Tamil Language

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 43

Written by Dr. Avvai N Arul

“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!”

சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணாநகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு பொதுவரங்கம் நடப்பது போலத்தான் இயங்கும்.
அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பல நிலையினரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அன்றைய சூழலில் தான் தேசியகவி மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவைப் புரட்சித்தலைவர் அறிவித்திருந்து ஏற்பாடுகள் பல நிலைகளில் எக்களிப்போடு நிகழ்ந்தன.
விடுதலைக் கவியரசருக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் விழாக்கோலம் தெரிந்தது.
பள்ளி மாணவனாக இருந்த என்னை எழுத்தாளரும், பேச்சாளரும், ஊடகச் சுடருமாக விளங்கும் திருமதி. சுபா வெங்கட் முதன் முறையாக ஸ்ரீராம் இலக்கியக் கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
கோபாலபுரம் மாநகராட்சிப் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியிலும், கட்டுரைப் போட்டியிலும் பங்கு பெறச் செய்தார்.
என் அன்னையார் தாரா நடராசன் தனது மருத்துவமனையிலிருந்து இதற்காகவே வந்து நான் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்து எங்களை உட்லண்ட்சு உந்துவெளி உணவகத்துக்கு அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக உள்ளது. கேட்டு மகிழ வந்த தாய் என்று படித்திருந்த்தை என் தாய் வடிவில் பார்த்தேன்.
மூதறிஞர்கள் சிலம்புச் செல்வர், பெ.நா.அப்புசாமி, கிருஷ்ணசாமி பாரதியார், அருட்செல்வர் நா.மகாலிங்கம், ஆங்கிலப் பேரறிஞர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், முதுமுனைவர் டி.என்.ஆர், பேராசிரியர்கள் பி. சுந்தரம், கே.ஜி.சேஷாத்திரி, நாகராஜன், ந.சஞ்சீவி, என்னை வளர்த்த சீ.பா, சர்மா, வழக்கறிஞர் இரவி, சொல்லின் செல்வர் சுகி சிவம், அன்னையாக அரவணைத்த கவியரசியார் திருமதி செளந்தரா கைலாசம், கலைமாமணி விக்கிரமன், கம்பர் கவிநயச் செல்வர் எஸ். நல்ல பெருமாள், பாரதி ஆய்வறிஞர் பெ.சு.மணி, அரு.சங்கர், புலவர் வீரமணி, எனக்கு வழிகாட்டியான பெரும்பேராசிரியர் குடந்தை எஸ்.ஏ. சங்கர நாராயணன், பாரதி காவலர் இராமமூர்த்தி, பாரதி அடிப்பொடி மணி, சிந்தனைப் பேரொளி பாரதி சுராஜ், நாடக வேந்தர் எஸ்.வி. சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன், இதயம் பேசுகிறது மணியன் முதலிய பெருமக்கள் அவ்வப்போது பேசுவதைக் கேட்டதோடு அவர்கள் அன்போடு முதுகில் தட்டிய பரிவும் இப்போது ஓரளவேனும் ஆளாக்கி உள்ளன.
பாரதியார் நம் தமிழ்ப் பரம்பரையின் மாபெரும் சொத்து, அந்தக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து பாடல்கள் சிலவற்றையாவது எந்த நேரமும் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வை வரிசையாக வந்த பெருமக்கள் ஊட்டினார்கள்.
இந்த ஊக்கம் தான் என்னை வேறு துறைகளுக்குச் செல்லாமல், அப்போது என் அம்மா விரும்பாமலும் கூடத் தமிழ்க் கல்வியை ஆர்வமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். கைத்தட்டல்தான் என்னைக் கம்பம் ஏறவைத்தது என்ற ஆங்கிலத் தொடர் நினைவில் நிற்கிறது.
என் தந்தையாரின் நிழலாகவே எப்போதும் இருந்ததால், எனக்கு தமிழ்வழி காட்டியாகப் புலவர் மாமணி அமிர்தலிங்கனார் பாரதியார் பாடல்களை எப்படிச் சீரிபிரித்துப் படிக்க வேண்டும் என்று எழுத்தெண்ணி வகுப்பாக நடத்திக் காட்டினார்.
அந்நாளில் கவிப்பேரரசு வைரமுத்துவின் “கவிராஜன் கதை” வெளிவந்தது.
வாய் திறந்தால் கவிராஜன் கதையில் வந்த வரிகளையும், தொடர்களையும் மனப்பாடமாகவே மாணவர்கள் சொல்லிப் பெருமிதமுற்றனர்.
முண்டாசுக் கவிஞர் பாரதியார், எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தார். பாரதியார் வரிகள் இல்லாத மேடை இல்லை, திரைப்படமில்லை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்லை, செய்திகள் இல்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் பாரதியார் அலை வீசிய நேரத்தில், பாரதியாரின் பற்று என்னைச் சிறிதாவது நிமிர்த்தியது. தொடர்ந்து பாரதியாரின் வரிகளைச் சொல்வதிலும் ஆர்வத்தோடு அலைந்தேன்.
மாநிலக் கல்லூரியில் முதலாண்டு தொடங்கி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வு பயிலும் வரையில் (1985-1991) தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அறநிலையங்களிலும், தனியார் நடத்தும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, சில பரிசுகளைப் பெறுகிற அளவு பேச்சுத் திறமையை பட்டை தீட்டிக் கொண்டு வந்தேன்.
அவ்வேளைகளில், கதர் வேட்டியும், கதர்ச் சட்டையும் அணிந்த என் மூத்த நண்பர் வழக்கறிஞர் பால. சீனிவாசன் கரம்பிடித்து, அவரோடு சென்று கோவை சி.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் பேசியதையும் நினைந்து மகிழ்கிறேன்.
அக்கல்லூரியின் பொறியியல் மாணவர் மணிவண்ணன் என்ற நண்பர் எங்கள் மீது பரிவும் அன்பும் கொண்டு நேரம் தவறாமல் சுடச்சுட நல்லுணவும் வழங்கிப் பேச வைத்தார்.
அப்பொழுது அவரை நோக்கி, “உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பேன்” என்றேன். அதற்கு உடனே, “உப்பி வருகிறவரை நானும் மறவேன்” என்றார்.
வட சென்னையில், ‘விடிவெள்ளி’ என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்கள் பேசவைத்த நாநல நாயகமாக இலக்கியச்சுடர் வழக்கறிஞர் த. இராமலிங்கம் சில ஆண்டுகள் கழித்து ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’, ‘நம்பிக்கைதான் முன்னேற்றம்’, ‘நம்பிக்கைதான் வரலாறு’, ‘நல்லதையே சொல்வோம், நல்லதையே சேய்வோம்’ என்ற கொள்கை முழக்கத்தோடு ‘தமிழ் இளைஞர் இயக்கம்’ ஒன்றையும் தோற்றுவித்தார்.
இலக்கியச்சுடரின் பாசறையிலிருந்து சூடானிலுள்ள ஐ.நா. அவையின் உயரலுவலர் வழக்கறிஞர் கண்ணன் (நிறுவனர், முச்சங்கம்), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி இராமலிங்கம் (நிறுவனர், ‘கரும்பு அம்புகள்’), வழக்கறிஞர் செல்வானந்தம், நினைவில் வாழும் திரை இயக்குநர் திருப்பதிசாமி போன்ற நல்லிளைஞர்களை புகழின் உச்சிக்கு வளர்த்து ஒளிர வைத்தார்.
வழக்கறிஞர் கண்ணன் சிறந்த ஆங்கிலத்திலும், செம்மாந்த தமிழிலும் உரையாற்றும் உரையாளர்.
ஆற்றலோடு சென்னை உயர்நீதிமன்றம் நடத்தும் Moot Court (மாதிரி நீதிமன்றம்)-இல் பேசுகின்ற அளவிற்கு மாண்புடையவராவார். அவருடைய ஒருங்கிணைப்பில் இராஜாஜி மண்டபத்தில் ஐக்கிய நாட்டு அவையின் பொருண்மைகளை இளங்கலையிலேயே ஆங்கிலத்தில் பேசும் வாய்ப்பினையும் அவர் நல்கினார்.
எனக்குத் தனிப்பட்ட மடல்கள் எழுதுகின்ற அளவிற்கு நான் அவருடன் நெருக்கமாகப் பழகினேன். அக்கடிதங்களில், பேரறிஞர் அண்ணாவின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி வரைவேன்.
அமெரிக்காவிலிருந்து என் மாமா மருத்துவர் இளமதி, திருமதி சாரா, மகன் சிவனுடன் கண்ணனின் இராயபுரம் இல்லத்தில் விருந்துண்டது மறக்கவொண்ணாதது.
1986-இல் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு பயிலும்போது, அந்நாளைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.அன்பரசு அவர்களின் தலைமையில் சென்னைத் தொலைக்காட்சியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் (தலைப்பு – இளைஞர்கள் முன்னேற்றத்திற்குத் தேவைப்படுவது எதிர்பார்த்து வாழ்வதா? எதுவரினும் ஏற்பதா?)
ஆற்றொழுக்காகப் பேசி ‘பூட்டிய இருப்புக் கோட்டையின் கதவு திறந்தது’ என்ற பாவேந்தரின் வரிகளோடு நிறைவு செய்தேன்.
பட்டிமன்றம் ஒளிபரப்பாகிய பின் மாநிலக் கல்லூரியில் பல மாணவ மாணவியருக்கு நான் பெரிதும் அறிமுகமாகிப் பாராட்டுப் பெற்றேன்.
தமிழிலக்கிய மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்புக்கு வருவதும், பேராசிரியர்களுடன் அளவளாவுவதோடு சென்று விடுவதுதான் வழக்கமாகவே இருந்தது.
இதில் நான் முழுதும் மாறுபட்டுக் கல்லூரிக்கு வரும்பொழுதே பேருந்துகளை நாடாமல் என் அம்மா வாங்கித் தந்த ஐந்து சக்கர இணைப்புச் சாய்வுந்தில் (Side-car Scooter) வலம் வருவதே கல்லூரிக்குப் புதுமையாக இருந்தது.
கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் பொதுத் தேர்தலுக்கு அவ்வாகனத்தைத்தான் தரச்சொல்லி நண்பர்கள் வற்புறுத்துவார்கள்.
என் வகுப்புத் தோழர்களைக் காட்டிலும், என்னைவிட மூத்த பெருமக்களுடன் நான் பெரும்பாலும் பழகி வந்தேன். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக இன்றும் நினைவில் உள்ளவர்கள்,
டாக்டர் தேவநாதன் (தலைவர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்), ஜெயப்பிரகாஷ் (நிறுவனர், அக்னி பொறியியல் கல்லூரி), தாம்சன் (காவல்துறை உயர் அலுவலர்), நகைச்சுவை மாமணி மோகனசுந்தரம் (பட்டிமன்றப் பேச்சாளர்), ஆறுமுகம் (தலைவர், மாணவர் பேரவை), ஆர்.பிரதாப் குமார், (மாநில தகவல் ஆணையர் (ம) பொதுச் செயலாளர், மாணவர் பேரவை), வாஷிங்டன் (பொதுச் செயலாளர், மாணவர் பேரவை), இளங்கோ மணிவண்ணன் (தலைவர், மாணவர் பேரவை), சிங்கை ஜமால், G.வெங்கடேசன், (அரசியல் அறிவியல் மாணவர், கருவூலகத்துறையில் பணியாற்றியவர்), புகழேந்தி (புலவர் புலமைப் பித்தன் மகன்), குகன் (கவிஞர் ஆ.கு. ஆதித்தர் பெயரன்), எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகள் ஆனந்தி, திரு.பூம்பொழிலன் (வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு.இராஜாராமன் மகன்), சன் தொலைக்காட்சி செம்பியன் (திரைத் தயாரிப்பாளர் கோவை செழியன் மகன்), வழக்கறிஞர் சிவக்குமார், ஆங்கில ஆசிரியர் அறிவுச் செல்வன், ஆங்கில ஆசிரியர் கீர்த்தி வாசன், பகுத்தறிவுக் கனல் தமக்கையார் வழக்கறிஞர் அருள்மொழி, திரைப்பட நடிகர் தாமு, இலக்ஷமண் சுருதி, தமிழ்ப் பேராசிரியர் சேக்மீரான், காவல்துறை உயர் அலுவலர் பாண்டியன் (கவிப்பேரரசு தம்பி), தமிழ்ப்பேராசிரியர் டென்சன், திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ், அமெரிக்கா காவேரி கணேஷ், திரைப்பட நடிகர் சந்தானம், புள்ளியியல் துறை சீனிவாசன், நீச்சல்வீரர் கந்தன், சென்னை வானொலி நிலைய பழ. அதியமான், மோகன கிருஷ்ணன் மற்றும் என் மாமன் மகன் முனைவர் வானவன் ஏகாம்பரம் (அமெரிக்காவில் பெரும்புகழோடு அறிவியல் பேராசிரியராக உள்ளார்), அத்தை மகன் முனைவர் கதிரவன் சுப்பிரமணியன் (பொதுப்பணித் துறையில் மூத்த பொறிஞராய் உள்ளார்) மற்றும் என் பெரியம்மா மகன் முரளி சுந்தரமூர்த்தி (விளம்பர வாணராக உள்ளார்).
என்னுடைய தந்தையார் அடிக்கடி சொல்லும் வரிகள் இவைகள்.
படித்துத் தயாரித்துப் பேசுவது ஒரு கலை. பேசியதை மறக்காமல் சொல்வதும் ஒரு கலை. பேசினேன் என்று சொல்லி நினைத்துப் பேசாமல் வருவதும் ஒரு கலை.’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.
இலயோலா கல்லூரியில் என் நண்பர் இந்திய வருவாய்த் துறையில் உயர் அலுவலராகவுள்ள கென்னடி தலைமையில் ஈழம்- நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பேச்சுப்போட்டியில் எதிர்பாராமல் முதல் பரிசு பெற்றேன்.
கல்லூரிப் போட்டிகளில்தான் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர்கள் சுமதி, சதீஷ், தமிழ்ப் பேராசிரியர் பர்வீண் சுல்தானா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக துணைத் தலைவர் குணசீலன், அருணா, கனடா கல்பனா, ஸ்டெர்லைட் சர்வேசன், அபுபெக்கர், சேஷாத்ரி போன்றோர் நண்பர்களாக வாய்த்தனர்.

அறிவியல் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம் எப்படியொரு தனிப்பட்ட பயிற்சியை வளர்க்குமோ, அதுபோலப் பேச்சுப் போட்டிகளும் கட்டுரைப் போட்டிகளும், கவிதைப் போட்டிகளும் தமிழிலக்கிய மாணவர்களுக்கு வளர்ச்சி நோக்கிய அறிவுக்களங்களாகும்.

புறநானூறு…
சாரல்: 8 – தூறல்: 7
ஏழாவதாக ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயில் கீரத்தனார் பாடியது. பொதுவியல் திணை; கையறுநிலைத் துறை. திணை துறை விளக்கம் காண , முன் பாடல்களில் 242ஆம் பாடல்.
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி யணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை,
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே ! ’

இளவயதினரோ, தலையில் சூடிக்கொள்ள மாட்டார்; வளையணிந்த வனிதையரோ, கொடியிலிருந்து கொய்ய மாட்டார்; பாடுந்தொழிலோனாகிய பாணனோ, இசைக்கருவியாகிய நல்ல யாழின் மேல் சூடமாட்டான்; அவன் துணையாகிய பாடினியோ, அணிந்துகொள்ள மாட்டாள். சூடாததும், கொய்யாததும், அணியாததும் எது தெரியுமா? அதுதான் முல்லைமலர். ஏன்? என்னவாயிற்று? வீர மறவரை எல்லாம் பேராற்றலுடன் வெற்றிகொண்ட வெற்றி வேலையுடைய ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மறைந்துவிட்டான்.
இந்தக் கொடுமை உணராமல் ஒல்லையூரில் முல்லையே நீயும் பூத்தனையோ? சூடாமலும், கொய்யாமலும், அணியாமலும் இருப்பதால், மலர்ந்து தான் என்ன பயன்? ஒன்றுமில்லை. இவ்வாறாகக் குடவாயில் கீரத்தனார், தமது கையறுநிலையைப் புலப்படுத்துகிறார். படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன .
சாரல்: 8 – தூறல்: 8
எட்டாவதாகப் பொன்முடியார் பாடியது, வாகைத்திணை; மூதின் முல்லைத் துறை. வாகை என்பது, வெற்றியைக் குறிக்கும்; மூதின்முல்லை என்பது, முதிர்ந்த , உயர்ந்த பண்பாட்டு ஒழக்கத்தைக் குறிக்கும்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!’

நன்மக்களைப் பெற்றெடுத்துக் கொடுப்பது, தனது தலையாய கடமையெனத் தாயாகவிருந்து பொன்முடியார் கூறுகிறார்; கல்வி, கேள்வி, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவனாக உருவாக உதவுதல், தந்தைக்குக் கடமையாகும்; கூரிய வேலினை வடித்துக் கொடுப்பது கொல்லனுக்குக் கடமையாகும்; ஒளிவீசும் வாளைத் தீட்டிக்கொண்டு, எதிர்வரும் போரில் களிற்று யானையை வீழ்த்திவிட்டுக் களத்தினின்றும் மீண்டு வருவதும் மறவனாகிய காளைக்குக் கடமையாகும். அனைவர்க்குமான கடமைகளை வகுத்துக்கூறும் பொன்முடியாரின் புறப்பாடல், எண்ணி நாளும் பெருமையடைலாம்.

வளரும்…

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

About the author

Dr. Avvai N Arul

Leave a Comment