார் (சோர்வு), பைசல் (தீர்வு), போணி (முதன்மாறு), மகால் (அரண்மனை), மண்டி (பெருவிற்பகம்), மசோதா (சட்டமுதல் முந்தாவணம்), மத்தாப்பு (தீப்பூ), மாகாணம் (மாநிலம்), மார்வாரி (வட்டியீட்டு), மிராசுதார் (முகமையன்), மைசூர்ப்பாகு (கண்டப்பாகு), மைனா (நாகண வாய்ப்புள்), மெளசு (கவர்ச்சி), ரப்பு (இழையோட்டுகை), ரேக்கு (ஒள்ளிதழ், பூவிதழ்), லத்தி (குறுந்தடி), லாடம் (குளம்பணி), லோலாக்கு (தொங்கணி), வசூல் (தொகுத்தல், தண்டல்), வாய்தா (தவணை), விலாவரி (முழுவிளக்கம்), ஜரூர் (விரைவு, கடிது), மல் (பெல்லி), மாஞ்சா (ஆடிப்பொடிப்பயன்), மாஜி (முந்தின), முண்டா (தோள்), மைதா (மைதாமா), மோஸ்தர் (எழிற்பாங்கு), ரகம் (வகை), ராட்டை (இராட்டினம்), ருசு, ருஜூ (மெய்ப்பிப்பு), ரேக்ளா (ஓரியனுர்தி), லாகு (தாங்குதல்), லோட்டா (நீர்ச்செப்பு), வகையறா (முதலியன, பிற), வாபஸ் (திரும்பப்பெறல்), வாரிசு (மரபுரிமையன்), ஜமின்தார் (நிலக்கிழார்), ஜல்தி (விரைவு), ஜிம்கானா (பொதுவிளையாட்டிடம்), ஜிகினா (ஒண்தகடு), ஜீரா (தீங்கூழ்),

– முனைவர் ஔவை ந. அருள்,

இயக்குநர்,மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

தொடர்புக்கு dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment