Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-10

Written by Dr. Avvai N Arul

பாதுகாக்கப்படும் தமிழ் மொழி நலம்..!

=================================================

“இனி உரப்பியும், எடுத்துங்கனைத்தும் வருகின்ற செயற்கையொலிகள் ஆரியத்தில் உண்டென்பர் நச்சினார்க்கினியர், உரப்போடு கூடிய எழுத்துகள், கவ்வருக்கம் முதற் பவ்வருக்கம் முடிய ஐந்து வருக்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகளாம். எடுப்போடு கூடிய வெழுத்துகள், ஐந்து வருக்கங்களில் மூன்றாம் எழுத்துகளாம். கனைப்போடு கூடிய வெழுத்துகள், அவற்றில் நான்காம் எழுத்துகளாம். ஏனைய வெழுத்தொலிகளிற் சொற் பயிலாமை நோக்கி அவற்றை விட்டனரென்க.

இனி, இற்றைக்கு ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த பவணந்தி முனிவர், தொல்காப்பியனார் பொதுவகையில் வகுத்த வடமொழியாக்க விதியைச் சிறப்பு முறையிலே விளக்கி விதிசெய்வாராயினார். பவணந்தி முனிவர் காலத்திலே வடமொழி இலக்கியப் பயிற்சி தமிழ் நாட்டிலே மிகுவதாயிற்று. ஆரியச் சொற்கள் வரம்பின்றி இலக்கியங்களிற் கலக்கத் தொடங்கின. அக்கலப்புத் தமிழ்மொழியின் ஒலித் தூய்மையை அழித்துவிடும் என்றஞ்சிய பவணந்தி முனிவர் ஆரியச் சொற்களைக் கிடந்தாங்கு வழங்காது.

தமிழ் நடைபெற்ற வடசொல்லாய் வழங்குமாறு விளக்கமாய் விதி செய்தனர். நன்னூலிற் பதவியலின் ஈற்றிலே வடமொழியாக்கம் என்னும் பகுதியிலும், (146 – ஆம் சூத்) பெயரியலில் 274 ஆம் நூற் பாவிலும் கண்டு கொள்க. ஆகவே, வடசொற்கள், ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவான எழுத்துகளாலும், ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்துத் திரிந்த எழுத்துகளாலும், இயன்று செந்தமிழ்ச் சொல்லை ஒப்பனவாகிச் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவனவாம் என்றுணர்க.

 இனி பவணந்திமுனிவர் விளக்கமாய்ச் செய்த வடமொழியாக்கத்தை அவர்க்குப் பின்னிருந்த இலக்கண நூலாசிரியர்களெல்லாரும் வழி மொழிந்து பேணி வந்தனர். யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமார சுவாமிப்புலவர், அவ்வடமொழியாக்க மரபினைத் திட்பநுட்பமாய் ஆராய்ந்து பவணந்தி முனிவரைக் காட்டிலும் பெரிதும் வற்புறுத்துவாராயினர். அதனை அவர் செய்த இலக்கணச் சந்திரிகை, இலக்கியச் சொல்லகராதி என்னும் நூல்களிற் கண்டு தெளிக.

ஆரியச் சொற்களை வழங்கும்பொழுது, அவற்றிலுள்ள வடவெழுத்துகளை நீக்கியெழுதும் மரபு, தமிழகப் புலவராற் பெரிதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை போல, ஈழத்துப் பூதன்றேவனார் முதல் இன்றுகாறும் உள்ள யாழ்ப்பாணப் புலவராலும் தமிழ்மொழி நலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையரசின் கல்விக்குழுவின் அறிக்கை நாம் காணத்தக்கதாகும்.

 வடமொழியாக்க மரபின் நோக்கம் தமிழ்மொழிக்கு இயல்பாய் அமைந்த இயற்கை ஒலியுடைமையைப் பாதுகாப்பதேயாம். செயற்கை ஒலிக்கூட்டங்கள், ஆரியம் ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்கள் வழியாகத் தமிழிலே புகுந்து ஆட்சி செய்யுமாயின், தமிழ்மொழி தனக்கியல்பாய் அமைந்த இனிய மெல்லோசையில் திரிந்து போகும். ஆயிரக்கணக்கான சொற்கள் அங்ஙனம் புகநேரின், தமிழ் பிறிதொரு மொழியாகச் சில ஆண்டுகளிலோ பல ஆண்டுகளிலோ மாற்றமடையும்.

இவ்வகைச் செயற்கையொலிக் கூட்டச் சொற்கள் வரம்பின்றிக் கலந்த பெருங்கலப்பாலே தமிழ், பல்லாண்டுகளுக்கு முன்பே மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலியனவாக மாற்றமடைந்த வரலாற்றுக்கு மொழி நூல்கள் உறுதி கூறுகின்றன. அம்மொழிகளின் இக்கால வடிவத்தை நுணுக்கமாக ஆராய்வோமெனில், கல்லாதார் வழக்காகிய கொடுந்தமிழும், ஆரியச் சொற்கோவையும் பிறவும் ஒன்றும் சேர்ந்த பிழம்பே அவை என்பதைக் காண்போம்.

 ஆகவே, இக்காலக் கொடுந்தமிழ் வழக்கு ஒரு நூற்றாண்டுக்கு ஆட்சி செய்து நிலைக்குமாயின், செந்தமிழ்மொழி வேறு வடிவமெய்தும் என்பது மறுக்க முடியாத பேருண்மையாகும். யாமுரைத்த உண்மையை உணர்தற்குப் பின்வருஞ் சொற்கோவை மிகப் பயன்படும். அஃது இக்கால எழுத்தாளர் செய்த சிறுகதை இலக்கியங்களிலே கண்டு கோவைப்படுத்தப்பட்டது. ஆரியச் சொற்களைத் தமிழ் நடைப்படுத்தி வட சொல்லாக்காது, வழங்கிய கொடுந்தமிழ் வழக்கே இஃது என்று கொள்க. அச்சிறுகதை நூல்களிற் காணப்படும் பிறமொழிச் சொற்கோவையும் பிறவகை வழுக்களும் காணலாம்.

 ஜலம் – ஜனம் – ஜகம் – ஜடம் – ஜங்கமம் – ஜனகன் – ஜனனம் – ஜயம் – அம்புஜம் – ராஜ்யம் – சமாஜம் – விஜயன் – துவஜம் – ஜாதி – ஜாலம் – ஜாக்கிரதை – ஜீவன் – ஜீரணம் – ஜீவாலை – இராஜன் – புஜம் – போஜனம் – ஜெந்து – பிரஜை – பூஜை – ஜோதி – அஷ்டம் – அதிர்ஷ்டம் – திருஷ்டிவிஷம் – கிருஷ்ணன் – சிருஷ்டி – துஷ்டன் – நஷ்டம் – பாஷை – ஒளஷதம் – குஷ்டம் – சீஷன் – நிமிஷம் – வருஷம் – வேஷம் – அபிஷேகம் – ஷண்முகம் – ரிஷி – அஸ்திரம் – அஸ்தமனம் – அவஸ்தை – உத்ஸவம் – கஸ்தூரி – சரஸ்வதி – சாஸ்திரம் – புஸ்தகம் – மஸ்தகம் – வாஸ்ம் – விஸ்தாரம் – ஸ்பா -ஸ்வாமி – ஸ்க்தி – ஸ்ப்தம் – ஹரி – ஹனுமன் – ஹிமிம் – ஹிதம் – ஹீனம் – ஹேது ஸ்நேஹம் – கூடிணம் – பக்ஷ – அக்ஷரம் – கூேடிமம் – லகஷ்மி – பரீகூைடி – ராமன் – ரகசியம் – ரசாயனம் – ரஞ் சிதம் – ரசம் – ராணி – ராணுவம் – ராத்திரி – ராமாயணம் – ராவணன் – ருக்மணி – ருசி – ருத்திரன் – ருது – ரோகிணி – ரதம் – ரதி – ரவி – ராகம் – ராசன் – ரோமம் – லகு – லஞ்சம் லாபம் – லிங்கம் – லோகம் – லோபம். இவை ஒரு சிலவாம். இவற்றின் வடசொல்லாக்கம் காண முற்பட்டால் சலம் – சனம் – சகம் – சடம் – சங்கமம் – சனகன் – சனனம் – சயம் – அம்புசம் – இராச்சியம் – சமாசம் – விசயன் – துவசம் – சாதி – சாலம் – சாக்கிரதை – சீவன் – சீரணம் – சுவாலை – இராசன் – புயம் – புசம் – போசனம் – செந்து – பிரசை – சோதி – அட்டம் – அதிட்டம் – திட்டிவிடம் – கிருட்டிணன் – (கண்ணன் – சிருட்டி – துட்டன் – நட்டம் – பாடை – ஒளடதம் – குட்டம் – சீடன் – நிமிடம் – வருடம் – வேடம் – அபிடேகம் – சண்முகம் – இருடி – அத்திரம் –அத்தமனம் – அவத்தை – உற்சவம் – கத்துரி – சரசுவதி – சாத்திரம் – புத்தகம் – மத்தகம் – வாசம் – வித்தாரம் – சபை – சாமி – சுவாமி – சக்தி – சத்தம் – அரி – அநுமன் – இமம் – இதம் – ஈனம் – ஏது – சிநேகம் – கணம் – பட்சி – அட்சரம் – அக்கரம் – சேமம் – இலக்குமி – பரீட்சை – இராமன் – இரகசியம் – இரசாயனம் – இரஞ்சிதம் – இரத்தம் – இரசம் – இராணி – இராணுவம் – இராத்திரி – இராமாயணம் – இராவணன் – உருக்குமணி – உருசி – உருத்திரன் – இருது – உரோகிணி – இரதம் – இரதி – இரவி – இராகம் – இராசன் – உரோமம் – இலகு – இலஞ்சம் – இலாபம் – இலிங்கம் – உலோகம் – உலோபம் என்பனவாம்.

 இவற்றுக்கு நேரான செந்தமிழ்ச் சொற்கள் பற்பல கிடப்பவும், அவற்றை வழக்கழிந்து ஒழியவிட்டு, வடமொழிச் சொற்களை வாங்குதல் உய்தியில் குற்றமாம். அவ்வடசொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாதவழி அவற்றைத் தமிழ்நடைப்படுத்தி வழங்குதல் குற்றமாகாது.

–  முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,

தமிழ்நாடு

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment