Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-2

Written by Dr. Avvai N Arul

‘‘பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!”

=================================================================

 

அகராதியியலாளர்களின் கருத்துப்படி அயல்மொழிச் சொற்கள் அருந்தமிழில் பேச்சு வழக்கில் முதலில் கலந்து பிறகு எழுத்து வழக்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எழுத்து வழக்கில் அயன் மொழிச் சொற்கள் ஏற்கப்படுவதும், அவை பிறகு முறையே பேச்சு வழக்கிலும் இடம்பெற நேர்வது உண்டெனினும், அவற்றின் தொகை குறைவே.

 பிறமொழிச் செல்வாக்கால் ஆசாமி, இலாகா, கஜானா, முனிசீப் போன்ற சொற்கள் பேச்சு வழக்கில் நுழைந்தன. எழுத்து வழக்கில் மேற்கூறிய பொருள்களைக் குறித்து முன்னரே சொற்கள் உள்ளன. இருப்பினும் பேச்சு வழக்கு, பிறமொழிச் சொற்களை மட்டுமே கொண்டது. கால வளர்ச்சியில் எழுத்து வழக்கும் அச்சொற்களைப் பேச்சு வழக்கின் விளைவால் ஏற்றது. பேச்சு வழக்கின்மீது எழுத்து வழக்கின் அமைவு குறித்து எழுதுகையில், எழுத்து வழக்கும் பேச்சு வழக்கின்மீது எல்லா நிலைகளிலும் விளைவை ஏற்படுத்துகிறது. இருப்பினும், பேச்சு வழக்கு எழுத்து வழக்கின்மீது ஏற்படுத்தும் விளைவைவிட அளவில் குறைந்ததே. அதற்குக் காரணம் புதிய மாற்றங்கள், பேச்சு வழக்கில் அதன் ஏற்புத் தன்மையால் விரைந்து நடைபெறுகிறது என்பதே எழுத்து வழக்கு தன் இறுக்கத்தன்மையால் மெல்லவே மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறது. இங்கு எழுத்து வழக்கு, பேச்சு வழக்குமீது சொற்களஞ்சிய நிலையில் (Lexicon level) விளைந்ததை மட்டும் குறிக்கிறோம்.

 நாம் அருந்தும் சிற்றுண்டிகளின் பெயர்கள், அணியும் உடைகளின் பெயர்கள், அலுவலக நடைமுறைகள் என்ற நிலைகளில் தமிழ்ச் சொற்கள் பிறசொற்களால் வழக்கிழந்தன. எனினும், காலப் போக்கில் மொழி உணர்வுக்கு முதன்மை தரவேண்டுமெனத் தமிழாக்கங்களும் உருவாயின. இக்கலப்பின் அளவுபற்றிப் பேரறிஞர் அண்ணா குறிப்பிடுகையில், ‘‘கண்ணுக்கு மையிடுவது போலப் பிற மொழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மையிடுவது அதிகமானால் எப்படிக் கண்கள் கலங்குகின்றனவோ, அழகைக் கெடுத்து விடுகிறதோ, அதுபோலப் பிறமொழிகளை அதிகமாகக் கலப்பதில் நம் மொழிக்கு ஆபத்தான நிலைமையையே அக்கலப்பு உண்டாக்கும்” எனக் கருத்துரைத்தார். மேலும், தமிழில் பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றிருந்த அவல நிலை மாறி, நல்ல தமிழ்ச் சொற்கள் கையாளப்படுவதையும் கண்டு தமக்கே உரிய நகைச்சுவைப் பாங்கில், இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ‘‘மகாஜனங்களைத்தான் கண்டேனே ஒழிய, மக்களைக் காணவில்லை; அக்கிராசனர் தலைமையில்தான் பேசியிருக்கின்றேனே தவிரத் தலைவர் தலைமையில் நான் பேசியதில்லை.

பிரசங்கம் கேட்டிருக்கிறேனே தவிரச் சொற் பொழிவைக் கேட்டதில்லை. தவமாய்த் தவம் கிடந்து இப்பொழுது அவற்றைச் சந்திக்கிறேன்” என்றார் அண்ணா. தமிழ்ச் சொல்லாக்கங்கள் உருவாவதற்கு முன்னர்ச் சட்டப் பேரவையைச் ‘சட்ட நிரூபண சபை’ என்றும், உயிரியல் வனத்தை ‘மிருகக் காட்சி’ சாலை – ‘உயிர்க் காலேஜ்’ என்றும், அருங்காட்சியகத்தைச் ‘செத்த காலேஜ்’ என்றும் அழைத்து வந்ததை நாம் மறப்பதற்கில்லை. தலைமைச் செயலகம், மேலவை, பேரவை, தேர்தல், வேட்பாளர், வேட்பு மனு, வாக்கு – என்றெல்லாம் இன்று வழங்கப்படும் சொற்கள் புதிய சொல்லாக்கங்களே, உறுப்பினர் என்று எளிதாக இன்று அனைவரும் எழுதும் சொல்லை உருவாக்க மகாகவி பாரதியார் தாம்பட்ட முயற்சியை வருந்திக் கூறியது நோக்கத்தக்கது.

 “நடுவிலே இரசமான வார்த்தை மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ சரியான வார்த்தையில்லை. அங்கத்தான் கட்டிவராது. ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால், பொது ஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணிநேரம் யோசித்துப் பார்த்தேன். ‘உறுப்பாள்’ என எவற்றையெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக மெம்பர் என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆற அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து, மற்றொரு முறை சொல்கிறேன்” என்று பாரதியாரே பல்வேறு சொற்களைப் படைத்துத் தமிழ் மொழிக்கு உரம் ஊட்ட முயன்றதும் அந்நாளைய மொழியுணர்வைக் காட்டுகிறது.

  இவ்வாறு புதிய சொல்லாக்கங்களால் தமிழ்ச் சொற்கூட்டம் பெருகிய போதிலும், தமிழில் கலந்த பிறமொழிச் சொற்களை அறவே நீக்குதல் இயலாததாயிற்று. பிறமொழிச் சொற்களிலும் தமிழ் ஒலிப்பில் ஓரசை, ஈரசையில் அமையும் சொற்கள் தமிழிலேயே நிலைத்து விடுமோ என்று ஆராய வேண்டும். சான்றாக, கார், ஸ்டவ், ஸ்விட்ச், ஸ்டேண்ட், பல்பு, ஏலம், கொய்யா, அன்னாசி, ஆரஞ்ச், பஸ், லாரி, ஆட்டோ, டைம் போன்ற சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்ற எண்ணத்தையே உருவாக்காமல் தமிழில் எளியோர் நிலையிலும் இயல்பாகக் கலந்து வழக்கில் நிலைக்கின்றன.

தமிழ்ச் சொற்களுக்குரிய வேற்றுமை உருபுகளையும் அயன்மொழிச் சொற்களோடு இணைத்து, டயரில் காற்றில்லை, சைக்கிளுக்கு பிரேக் இல்லை, பிராப்ளத்துக்கு ஒரு வழியில்லை, டைமுக்கு வரவில்லை என்றெல்லாம் பேசுவது அச்சொற்களை அயன்மையாகக் கருதாமையால், தமிழ் உருபுகளோடு இணைபவையாகக் கொண்டனர் என்று மொழியறிஞர் கூறுவர். ‘‘தம்பி பலவற்றை நான் எழுதியபிறகு அவற்றில் பிறமொழிச் சொற்களின் கலப்பையெண்ணி வருந்தியுள்ளேன். என்னால் இயன்றது அவ்வளவுதான். நீயாவது பிறமொழிக் கலப்பை நீக்கிப் பேசவும் எழுதவும் பழகு!” என்றார்  பேரறிஞர் அண்ணா.

 

இவ்வாறு தமிழில் இடம்பெற்ற அயன்மொழிச் சொற்களைத் தொகுப்பது, தொகுத்ததைத் தொடர்ந்து ஆராய்வதாகிய பணியை மொழியறிஞர் தெ.பொ.மீ. மறைமலையடிகளாருக்கு மாற்றாக மொழியியல் நிலையில் நடத்தினார். தெ.பொ.மீ. இதுபற்றிக் குறிப்பிடும் போது, ‘‘பன்னெடுங்காலமாகப் பிறமொழி பேசும் மக்களோடு நேர்ந்த தொடர்பால் பல சொற்கள் தமிழிலே புகுந்து இன்றைய வழக்கிலும் நிலைபெற்றன என்று முன்னரே குறித்தோம். இது போலவே தமிழ்ச் சொற்களும் பிறமொழிகளில் புகுந்தன. இவ்வகையான ஊடாட்டத்தைப் பற்றித் தமிழ்மொழி வரலாறு என்னும் நூலில், “தமிழ்மொழியின் புறநிலை வரலாறு” என்ற தலைப்பில் ஓரளவு விளக்கியுள்ளேன். தற்போது உசுமானியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் என்னுடைய மாணவர்களுள் ஒருவரான டி.எஸ்.மாணிக்கம், தமிழில் காணப் பெறும் பிறமொழிச் சொற்கள் பற்றி ஆராய்ந்து, எவ்வாறு கிரேக்கர், உரோமானியர், பாரசீகத்தார், அரபியர், யூதர், போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர். ஆங்கிலேயர், சிங்களவர், மலேயர், சீனர் ஆகிய பிற நாட்டினரின் தொடர்பினை இச்சொற்கள் புலப்படுத்தி நிற்கின்றன என்பதைக் கண்டு விளக்கியுள்ளார்.

 பிறநாட்டினர் தொடர்பினைப் பற்றிக் கூறும்போது, தமிழகத்தில் நம்மோடு வாழும் மலையாளத்தார், கன்னடர், தெலுங்கர், மராத்தியர், உருது பேசுவோர் மற்றும் வட இந்தியாவிலேயே வாழ்வோர் ஆகியோர் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. ஆந்திரப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பராவ் ஆங்கிலத்தில் காணப்பெறும் இந்தியமொழிச் சொற்கள் பற்றி ஆராய்ந்திருக்கிறார். இவ்வொன்றினைத் தவிரப் பிற மொழிகளில் காணப்பெறும் தமிழ்ச்சொற்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியை இனிமேல் நாம் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இவ்வகை ஆராய்ச்சிக்குப் பிறமொழியாளரிடையே தமிழ்ப்பயிற்சியும், தமிழரிடையே பிறமொழி அறிவும் பெருக வேண்டும் எனத் ‘தமிழும் பிற பண்பாடும்’ என்ற நூலில் தெ. பொ.மீ. எழுதியுள்ளார்.

 பிறமொழிகளில் தமிழ்ச் சொல்லாட்சி பற்றிப் பேராசிரியர் இராமச்சந்திரன் ஆராயும்போது இக்கருத்தையே, ‘அறிவியல் வளத்தாலும் வாணிக வளத்தாலும் தொழில்துறை வளத்தாலும் விரைவாக வளர்ச்சியும், முன்னேற்றமுமடையும் நாடுகளே இன்று உலக அரங்கில் சிறப்புடைய நாடுகளென’ப் பாராட்டப்படுகின்றன. தமிழ்நாட்டோடு வாணிகத்தொடர்பு கொண்ட மேலை நாட்டு வாணிகர்கள், தங்கள் மொழிகளில் தமிழ்நாட்டுப் பொருள்களைக் குறிப்பதற்குரிய பெயர்கள் தம் மொழிகளில் இல்லாத காரணத்தால், தமிழ்ச் சொற்களையே ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களானார்கள். பல சொற்கள் தமிழ்மொழியினின்று நேராகவும், சில சொற்கள் மலையாளம், தெலுங்கு, ஈபுரு மொழிகள் மூலமாகவும் இரவல் சொற்களாக ஆங்கிலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனால், ஆங்கிலம் வளமுடைய – செழிப்பிற்குரிய மொழியாக மாறி விட்டது என்று கூறும் கருத்து நாம் நினைக்கத்தக்கது.

 ஆங்கிலமொழி அறிஞர்கள் தங்கள் மொழியில் அயற்சொற்கள் விரவுவதைக் குறையாகக் கருதாமல் மொழிக்கு ஊட்டமாகவே கருதினர். அயற்சொற்களின் பொருள். மூலம், வரலாறு, சிறப்பு ஆகியவற்றை விளக்கித் தனித்தனியான அகரமுதலிகளையும் பதிப்பித்துள்ளனர். சென்னையில் ஆட்சித்துறையில் பணிசெய்து ஓய்வு பெற்ற ஆங்கிலேயே அறிஞர் பர்னலும், அவருடைய நண்பர் யூல் என்பாரும் தொகுத்த ‘ஆப்சன் ஜாப்சன்’ என்னும் அகராதி (Glossary of Colloquial Anglo – Indian Words and phrases of General terms, Etymological and Discussive) துணைத்தலைப்புப் பெற்ற அந்த நூலில், மொழிக்கலப்புப் பற்றிய ஆய்வுரையில் ஆங்கிலத்தில் இந்திய மொழிகளிலிருந்து தமிழ் உட்படப் புகுந்துள்ள அயன்மொழிச் சொற்கள் யாவும் முதலில் ஐரோப்பிய மத்திய ஆசிய மொழிகளிலிருந்து, வாணிகம், அரசியல் மேலாண்மைத் தொடர்பால் இந்திய மொழிகளில் முதலில் இடம் பெற்றுப் பிறகு இந்திய மொழிகளின் செல்வாக்கால் ஆங்கிலத்தில் கலந்தன என்று விளக்கப்படுகிறது. இவற்றில் சிறப்பாகப் போர்த்துகீசியச் சொற்கள் நேரடியாக ஆங்கிலத்தில் கலக்காமல், இந்திய மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்தில் புகுந்தன என்பர்.

இந்நிலையில், ‘‘ஒரு மொழியோ, ஒரு வடிவமோ எவ்வளவு பழையது. தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அந்த மொழியைச் சீர்திருத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது அதன் உண்மைத்தத்துவமாகும்.” என்று பகுத்தறிவுத் தந்தை பெரியார் கூறியதையும் நினைக்க வேண்டும்.

இவ்வாறு அறிஞர்கள் ஆங்காங்கே கூறிய விளக்கங்களால் இன்றைய நிலையில் மொழிக்கலப்பு – அன்றாட வழக்கில் ஆங்கிலச் சொற்கள் – வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மொழிச் சொற்கள் பயின்ற நிலையை ஓரளவு தொகுத்துக் காணலாம்.

–  முனைவர் ஔவை ந.அருள்,

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு அரசு

 

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment