Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-13

Written by Dr. Avvai N Arul

மணியும் பவளமும் விரவிய மாய மாலை..!

=================================================

உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், மணிப் பிரவாளம் என்பதற்கு மூவகை விளக்கங்களை எழுதினார்.

1. மாணிக்கமும் பவளமும் ஒரு கோவையாகக் கோக்கப்பட்ட மாலையில் அவ்விரண்டும் செந்நிறமுடையவாதலின், சேய்மை நோக்கில் ஒன்றுபட்டிருந்தும் நெருங்கி நோக்குமிடத்து வேறுபாடு காட்டுதல் போலத் தென்மொழியும், வடமொழியும் விரவி மேற்போக்கில் பார்க்குமிடத்து அவை ஒன்றுபட்டன போலத் தோன்றினும், ஊன்றிப் பார்க்குமிடத்து வேறுபட்டுத் தோன்றுவதால், இந்நடை மணிப்பிரவாளம் என்று வழங்கப்பெற்றது.

2. முத்தும் பவளமும் விரவிக் கோத்த மாலை, வண்ண வேறு பாட்டால் காட்சிக்கின்பம் பயத்தல் போல, வடமொழியும் தென்மொழியும் கலந்த இந்நடை செவிக்கின்பம் பயத்தலால், இப்பெயர் பெற்றது. (இது செவிக்கு இன்பமா?)

3. நவமணியும் பவளமும் கலந்து சேர்க்கப்பட்ட மாலைபோலச் செந்தமிழும் வடமொழியும் கலந்து இயன்றதால், இப்பெயர் வந்தது.

வடமொழியும் தமிழும் கலந்து மணிப்பிரவாளம் என்னும் இந்நடைப்போக்கை நடை என்று வீரசோழியம் கூறியது.  இந்நடை சமய சாத்திரங்களிலும், விளக்க உரைகளிலும் மிகுதியாகப் பயின்று வந்தது. வடசொற்கள் எல்லை கடந்து இவற்றில் வழங்கப்பட்டன.

வடமொழியிலக்கணமும், தமிழிலக்கணமும் ஒன்றே என்னும் கொள்கை உருவாகும் அளவிற்கு இந்நடை தமிழ்மொழியில் பெரு வரவாயிற்று. வடமொழிக் கலப்பைத் தடுக்க வடமொழி கற்ற தமிழர் தாய்மொழியில் மேற்கொண்ட வீண் முயற்சியின் விளைவே மணிப்பிரவாள நடை என்றும், கிரந்த எழுத்துகளும் இம்முயற்சியின் விளைவாகத் தோன்றியவை என்றும், ஸ்ரீபுராணம் முதலிய நூல்களின் அளவிலும், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் முதலிய சில ஊர்ப் பெயர்களை மாற்றும் அளவிலுமே அந்த முயற்சிகள் நின்று தோற்றன என்றும் அறிஞர் மு.வ. கருதினார்.

சமண சமய நூலான ஸ்ரீபுராணத்தில் பயின்று வரும் நடைக்குச் சான்று: ஒருநாள் மஹா மேருபர்வத நந்தன வனத்துப் பூர்வதிக்ஜின பவனத்தை அடைந்து, ப்ரதக்கூடிணிகரண ப்ரணாமஸ்தவநாப்யர்ச்சனம் பண்ணியபின், அங்கே, ஸ்ந்நிஹிதராகிய விபுலமதிசாரண தபோத னரை நமஸ்கதிர்த்துத் தர்மஸ்ரவணா நந்தரம் ஏன் ஸ்வாமி, புத்திரியாகிய கந்தர்வ தத்தை, யாவர்க்கு யோக்யை, என்று யான் வினவ, அவரும் அவதி ஞனத்தாற் பார்த்து அருளிச் செய்வார் ‘‘ஜம்பூத்விப பரத கூடித்ர ஹேமாங்கத விஷய ராஜ மஹாராஜபுத்ரனுக்கு வீணாஸ் வயம்வத்தால் தேவியாகும்” என்று அருளிச் செய்தனர்.

‘ராஜ மஹா புரத்து வருஷபதத்த ஸ்ரேஷ்டிக்கும் பத்மாவதிக்கும் புத்திரன், ஜினதத்தனென்பான். அவனால் நமது அபிப்பிரேத கார்யம் ஸித்திக்கும். அஃது எவ்வண்ணமென்னின், ராஜ மஹாபு ஸ்மீபமாகிய ப்ரீதவர்த்தநமென்னும் உத்யானத்து ஸாகசேன கேவலிகளுக்குக் கேவல பூஜார்த்தமாக நின் பிதாவினோடுங் கூடச் சென்று கேவல பூஜை பண்ணியபின், தர்ம வாத்ஸல்யத்தால் வருஷபதத்த ஜினதத்தர்களோடு பாந்தவமுண்டாயிற்று. அதன்பின் வ்ருஷபதத்தன் புத்ரனுக்கு ஸ்ரேஷ்டிப் பதங்கொடுத்து குணபால முனி சமீபத்தே தீக்ஷத்தனள். ஸ்ரேஷ்டிபத ப்ராப்தனாகிய ஜினதத்தனும் வாணிஜ் யார்த்தமாக ஜலயாத்திரையால் இங்கே வருவன். ‘இது தமிழா?’ என்று அனைவரும் வினவத் தோன்றும் ஆம் ‘இதுதான் தமிழ்’ என்று எழுத முயன்றனர் அந்நாளைய ஸ்ரீபுராணச் சமணர்கள்.

பெரிய வாச்சான் பிள்ளை என்ற வைணவப் பெரியார், நாலாயிரப்பிரபந்தப் பாடல்களனைத்திற்கும் பேருரை எழுதினார். அதற்கு ‘ஈடு’ எனப் பெயர் தரப்பட்டுள்ளது. அந்த ஈடு மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதாகும். ‘சார்வ பெளமராய்ப் போந்த இராஜாக்கள் அந்த ராஜ்யஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆனார்கள். ஆன பின்பு, ஸ்ரீவத்ய யஷ நித்யஸ்ரீ ஸ்ரீவத்சத்தை மார் பிலேயுடையவன் நித்யமான ஸ்ரீயையுடையவன்.

இப்பாசுரத்திற்கு ஏகமூர்த்தி என்பது பரத்துவத்தைச் சொல்லுகிறதென்றும், இருமூர்த்தி என்பது வியூகத்தைச் சொல்லுகிறது என்றும் அதாவது வாசுதேவ ஸங்கர்ஷணரைச் சொல்லுகிறது என்றும், மூன்று மூர்த்தி என்பது யூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறதென்றும், பல மூர்த்தி என்பது, அவதாரத்தைச் சொல்லுகிறதென்றும், ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அறிவாகி நாகம் ஏறி, நடுக்கடலுள் துயின்ற நாராயணனே என்பது இன்னார் சிருஷ்டிக்கக் கடவர்; இன்னார் பாது காத்தலுக்குக் கடவர் என்கிறபடியாலே, சொல்லுகிறதென்று நிர்வகிப் பாரும் உளர். இவை, திருவாய்மொழி ஈட்டின் பகுதிகளாகும். ஈட்டின் தமிழாக்கத்தை சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புருஷோத்தமன் நாயுடு அவர்கள் வெளியிட்டது பெருமைக்குரியது.

‘தமிழ்மொழிக்கே உரிய சமயமெனப்படும் சைவத்திலும், காமிகம் முதலிய சைவ ஆகமங்களுள் ஞான பாதத்தினுளதாகிய ஆசங்கை நீக்கி, அவற்றில் பொருளுண்மை, பொதுவியல்பு, சிறப்பியல்பு என்று இருவேறு வகைப்படுத்திக் காட்டிப் போதித்ததற்கு, இரெளர ஆகமத்தின் எழுந்த சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து, பொழிப்புரைப்பான் எடுத்துக் கொண்ட ஆசிரியர் சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிது மனுகாமை புரிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு சிறிது மணுகாமை அறிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குவதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்து வதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்.’

இது, சிவஞானபோதம் என்னும் சைவ சாத்திர நூலுக்கு எழுதப்பட்டுள்ள சிற்றுரையில், மங்கல வாழ்த்துப் பாடலுக்குரியதாகும். சிவஞான போதமே வடமொழியிலிருந்து வந்த மொழிபெயர்ப்பு என்று குறித்த இக்கொள்கையைச் சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவர்கள் நூற்று இருபது காரணங்களைக் காட்டிச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பன்று தமிழ்நூலே என நிறுவியதைத் தமிழுலகம் நன்கறியும்.

தமிழகத்துக்கேயன்றி, பாரதப் பெருநிலத்திற்கும் புறச்சமயங்களாகிவிட்ட கிறித்தவ, இசுலாமிய சமயங்களின் வரவாலும் தமிழில் பிறமொழிச் சொற்கள் புகலாயின. கிறித்தவ வேத நூலாகிய விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

அதிலிருந்து நரஜீவன்களையெல்லாம் பட்டக் கருக்கினால் வெட்டிச் சங்காரம் பண்ணினார்கள். சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை. ஆதி ஆதீ சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.

யுத்தம் பண்ண இஸ்ரேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவருக்கு ஹிருதயம் கடினமானதும், இப்படியே அவர்களின் பேரில், இரக்கம் உண்டாகாமல் கர்த்தர் மொலேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை அழித்து ஸங்காரம் பண்ணி னதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. – யோசுவா: 1.1 இவ்வாறு பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கக் காணலாம். இப்போது எளிய இனிய தமிழில் எழுதிய நூல்கள் வந்துள்ளன. 

ஓலைச்சுவடி

ஆட்சித்துறையில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் செழிப்பாக விளங்கித் தமிழை ஆட்சிமொழியாகப் போற்றி வந்ததாலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பத்திமைப் பாடல்களைத் தமிழில் வெள்ளமெனப் பாடி உணர்வூட்டியதாலும், சமய ஆர்வம் மிகுந்த நிலையிலும் முழுவதும் வட சொற்களையே நாடாவண்ணம் தமிழிலேயே வேண்டுவனவற்றை வழங்கியதாலும் மணிப்பிரவாள முயற்சி பின்னர்த் தோற்றுத் தொலைந்தது.

மொழிக்கலப்பு எதிர்ப்பு மறுப்பும் தூய்மை விருப்பும்

பிறமொழிச் சொற்கள் தம் மொழியில் புகுவதை ஒவ்வொரு மொழியின் அறிஞர்களும் ஒவ்வொரு காலத்திலும் தமது எதிர்க் கருத்தைக் கூறி இக்கடிந்து வருகின்றனர். தமிழில் வடசொற்கலப்பும் இவ்வாறே தொடர்ந்து எதிர்க்கப்பட்டது. தேவையும் பயனும் கருதிச் சில சொற்களைக் கடன் பெறும்போது எதிர்ப்புணர்ச்சி எழுவதில்லை. அழகுக்காகவும் தாம் ஒன்றை அறிந்தவர் என்று தம்மைத்தனிக் குழுவினராக வேறுபடுத்திக் காட்டும் அகந்தைக்காகவும் பிறமொழிச் சொற்களை இணைக்கும்போது எதிர்ப்பு எழுகிறது.

ஒரு மொழியை நன்கு கற்றுப் புலமை பெற்றவர்களும், இன்றியமையாமை உணராமல், தாம் அறிந்த பிறமொழிச் சொற்களைக் கண்டவிடமெல்லாம் புகுத்த முயல்வாராயின், அம்முயற்சியும் விரும்பத்தக்கதில்லை. பிறமொழி கற்றவர்கள், தாம் கற்ற மொழி உயர்ந்தது என்ற மனப்பான்மை கொண்டு, இல்லை என்று இரப்பவனுக்குப் பெருமிதத்துடன் ஈபவன் கொடை வழங்குதல் போலச் சொற்கள் பலவற்றை ஒரு மொழியில் புகுத்தத் தொடங்கினும், அம்முயற்சி எதிர்க்கப்படும் புதிய அறிவுத் துறைகளைப் பயிலும்போது, தாமே புதுவதாக அறியத் தொடங்குவதால், தமக்கே முழுமையாக விளங்காத நிலையில் தாம் கேட்டறிந்த சொற்களை மொழிபெயர்க்க முடியாமல் கணக்குக் குறியீடுகளைப்போல அவ்வச் சொற்களை எழுதுவதுமுண்டு.

மொழி பெயர்க்கத் தெரியாமையோடு, தவறாக மொழிபெயர்த்ததால் நேரும் சிக்கலைத் தவிர்க்கவும், ஒருகால் மொழிபெயர்த்தாலும் அத்தமிழ்ச் சொற்கள் வேறு பொருளைக் குறிப்பதாலும் என்றெல்லாம் பல சூழல்கள் நிலவின; சிலநிலைகளில் இன்று நிலவுகின்றன. இதுவும் எதிர்கொள்ள வேண்டியதாகும். இத்தனை எதிர்ப்பும் இன்றிச் சில சொற்கள் ஒரு மொழியில் புகுந்தபின், அந்த மொழிக்கே உரிமையான செஞ்சொற்களும் கடன் வாங்கப்பட்டவையே என்று யாரேனும் எடுத்தியம்பி, வருமொழியைப் பல காட்டி நிலைமொழியான தமிழைத் தாழ்வுபடுத்த முனையினும் எதிர்க்கப்படும்.

தொன்றுதொட்டே வடமொழிச் சொற்களைத் தங்குதடையின்றி ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் மரபு மறுதலித்து வந்துள்ளது. வட மொழியிலிருந்தே தமிழ் கடன் வாங்கியது என்றும், தமிழிடமிருந்து வடமொழி எதையும் பெற்றதில்லை என்றும், அதனால் தமிழைவிட வடமொழி உயர்வுடையது என்றும் உண்மைக்குப் புறம்பாகக் கூறி வந்ததால், வடசொற்கள் தமிழர் நெஞ்சில் ஒரு முள்ளாகவே இருந்தது. நடுவு நிலைமையின்றி. ‘வடமொழியை உயர்ந்தது’ எனப் பரப்பிய கருத்துகள் தமிழ் வடமொழிப் பகைமைக்கு வித்தூன்றின. இதன் விளைவாக எழுந்த மொழிக்கிளர்ச்சி மொழியைக் காக்கும் எல்லையோடு நிற்காமல் தனித்தமிழ் இயக்கத் தோற்றத்திற்கும் பெருமிதமான வழி அமைத்தது. 

எழுதவே விரல் நடுங்கிய மேற்கோள்களைப் படிக்க நான் திணறியபோது, உடனிருந்து உதவிய பெரும்புலவர் அமுதலிங்கம் எனக்குத் துணை நின்றதை நான் நினைவுகூராத நாளில்லை. 

–  முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு:dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment