Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-17

Written by Dr. Avvai N Arul

அரியணை மொழியே அனைவரையும் ஈர்த்தது..!

=================================================

 ‘ஊர் கூடித் தேர் இழுப்போம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனித்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் பா.இறையரசன் எனக்கு எழுதிய மடல் சிந்திக்கத்தக்கது.

   “தமிழறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் எனப்பலரும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்தால் உண்டு நன்மை. ஆங்கிலம் தன்னை    வளர்த்துக்  கொள்ள  பிறமொழிச் சொற்களைப் பெற்று- தன்னில் கலப்படம் செய்து வளர்ந்தது பொருந்துமா என்று ஆய வேண்டும். வணிகம், சமயம், ஆட்சி, கல்வி, பயணம், இடப்பெயர்வு ஆகியவற்றால் மொழிக்கலப்பு, கடன் வாங்கல், மொழித் திரிபு நிகழ்கின்றன. ஆட்சியாளர்களால் அவரது மொழிச்சொற்கள் ஆளப்படுவோரிடம் விரைந்து பரவுவதுண்டு. அவ்வழிச் செல்வாக்குப் பெற்ற ஆங்கிலம், வளராத குறுமொழியாக இருந்ததால், இலத்தீனிலிருந்து பிறந்து / பிரிந்து பல மாற்றங்களைப் பெற்றுக் கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் இற்றைநிலை அடைந்துள்ளது. தாம் வென்ற சென்ற நாடுகளில் உள்ள அயல்மொழிச் சொற்களைக் கடன் பெற்று வளர்ந்தது. அவ்வாறு பிற மொழிச்சொற்களைத் தமிழ் கடன்பெற வேண்டுமா?

   பல்லாயிரம் ஆண்டு வளர்ச்சியும் தோண்டத் தோண்ட வற்றாமல் வழங்கும் கருவூலமாய்ச் சொல்வளமும் மொழி நலமும் மிக்கது தமிழ். மிகப்பெரிய செல்வவளம் மிக்க வணிகன், சிலநேரங்களில் கடன் வாங்குதல் போல், பிற மொழிச்சொற்களைக் கடன் வாங்கலாம். ஆனால், தன் மொழியின் திறத்தால் கலைச்சொல்லாக்க ஆளுமையால் புதிய புதிய கலைச் சொற்களைத் தன்னகத்திலிருந்தே தமிழ் உருவாக்கம் செய்ய வேண்டும்.  கடன் பெற்றே வாழ முயன்றால், இப்போது “தங்கிலிசு” எனும் நிலையில் உள்ள தமிழ் திரிநிலை மொழி ஆகிடும்.

அவ்வாறாகாமல் தடுக்க, பிற மொழிக்கலப்பைத் தடுப்பதும், தமிழில் பல்லாயிரம் கலைச்சொற்களை உருவாக்குவதும் வேண்டும். அதற்காகத் தமிழ் அறிஞர்கள், அறிவியலாளர்கள், மொழியியல் அறிஞர்கள், பன்மொழி ஆற்றல் பெற்றவர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தமிழக அரசினர் என அனைவரும் சேர்ந்து  ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் என்ற உங்கள் எழுத்து எப்போதும் பொருந்தும்.”

அதேநிலையில், மாற்றுக் கருத்தை மொழிபெயர்ப்பாளர் வத்சலா எழுதியிருந்தார்.

“பழந்தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் வேறு சொற்களைப் பயன்படுத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். 21-ம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தை உபயோகிப்போம், ஆனால், சொற்கள் மட்டும் தொல்காப்பியர் காலத்தவையாக இருக்க வேண்டும் என்றால் எப்படி? அகல் விளக்கும், பனை ஓலையும், எழுத்தாணியும் பயன்படுத்திய காலத்துச் சொற்கள் இந்த மின்னணு உலகில் யார் பயன்படுத்துவர்? அரசாங்கம் புகுத்த முயலலாம். மக்கள் ஏற்பரா? எவ்வளவு ஆண்டுகளாக அரசாங்கம் ‘பேருந்து’ என்றே கூறி வருகிறது. மக்களோ விடாப்பிடியாக ‘பஸ்’ என்றே கூறுகின்றனர். தமிழைத் தன்போல் விட்டாலும் அழியாது என்பதே என் கருத்து”.

இதற்கு மட்டும் நான் இப்படிச் சொல்ல விழைகிறேன்.

 பல்லாயிரம் ஆண்டுகளாக கண் காது, வாய், மூக்கு, அன்பு அறிவு, ஆறு, குளம்  என்பதுபோல பல்லாயிரக்கணக்கில் சொன்னவற்றை இன்றும் அப்படியேதான் பயன்படுத்துகின்றோம். அதில் என்ன பிழை. அது உண்மையில் சிறப்பு. பேன்ல, கொஞ்சம் ஆயில் போர் பண்ணுங்க என்பது 21 ஆம் நூற்றாண்டுத் தமிழா? தட்டைச் சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள் என்பன போலச் சொன்னால் தவறா? அப்புறம் விடாமல் இந்தப் ‘பேருந்தை’ திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். கூகுளில் ‘பேருந்து’ என்று இட்டுப்பாருங்கள். 1,520,000 தேடல் முடிவுகள் வருகின்றன. ‘பஸ்’ என்றிட்டால் 1,800,000 முடிவுகள் வருகின்றன.

பேச்சுவழக்கில் மக்கள் ‘வண்டி’ என்று சொல்வதும் வழக்கம். எல்லா மொழிகளிலும்  இரட்டை வழக்கு (எழுத்து மொழி – பேச்சுமொழி) உண்டு, தமிழில் இவ்வழக்கு சற்று கூடுதலான வேறுபாட்டைக் கொண்டதுதான். அதனாலும் சில மாறுபடுவதுண்டு. ஆங்கிலத்திலே பேசும்பொழுது commence என்று சொல்வதில்லை, ஆனால், அது எழுத்துமொழியில் பல இடங்களில் வழங்குவது. ஆங்கிலத்தில் முறையாக எழுதுமிடத்தில் gimme, lemme என்றெழுதுவதில்லை. இதுபோல பல்லாயிரக்கணக்கானச் சொல்லாட்சிகளைச் சொல்லமுடியும்.

  தமிழர்கள் தங்களுக்குத் தேவையான இக்கால உலகுக்கான சொற்களை அழகாக பல்லாயிரக்கணக்கில் ஆக்கிக்கொண்டே இருக்கின்றார்கள் (அறிவியல், பொறியியல், மருத்துவம்…). ஆனால், தாழ்வு மனப்பான்மை கொண்டு, பிறப்பு வளர்ப்பால் தாய்மொழியைத் தள்ளி வைக்கும் போலியாகவும், பகட்டாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோரால்தான் பலவும் மேலும் செல்வாக்குப் பெறாமல் இருக்கின்றது.

  ஆங்கிலத்தைவிட அதிகமாகப் பேசப்படுகின்ற மொழி சீனமாகும். தற்போது உலக அளவில் 200 கோடிக்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தைப் பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்ற சூழலில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலம் உலகிலேயே அதிகமாகப் பேசப்படும் மூன்றாவது மொழியாகும்.

   அயர்லாந்து விடுதலை பெற்றதாக அறிவித்தபோது, இங்கிலாந்திலிருந்து தனது தொடர்புகளை அறுத்துக்கொள்ள முயன்றது. இங்கிலாந்திற்கும் தமக்கும் இடையேயான இறுதி உறவான ஆங்கில மொழியையும் துண்டித்து விடுங்கள் ‘ஐரிசு’ மொழியையே பேசுங்கள் என்று கூறும் பலகைகள் ஆங்காங்கே ஐரிசு நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆனால், அந்தப் பலகைகளும் வழியின்றி ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தன. நீக்கமற நிறைந்து விடும் ஆங்கிலத்தின் நிலையை, வளர்ச்சியை இதன்வழி அறியலாம். எத்தியோப்பியாவில் ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆட்சிமொழிகளாக உள்ளன. எதிர்காலத்தில் ஆங்கிலத்திலேயே முழுவதும் நடத்தும் திட்டங்கள் உள்ளன.

இவ்வாறு உலக அரங்கில் ஆங்கிலம் தனிச் செல்வாக்கும், பிற மொழிகளில் ஊடாட்டம் நிகழ்த்தும் வல்லமையும் பெற்ற மொழியாக விளங்குகிறது.

   நம் இந்தியப் பெருநாட்டின் பதினெட்டு மொழிகளையும் 350 வட்டார மொழி வழக்குளையும் மக்கள் பேசுகின்றனர். ஆனால், ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவு கொண்டு எந்த ஒரு மொழியிலும் பேசிப் பழக முடியவில்லை. நமது மக்கள் தொகையில் 2 கோடி மக்கள் மட்டுமே பேசக்கூடிய ஆங்கிலம்தான் நமது ஒரே தொடர்பு வாயிலாக நிலவுகின்றது. இந்நிலை ஆங்கிலத்தின் இன்றியமையாத பெரும் பங்கினை எந்த நிலையிலும் செலுத்துகிறது. மனிதகுலம் மொழியைக் கருவியாகக் கொண்டே தனது சமுதாயக் கடமைகளை நிறைவேற்றி வருகிறது. இனங்கள் பலவாய், மொழிகள் பலவாய் இயங்குகின்ற நிலைகளில் மொழிக்கலப்புத் தவிர்க்க இயலாததாகின்றது. உயிருள்ள மொழிகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது, அவற்றுக்குள் கொடுக்கல் வாங்கல் நிகழ்கின்றன.

தமிழ்மொழியோடு பல மொழிகள் இவ்வுறவைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலமே இன்றுவரையில் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தமிழில் ஊடாட்டம் நிகழ்த்தும் மொழியாக இருந்து வருகிறது. இவ்வாறு கலந்த ஆங்கிலம், நம் அன்றாட வழக்குகளில் வல்லாண்மை செலுத்தி வருதலை வகை பிரித்தறிதலே இவ்வியலின் நோக்கமாகும். அரியணையில் அமர்ந்த மொழியை அனைவரும் அரவணைத்துத் தம்மை தொழும்பர்களாக மாற்றிக் கொண்டனர். எழுத்து வழக்கு, மக்கள் வழக்கு எனும் இரு பகுப்புகளில் ஆங்கிலச்சொற்களின் கலப்பு நிலைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  தொன்று தொட்டுத் தமிழ் இலக்கியம் பல இலக்கண நெறிகளுக்குட்பட்டு வளர்ந்து வந்தது. பிற்கால இலக்கியங்களிலும் அவற்றுக்கு முன்னர்த் தோன்றிய இலக்கியங்களிலும் பிறமொழிக் கலப்பு மிகுதியாகத் தொடங்கிற்று. இந்நிலைக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம், வடமொழிக் கலப்பை ஓரளவிற்குத் தடுத்தது எனினும், ஆங்கிலத்தின் நுழைவை முற்றிலுமாகத் தடுக்க இயலவில்லை. ஆங்கிலேயர் 300 ஆண்டுக்காலம் நம் நாட்டை ஆண்டனர். அவர்கள் நம் நாட்டிற்குக் கொண்டு வந்த புதிய துறைகள் வழியாக அத்துறைகளுக்குரிய சொற்கள் என்னும் முத்திரையோடு, ஆங்கிலச் சொற்கள் தமிழிற் கலந்தன. ‘சைக்கிள்’ மட்டுமல்லாது அதன் தொழில் நுட்பத் துணைப் பொறிகள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களாலேயே சுட்டப்பட்டதை எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

  சீட், வால்டியூப், பெல், மட்கார்டு, பிரேக், சீட்கவர், வீல் கோன், ரிம், செயின், போக்ஸ், செயின்கார்டு, பெடல், டைனமோ, டயர், லைட், டேஞ்சர்லைட், ஹாண்டில், ஸ்டேண்ட், கேரியர், பிரேக் ஒயர் என்ற ஆங்கிலச் சொற்கள் பேச்சு வழக்கில் இன்றும் நீங்காமல் நிலைத்துள்ளன. இவ்வாறு பல பொருள்கள் வந்தன போன்று தமிழிலக்கியத்திற்கும் சில இலக்கிய வடிவங்கள் ஆங்கிலத்திலிருந்து வந்து கலந்தன. இவ்வாறு வந்தவற்றில் முதன்மையானது நெடுங்கதையாகிய நாவல் என்னும் உரைநடை வடிவம் ஆகும்.

செய்யுளே தமிழ் என்ற நிலை மாறி, உரைநடை வடிவத்தில் தமிழ் வளரத் தொடங்கியபோது, பிறமொழிச் சொற்கள் கலக்க நேர்ந்தன. இக்கலப்பை நிகழ்த்துவதில் வடமொழியே முதலிடம் பெற்றிருந்தாலும், அடுத்த நிலையில் அண்மைக்காலம் வரையில் இவ்வுரைநடையில் ஆங்கிலச் சொற்கள் அதிகமாக இடம் பெற்று வருகின்றன எனக் கருதலாம். வட மொழி எதிர்ப்பினால், தனித்தமிழ் இயக்க எழுச்சியால் தமிழில் கலந்திருந்த வடமொழிச் சொற்கள் மறையத் தொடங்கின என மகிழ்ச்சியுறும் அதே நேரத்தில், ஆங்கிலச் சொற்கள் அந்த இடங்களில் அமர்ந்து கொள்வதை மறுக்க இயலாது. சான்றாக,

அவர் பிரபலமானவர் (வடமொழி)

அவர் புகழ்ப்பெற்றவர் (தாய்மொழி)

அவர் பேமசானவர் (ஆங்கிலம்)

‘பிரபலமானவர் என்ற வடசொல், பேமசானவர் என்ற ஆங்கிலச் சொல்லால் இடம் பெயர்கின்றது.‘ஆசீர்வாதம்’ என்ற வடசொல் வாழ்த்தாக மாறி, இப்பொழுது ‘பெஸ்ட் விஷஸ், கிரீட்டிங்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இடம் அளித்துள்ளது.

இத்தகைய ஆங்கிலக் கலப்பு இன்றைய புதினங்களிலும் கட்டுரைகளிலும் இடம் பெறுகிறது. பெரிதாகத் தமிழில் பரபரப்பாக விற்பனையாகும் புதினங்களில் இந்நிலையே உள்ளது. போற்றப்பட்ட எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் தான் எழுதிய ஒரு கதையில்கூட  337 சொற்களில் 36 சொற்கள் பிறமொழிச்சொற்கள் (ஏறத்தாழ 10.7%) இடம்பெற்றிருந்தன.  2619 எழுத்துகளில் 22 எழுத்துகள் கிரந்த எழுத்துகளாக அமைந்தன.

  தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் இதழ்களுக்கு ஆங்கிலத்திலே பெயரிட்டு, அதைத் தமிழ் எழுத்துகளிலேயே எழுதுவதும் உண்டு. ‘பாக்கெட் நாவல்’, ‘எ நாவல் டைம்’, ‘கிரைம் நாவல்’, ‘சஸ்பென்ஸ்’, ‘ஜாப் கைடு லைன்ஸ்’, ‘இந்தியா டுடே’ இவையனைத்தும் தமிழ் எழுத்துகளால் வழங்கப்பட்டு வரும் ஆங்கிலப் பெயர்கள். இவை மட்டுமின்றி இதழ்களில் வரும் தமிழ்க் கதைகளில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதும் அவல நிலை உள்ளது.

– முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment