Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-16

Written by Dr. Avvai N Arul

ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..!

 மொழிக் கொள்கை பற்றிய பூசல் நம்மிடையே பட்டிமன்றமாகவே ஒருவர் எடுத்து மொழியவும், மற்றவர் மறுத்துக் கூறவுமாக நடுவர் இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றிய பொருண்மையில் மற்ற மொழிகளிலிருந்து ஆங்கிலமொழிச் சொற்களைக் கடன் வாங்கி வளர்ந்த அனுபவத்தை ஒருவர் சுட்டிக் காட்டினால், அதை அறிவு நோக்கில் ஆய்ந்து, அந்த அனுபவம் தமிழுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என முடிவு செய்வதுதான். முறை. முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதைவிடுத்து ஏழை கடன் வாங்குவான் இரவலன் இரக்கிறான். அதற்காகச் செல்வந்தர்களும் கையேந்த வேண்டுமா?’ என்று வினவுவது மொழியியலுக்கு முறையாகாது. மொழியியல் வேறு வாழ்வியல் நடப்பு வேறு. உள்ளத்தில் உண்மையும், கடமையில் தெளிவும், நமது மொழி எல்லா நிலைகளிலும் எல்லோர்க்குமாக ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வும் நடைமுறையில் வளர்ச்சியை நாம் அனைவரிடமும் நல்லனவற்றைப் பெற வேண்டும் என்ற துடிப்பும் மேம்பட்டு வருகின்றன.

சென்ற வாரம் என் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை வினவினார்.
உலகில் பிறமொழிச் சொற்கள் கலக்காத மொழி ஏதுமில்லை. சீனம் பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை என்பது முற்றிலும் சரியான கருத்து அல்ல. கம்பன் பயன்படுத்திய ஐயோ என்ற சொல் இன்றும் அதே பொருளில் சீனத்தில் வழக்கிலுள்ளது. மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன (எ-டு: கடை) பிற மொழிகள் தமிழ்ச் சொற்களை ஏற்கும்போது பெருமிதம் கொள்ளும் நாம், தமிழ் பிற மொழிச் சொற்களை ஏற்கும்போது ஏன் வருந்த வேண்டும்? மொழி என்பது மக்கள் சார்ந்தது. அதை அறிஞர் சார்ந்த மொழியாகக் கருதித் தூய்மைப்படுத்த முனைந்தால் அது அழிந்து போகும் வாய்ப்பு வரும். பிராகிருதம் செப்பம் செய்யப்பட்ட சமசுகிருதமாகியதால்தான் வழக்கொழிந்தது.
அதேநிலையில், மாற்றாகவும் கருத்துரைக்கலாம். சிறிதளவு கலப்பு எல்லா மொழிகளிலும் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளன. தமிழைப்போல அதனை இலக்கணத்திலும் சேர்த்துக் கூறிய மொழிகள் உலகில் எத்தனை உள்ளன? அளவிறந்தும், தேவையற்றும் கலப்பது மொழியைச் சிதைக்கும். சிதைத்துத் திரிந்து அற்றும் போன மொழிகள் பல. உணவில் உப்பு இருந்தால் சுவை கூடும், ஆனால், உப்பாகக் கொட்டி வைத்தால் அது உணவன்று.
அதிகம் கலப்பதாகக் கருதப்படும் பல புதின, கதை எழுத்தாளர்களின் எழுத்துகளை அலசினாலும் அதில் கலப்பு குறைவே (5-15%). நான் அலசி இருக்கின்றேன். அக்கலப்புகள் குறைவாக இருந்திருந்தாலும் சுவை ஒன்றும் குன்றிவிடாது என்று என் நண்பர் கூறினார்.
கலப்பால் சிக்கல் இல்லை. இந்தக் கலப்பால் வேண்டுமென்றே ஓர் ஆங்கில, சமற்கிருத பிறமொழி மோகத்தை உண்டுபண்ணும் பண்பாட்டுப் புரட்டால்தான் எதிர்ப்புணர்வு. தாழ்வு மனப்பான்மை வலிந்தும் நுட்பமாயும் ஊட்டுவதைச் சிலர் எதிர்க்கின்றனர். அளவான கலப்பு என்றுமிருக்கும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழர்கள் தமிழில் சொல்லி மகிழ்பவர்கள் அது அவர்கள் விருப்பம்.
தூய்மை, தனித்தன்மை என்பன உயர்ந்த கூறுபாடுகளைக் குறிப்பிடும் சொற்கள். ஆனால், மொழித்துறையில் எது தூய்மை, எது தனித்தன்மை என்பதில் தெளிவு கண்டாக வேண்டும். கன்னித் தன்மைதான் தூய்மையுடையது என்பதில்லை. தாய்மையும் தூய்மையானதே. தனிமை வேறு, தனித்தன்மை வேறு. பலருடன் சேர்ந்து செயற்படும் பொழுதுதான் ஒருவரது தனித்தன்மை புலனாகிறது. அறிவு ஓரிடத்தில் தேங்காமல் நாளடைவில் மற்றைய கருத்துகளாகி, எண்ணுதற்கு எட்டாத எழிலார்ந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தழுவி நடைபெறுகின்றது. சமயம், தத்துவம், மொழியியல், கலை, பொருளாதாரம், வாணிகம், போக்குவரவு, அறிவியல், தொழில் நுட்பம், அணுவியல், மரபணுவியல், மின்னியல், கணினியியல், ஊடகவியல், வாழ்வியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் உலகின் எந்த மூலையில் வளர்ச்சிப் பொறி தட்டுப்பட்டாலும், அது மானிடத்தின் பொதுச் சொத்தாகி மலர்ந்த காலம் இன்றைய காலமாகும்.
வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நாகரிக வளர்ச்சியுடன் எல்லாக் காலத்திலும், எல்லா நாட்டினராலும், எல்லா இனத்தாராலும் உருவாக்கப்பட்ட அறிவுடைமை முழுமைக்கும் நாமும் உரிமை கொண்டாடும் வாய்ப்பு அமைந்துள்ளது.

ஊர்கூடித் தேரிழுக்கும் மக்கள் வெள்ளத்தில் நாமும் பங்கு கொள்ளும் மனப்பான்மையும் விளைநலங்களைப் பயன்படுத்தும் திறனும் நமக்கு வேண்டும். அறிவு வளர்ச்சியில் அயன்மை என்று ஒன்றும் இல்லை. நமக்கு ஏற்றது. ஏலாதது, தேவையானது, தேவையில்லாதது என்ற பாகுபாடு வேண்டுமானால் நாம் வகுத்துக் கொள்ளலாம். ஓர் இனத்தின் வாழ்வோடு. உணர்வோடு நெருங்கிய கலை, பண்பாடு, செயற்பாடு போன்றவை கூட மற்ற இனங்களின் தொடர்பால் மாற்றங்களைப் பெறுகின்றன.
‘‘உயிரோட்டமுள்ள நாகரிகம், வளரும் நாகரிகமாக ற்புறமும் வீசும் அலைகளை அரவணைத்து அவற்றின் மூலம் மேம்பட்டு முன்னேறிச் செல்லும் தகுதியுடையதாகத் திகழ வேண்டும். தாக்குதல் தொடாத இடத்தில் தாழிட்டுக் கொண்டு வாழக்கூடாது. தனது பின்னணியைத் தனக்கே வாய்த்த தனித்தன்மையைத் தமிழ் நிகழ்த்தி வந்த தரத்தை உரிய அளவில் நிலைநிறுத்திக் கொண்டு புதியவற்றுள், தக்கவற்றைத் தன்மயமாக்கிக் கொள்ளும் திறன், வளரும் இனத்திற்குத் தேவையான ஒன்றாகும்” என்று அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி, மொழித்தூய்மை, மொழிக்கலப்புப் பற்றிக் குறித்த கருத்துரைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கனவாகும். மொழி என்பது வழிபடுபொருளாய், எல்லையறு பரம்பொருளாய், உணர்ச்சிக் குவியலாய் எண்ணும் நிலையில், அதன் தூய்மை மட்டுமே மேலோங்கி நிற்கிறது.
வளர்ச்சிக்குரிய உயிருடையதாய் உலகத் தொடர்புப் பாலமாய் மொழியைக் கருதும் இந்நாளில் மாற்றங்களுக்கு உட்படுதலே உயிருணர்ச்சிக்கு அடையாளமாகிறது. என்ற நிலையைத் தவிர்க்க இயலாது. எனவே, மொழிக்கலப்பு இனத்தின் வளர்ச்சி நோக்கி நிகழும்போது, ஏற்புடையதாகவும், இனத்தின் குலைவுக்கும் தாழ்ச்சிக்கும் வழிவகுக்கும்போது நீக்கத்தக்கதாகவும் கருதலாம். இப்புதிய அணுகுமுறை மொழி வளர்ச்சிக்கு உலக நாடுகள் மேற்கொண்டு காட்டிய நடைமுறையாகும்.
அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 16ஆம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையில், ஆங்கிலேயர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தம் ஆட்சியை ஏற்படுத்தியதும், ஆதிக்கம் செலுத்தியதும் முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஆங்கில மொழிக்குச் செல்வாக்கை ஏற்படுத்தியது. அடிமை நாட்டார் மேல் ஆட்சி மொழி திணிக்கப்பட்டது. இந்தியா, மியான்மர், இலங்கை, மலேயா, ஆங்காங், இசுரேல் போன்ற நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகளாய் உள்ளன.
சமுதாயவியல் அடிப்படையில் ஆராயும்போது, தங்கள் அரசியல் செல்வாக்கினால் உலகில் மிகப்பெரும் ஆளும் வல்லரசாக மாறிய ஆங்கிலேயர், தொழில், அறிவியல் ஆகிய புதிய துறைகளில் பெரும் வளர்ச்சி பெற்று முன்னோடியாகத் திகழ்ந்ததைக் காண்கிறோம். தொழிற்புரட்சி முதன் முதலில் தோன்றியது இங்கிலாந்தில்தான். இவர்களுக்குப் பின்னரே உருசியரும், அமெரிக்கரும், செருமானியரும், சப்பானியரும் முன்னேற்றமடைந்தனர். ஓர் இனம் பல துறைகளில் சிறப்பையும் முதன்மையையும் அடையும்போது, அந்த மக்களிடம் மொழி இயல்பாகவே மேன்மையுறுகிறது; விரிவடைகிறது. வளர்ச்சியை எய்துகிறது. அவ்வகையில் ஆங்கிலம் கல்வி மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், தொழில்சார் மொழியாகவும், ஊடக மொழியாகவும் ஓங்கியதில் வியப்பில்லை. வளர்ச்சியின் பின்தங்கிய நாடுகளும் தங்கள் முன்னேற்றப் பாதையின் வழிகாட்டியாக ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கின.
பிரித்தானியத் தூதரகங்களிலும், வானூர்தி நிலையங்களிலும், கலைகளிலும், அறிவியலிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், இலக்கியத்திலும் உலகில் தலை சிறந்தது பிரித்தனே என்ற பெருமிதம் பறைசாற்றும் பலகையைக் காணலாம்.

முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு:dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment