Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-18

Written by Dr. Avvai N Arul

கலப்பு மொழி கன்னல் மொழியாகக் காட்சியளிக்கிறதே..!

கல்விக்கூடங்களில்…
கல்விக்கூடங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வரையறுக்கப்பட்ட கல்வி முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன. ஆங்கிலம் பயிற்று மொழியாகவே (Medium of Instruction) எங்கும் எளிதில் உள்ளதென்றால் மிகையாகாது. ஏறத்தாழ இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த நிலைதான். ஆங்கில ஆட்சிக்கு அகப்பட்ட நாடுகள் அனைத்திலும் இந்த அவலம் உண்டு.
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் வாயிலாகப் பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புக்குச் செல்வாக்கு மிகுதியாக உள்ளது. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள வகுப்பிலே பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் இந்நாட்டில் முனைந்து பாடுபடுகிறார்கள்.
ஆங்கிலம் அறிவு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுதல் பொருந்தும் அது அந்த நிலையில் இன்றியமையாதது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடு விளங்க வேண்டும் என்று கூறும்போதுதான் ஆங்கிலத்தின் மீது உள்ள மோகம், தேம்சு நதிக்கரையில் உள்ளவர்களின் பற்றைவிடப் பெரிது என்று தெரிகிறது. இதன் பயனாக நாட்டில் இளைஞர்களின் வாழ்வில் விளையும் தீமை எத்தகையது என்பதை அவர்கள் பார்ப்பதே இல்லை.
தமிழகத்தில் மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்து வருவது கண்கூடு. இதன் விளைவாக மாணவப் பருவத்திலிருந்தே தாய்மொழியில் சிந்திக்கும் வழக்கம் குறைந்து விடுகிறது. எப்பொருளையும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே அறிமுகப்படுத்தும் இக்கல்வி முறை, ஆங்கிலச் சொற்களைத் தாய்மொழியில் கலக்கவும் வழி வகுக்கிறது.
Uniform, Slate, Tiffin Box, Pen, Lace, Socks, Water Bag, School Bag, Book, Pencil, Rubber எனப் பல ஆங்கிலச்சொற்களை இளஞ்சிறார்களும் பெற்றோர்களும் தமிழாகவே எண்ணித் தமிழைப் போல் பயன்படுத்துகின்றனர்.
பள்ளிகளில் கல்விமுறையில் மட்டுமின்றிப் பேச்சுமொழியில் ஆங்கிலம் பெருமளவில் கலந்து உள்ளது.
Chalk Piece, Bath Room, Miss, Board, Prayer, Friend, Table, Desk, Revision, Sheet, Portion, Master, Tuition, Duster, Interval, Exam எனப்பல சொற்களை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆங்கிலப் பயிற்று முறை, ஆங்கிலச் சொற்களின் கலப்பைப் பெருக்குவதோடு மட்டுமின்றித் தாய்மொழிப் பயிற்சியையும், தாய்மொழிச் சொற்களை அறிந்துகொள்ளும் வாயில்களையும் அடைத்துவிடுகின்றது.
கல்லூரிகளில் பள்ளிகளைக்காட்டிலும், ஆங்கிலச் சொற்புழக்கம் அதிகம் எனலாம். பாடத் திட்டங்கள், ஆங்கில மொழியில் அதிகமாக இடம் பெற்றிருப்பது இதற்குரிய முதன்மையான காரணம். பாடத் திட்டத்தில் ஆங்கிலத்தில் படித்தும், எழுதியும் பழகிவிடும் மாணவர்களும், ஆசிரியர்களும் பழகும் இடங்களிலும் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தும் போக்கினைக் காணலாம். Principal, Professor, Lecturer, Laboratory, ‘Cut’ அடித்தல், ‘Bit’ அடித்தல், Fail, Pass, Arrears, T.C., Degree, Library, Attender, Syllabus என்பவை கல்லூரிகளில் அன்றாட வழக்கில் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களுக்குச் சில சான்றுகள். பள்ளிச் சிறார்களுக்குப் பழகிய சொற்களை விலக்கித் தாய்மொழியில் புரியவைக்கும் கடமை பெற்றோர் முதல் ஆசிரியர் வரையில் அனைவருக்கும் உண்டு. இருப்பினும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாய்மொழிச் சிந்தனை குறைந்தவர்களாக இருப்பதாலும், சிறார்களுக்குப் புரியும்மொழியில் பேசுவதே போதுமென்ற எண்ணத்தினாலும் இத்தகைய மொழிக் கலப்புத் தடுக்க இயலாததாகிறது.
இக்காரணங்களைவிடவும் தன் குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டு மகிழும் ஆங்கில மதிப்புயர்வு, பெற்றோர்களிடத்தில் மிகுந்துள்ளதே மொழிக்கலப்பு நிகழ்வதற்குப் பெருங்காரணமாகக் கொள்ளலாம். ஆங்கிலம் வாழ்நிலைக்கு மதிப்பூட்டும் அடையாளமாகி விட்டது.
மாணவர்கள் ஆங்கிலத்தைப் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் முறை இங்குச் சிந்திக்க வேண்டிய ஒன்று. தமிழின் ஒலிக்குறிப்புகளை ஆங்கிலத்தோடு இணைத்துப் பேசும் புதியமுறை வேகமாக வளர்ந்து வருகிறது.
‘கம்’டா (come‘டா’), ‘வாட்’பா (What ‘பா’), ‘எஸ்’யா (Yes ‘யா’) என டா, பா, யா, தமிழ் ஒலிகளை ஆங்கிலச் சொற்களோடு இணைத்தும் மாணவர்கள் பேசி வருகின்றனர்.
கல்லூரி நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். இவர்கள் தாய்மொழியைப் பற்றியும், ஆங்கிலத்தைப் பற்றியும் சிந்தனை செலுத்திப் பிற மொழிக் கலப்பை நீக்குதலில் தனியார்வம் காட்டவேண்டும்.
ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுத் தமிழர்பட்ட தொல்லைகளைவிட ஆங்கிலத்துக்கு அடிமைப்பட்டுத் தமிழ் இளைஞர் படும் தொல்லைகள் மிகுதியாக உள்ளன. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் அல்லர் அறிவு மொழியாகிய ஆங்கிலமும் அன்று தமிழ்ப்பற்று இல்லாத தமிழர்களுக்கு உள்ள ஆங்கில மோகமே ஆகும்.
கற்றவர்கள் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும்போது, அவர்கள் கூறும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அவர்கள் அறிந்திருக்கக்கூடும். இருப்பினும், வழக்கத்தில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை.
ஐரோப்பிய மாணவர்களுக்குத் தம் தாய் மொழியைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை இல்லை. தன்குஞ்சு பொன்குஞ்சு என்னும் காக்கைகளாக உள்ளனர். தமிழர்களோ பொன்குஞ்சு பெற்றும் ஏங்கும் பேதை நெஞ்சம் உடையவர்களாக உள்ளனர். தமிழர்களில் பெரும்பாலோர்க்கு மொழிப்பற்று இல்லை. (வீட்டுப் பெயர்கள், கடைப் பெயர்கள், விற்பனைச் சீட்டுகள், கடிதத் தலைப்புகள், கடித முகவரிகள், அளவளாவும் பேச்சுகள் முதலியவற்றைக் காணில் இந்த உண்மை விளங்கும்) இந்திய நாட்டிலேயே மொழிப்பற்று உடைய படித்த தமிழருள் பலருக்குத் தம் தாய்மொழி எந்தக் கருத்தையும் உணர்த்தும் ஆற்றல் வாய்ந்த அருங்கலையாக விளங்க வல்லது என்ற நம்பிக்கை இல்லை. ஆங்கிலச் சொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்தமைக்கு இச்செயற்பாடும் ஒரு காரணமாக உள்ளது.
எடுத்துக்காட்டாக,
Cinema, Shop, Theatre, Purchase, Marker, Advancement, Road, Doctor, TV, Serial, Fees, Drainage, Drama போன்ற பல ஆங்கிலச் சொற்கள் பலராலும் பயன்படுத்தப்படுதலை நாம் காணலாம். இச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்கள் எளிதில் கிடைப்பன. வழக்கத்திலும் சில இருந்து வந்தன. இருப்பினும், அன்றாட வழக்கில் இவற்றைப் பயன்படுத்துவது கற்றவர்களிடையே இயல்பாக இருந்து வருகிறது. இந்நிலை மாறிடின், ஆங்கிலச் சொற்கலப்பைக் குறைக்க முடியும்.
அலுவலகங்களில்…
அலுவலகங்களில் அன்றாட வழக்கில் ஆங்கிலச் சொற்கள் மிகப் பலவாக வழங்கப்படுகின்றன. அலுவலகப் பதிவு முறைகள், பதிவேடுகள், கோப்புகள் போன்றவை அரசின் ஆணைகளின்படித் தமிழில் பேணப்பட்டுவந்த போதிலும், பேச்சு வழக்கில் இன்னமும் ஆங்கிலம் இருந்து வருகிறது.
Attendance, Sign, Late Permission, Telephone, Memo, Note, File, Promotion, Increment, Paper, Report, Statement, Pay Advance, Leave, Medical Leave, Casual Leave, Fund, Scheme, Camp, Inspection, Office, Conference Meeting, Urgent, Section Officer, Under Secretary, Deputy Secretary, Action, Suspense, Dismiss, Explanation, Enquiry Commission எனப்பல ஆங்கிலச் சொற்களை அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திற்குமுரிய பதிவுகள் தமிழில் இருந்த போதிலும், பேச்சு வழக்கில் ஆங்கிலத்திலேயே புலப்படுத்தும் போக்குக் குறிப்பிடத்தக்கது. எனவே, அலுவலகங்களின் அன்றாட வழக்கிலும் ஆங்கிலம் தன் செல்வாக்கைச் செலுத்தி வருகிறது என்பதை அறியலாம். ‘அரசியலார் அலுவலகம், அறமன்றம் இங்கெல்லாம் அலுவல் பெற்றீர்! உரையனைத்தும் ஆங்கிலமோ?’ எனப் புரட்சிக்கவிஞர் வினாத் தொடுத்தும், நிலைமை இன்னும் மாறவில்லை என எண்ணிட வேண்டியுள்ளது.
பொழுதுபோக்கிடங்களில்…
பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மட்டுமன்றிப் பொழுது போக்குமிடங்களிலும் ஆங்கிலச் சொற்கள் அன்றாட வழக்கில் மிகுந்திருத்தலை அறியலாம்.
Walking, Hello, Jogging, Shopping, Strain, Side Seeing, Heart Attack, Driving, Swimming, Hockey, Appointment, Diving, Tennis Club / Ground, Party, Bun, Meeting Hall, Snacks, Lecture, Friend, Speaker, Complaint, Matter, Aim, Speech, Small Recreation, Switch, Employment, Aim Large போன்ற ஆங்கிலச் சொற்கள் பொழுது போக்குமிடங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, மக்களால் ஆங்கிலச் சொற்கள் தடையின்றிப் பேசப்படுகின்றன. தமிழில் புரிந்த, தெரிந்த ஒரு பொருளைக் குறிப்பிடவும், விளக்கவும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. இவ்விடங்களில் மொழியைப் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை என்றே கூறலாம். இதன் விளைவாகத் தாய்மொழியின் பயன்பாடு குறைந்து ஆங்கிலச் சொற்களின் வரவு அதிகமாகிறது.
வீதிகளில் பேருந்துகளில்…
“தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை” எனக் கவலையுற்றார் புரட்சிக்கவிஞர். இன்றும் தமிழகத்தில் வீதிகளின் பெயர்கள் பலவும் பிறமொழிகளில் அமைந்துள்ளன.
Luz, Church Road, Armenian Street, Flat, Anderson Street, Avenue, Villa, Sector, Apartments, Colony என்பன வீதிகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் குறிப்பதற்காக வழங்கப்பட்டு வரும் ஆங்கிலச் சொற்கள். இவ்வாறு கூறும் வழக்கம் இன்னும் நீங்கவில்லை. வீதிகளில் உள்ள கடைகளில், நிறுவனங்களில் இன்னமும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகளே இருந்து வருகின்றன.
Readymade Shop, Jewellery, Hardwares, Hospital, Doctor, Guest, Telephone Booth இவை கடை வீதிகளில் வீற்றிருக்கும் ஆங்கிலப் பெயர்களுக்குச் சில சான்றுகள். இவ்வாங்கிலப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதி வைக்கும் முறை, மக்களின் தாய்மொழிப் பற்றின்மையையும், மொழியறிவின்மையையும் காட்டுவதாகவே உள்ளது. “உணவுதரு விடுதிதனைக் கிளப்பென வேண்டும் போலும் துணிக்கடைக்குச் ‘சில்க் ஷாப்’ எனும் பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்” எனப் புரட்சிக்கவிஞர் எள்ளி நகையாடி எத்தனையோ ஆண்டுகள் கழிந்தன. இன்னமும் இனிய தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படாத நிலைதான் உள்ளது.
பேருந்துகளில் வழங்கப்படும் ஆங்கிலச் சொற்களைக் காண்போம்…
Stopping, Checking, Break-down, Bus, Inspector, Token, Foot-board, Driver, Change, Conductor, Overtake, Depot, Ticket, Left, Time keeper, Stage, Jerking, Hold-on, Accident, Bata, Ladies, Whistle, Excess Collection, Up, Pass, Down Punch. பேருந்துத் தொடர்பாக மட்டுமே இத்தனை சொற்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. பேருந்தில் உள்ள Tyre, Gear, Steering, Break, Air, Diesel என்பன போன்ற பல சொற்கள் தொழில்நுட்பம் வாய்ந்தவையெனக் கருதப்பட்டு ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டு வருகின்றன. பேருந்துத் தொடர்பான மேற்குறிப்பிட்ட பல சொற்களைத் தமிழில் தடையின்றிப் பேசமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆங்கிலத்தை அகற்ற முயலா மக்கள் இத்தனை சொற்களை இன்னமும் வழங்கிவருகின்றனர்.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்தையார் இலக்கியக் கூட்டத்தில் பேசும்போது நயமாக ஒரு குறிப்பினைச் சுட்டிக் காட்டினார். விடியற்காலையில் ஒரு குக்கிராமத்தில் தான் சீருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே ஒருமுறை நிறுத்தி முகவரியை வினவிவிட்டுப் புறப்படும்போது, ஒரு மூதாட்டி தனது பெயர்த்தியிடம் சாணியை Thick-ஆக் கரைடி என்று சொன்னதைக் கேட்டு வியந்து ஆங்கிலம் எவ்வளவு Thick-ஆக நம்முள் ஊடுருவியிருக்கிறது என்று குறிப்பிட்டதை நான் இப்போது நினைவுகூர்கிறேன்.
ஆங்கிலத்தை எளிதாக ஒதுக்க முடியாது. காரணம், ஆங்கில மொழியில் பேசுவது Habit-ஆகவே மாறிவிட்டது. அவ்வளவு எளிதில்லை. அந்த ஆங்கிலச் சொல்லில் H-ஐ எடுங்கள் ‘a bit’ remains, அந்த a-ஐ எடுங்கள் ‘bit’ remains, அந்த b-ஐ எடுங்கள் ‘it’ remains என்று அடிக்கடி என் அப்பா வேடிக்கையாகச் சொல்வதும் குறிப்பிடத் தக்கதாகும்.

முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment