Spiritual

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 020

Written by Mannai RVS

20. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
===============================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்
புராதனத் தங்கம் போன்றவர் ஸ்வாமி: கார்வெட்டிநகர், 3, செப்டெம்பர், 1971 – வெள்ளிக்கிழமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று காலை நான் தரிசிப்பதற்காகவே ஸ்ரீ மஹாஸ்வாமி குடிலிலிருந்து வெளியே வந்தார். அற்புதமான இளம் சிங்கம் போல கம்பீரமாக இருந்தார். அவரது நடை உடை பாவனைகள் மற்றும் குணாதிசயங்கள் எல்லாம் சொக்கத் தங்கம். இந்திய புராண இதிகாசங்களில் புலவர்கள் பாடிய பசுந்தங்கம். மனுஷ்ய அவதாரமெடுத்த தெய்வங்களுக்குப் பொருந்தும் தங்க குணம். முகமும் கரங்களும் மட்டும்தான் அவரைச் சற்றே வயதானவர் போலக் காட்டுகிறது. அவரது முதுகுபுறமும் முட்டிகள் போன்ற இடங்களிலும் தோலில் துளிக்கூடச் சுருக்கங்களே இல்லை. அவருக்குப் பெரும்பாலும் எல்லா பற்களும் இருந்தன. தொலைவிலிருந்து பார்ப்பவர்கள் அவருக்கு பதினேழு பதினெட்டு வயதிருக்கும் என்றுதான் சொல்வார்கள். அவர் இஷ்டப்படும் வரை, தேவைப்பட்டால் இருநூறு வருஷங்கள் கூட உயிர் வாழலாம்.
இன்று அவரது கண்கள் இரண்டும் கருப்பாக இருந்தன. கோயில் கருவறைகளில் கடாட்சமளிக்கும் தெய்வச் சிலைகளில் தரிசிக்கப்படும் கண்களின் அதே கருமை.
இன்று சாயரக்ஷை, அவருக்கு அருகில் எனக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக, அவரோடு ஒப்பிடும் போது ஜீவனில்லாதப் பதுமைகள் போன்று வெறுமனே பார்த்து ஆன்மிக பேசுகிறோம் என்று வெற்றுக் கூச்சலிடுபவர்களை அவர் அருகிலிருந்து எட்ட நிறுத்திவிட்டார்.
தேய்பிறை பதிமூன்றாம் நாள் சாயந்திரம் 5:30லிருந்து 7:30 மணிவரை சிவபெருமானைப் பூஜிப்பதற்கு மிகவும் உகந்த நேரம் என்று தெரிந்துகொண்டேன். (In original, author written as “twelfth day of lunar half month from 5:30 to 7:30 pm”) இந்தப் பிரதோஷ வேளையில் நற்சிந்தனைகளும் நாம் செய்யும் நற்காரியங்களுக்கும் ஆயிரம் மடங்கு பலன்களும் கிடைக்கும். அதுபோலவே செய்யும் துஷ்ட காரியங்களுக்கானப் பலன்களும் ஆயிரம் மடங்காகும்! ஆகையால் நற்சிந்தனையை விதைக்கும் விதமாக ஸ்ரீ மஹாஸ்வாமி ”பிரதோஷ கால பூஜை” என்னும் சிவபூஜைச் சடங்கை மிகவும் பக்திசிரத்தையாகப் புரிகிறார்.
ஆகையால் இன்றிரவு இன்னொரு பிரபஞ்ச பூஜையை அந்த நீர்த்தேக்கத்தின் கரையில் நடத்தினார். என்ன இருந்தாலும் நேற்று நடந்ததைப் போலவே இன்றும் நடக்கவேண்டும் என்று நான் ஆசைப்படக்கூடாது என்றாலும் அவர் அமர்ந்திருக்கும் அதே படியில் ஐந்து மீட்டர் இடைவெளியில் வலதுபுறம் என்னை நின்றுகொள்வதற்கு ஸ்ரீ மஹாஸ்வாமி அனுமதித்தார். வழிபாடுகள் முடிந்த பிறகும் அவரது பார்வையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக என்னை வைத்திருந்தார். கடைசியாக செய்த பூஜையின் போது என்னை ஒருவிதமாக ஆளாக்கியதை இன்னும் பலமாக்க விருப்பம் கொண்டிருந்தாரோ?
வபனம் என்னும் புனிதசவர நாள்: கார்வெட்டிநகர், 6, செப்டெம்பர், 1971 – திங்கள்கிழமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்ரீ மஹாஸ்வாமியின் அருள்நிறை எழில் வதனமானது அவர் முழுவதும் வபனம் செய்துகொண்டவுடன் நாம் கண்ணாரக் காணலாம். அழகான அவரது முழு நீள்வட்ட முகம். அவரது முக அமைப்பு சிறியதாக இருந்தாலும் அவரது சக்தியும் கவனக்குவிப்பின் ஆற்றலும் சேர்ந்து பார்ப்பதற்கு தேஜோன்மயமாக இருக்கும். கொஞ்சம் தடிமனான நேரான நாசி. கன்னங்களுக்கு ஏறத்தாழ இடமில்லாமல் செய்யும் வாயும் பெரிய காதுகளும் தனித்துவமானவை. அவர் முன்னால் இருந்து பார்க்கும்போது அவரது முகத்தில் கத்தி போல கச்சிதமாக வெட்டும் கண்களே ஆதிக்கம் செலுத்தும். ஒரு பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது, இரண்டு அழகான வளைவுகள் காதுகளுக்கு முன்னால் ஆரம்பித்து கன்னத்தினில் வாகாய்ச் சேர்ந்திருக்கும். அது மேலே திறந்த ஒரு வளையமாக இருக்கும். அந்த இரு செவிகளின் மடிப்புகளிலும் எவற்றாலும் தடுக்கமுடியாத ஏதோ ஒரு சக்தியை அவர் தனது வல்லமையினால் அங்கே தேக்கிவைத்திருப்பது போலிருக்கும். மிச்சமிருக்கும் அசாத்தியமான சக்திகள் அற்புதமான க்ஷேமங்களை நல்கி உணர்ச்சிப்பெருக்கில் நம்மை ஆழ்த்தும் அந்த இதழ்களின் வளைவுகளிலும் அதன் நீள அகலங்களிலும் பொக்கிஷமாய்ப் பொதிந்திருக்கும்.
சிரசு அவரது முகத்திற்கு மணிமகுடம். அவர் முன்னால் இருந்து பார்க்கும் போது தலையின் நீள்வட்டம் சரியாக இருக்கிறது. மேலிருந்து பார்க்கும் போது ஒரு செவ்வகம் போலவும் பின்னால் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது. புலவர்களுக்கான புத்திகூர்மையுள்ள நெற்றி அவருக்கிருக்கிறது. அது மீதமிருக்கும் முகத்தின் சரியான விகிதத்தில் அமைந்திருக்கிறது. பிடரி பாகத்திலும் முன்னாலும் சுத்தமாக சுருக்கங்கள் இல்லாத அவரது கழுத்தானது சிரசைச் சுமூகமாக ஏந்தியிருக்கிறது.
ஒரு தத்துவவாதி புனிதச்செயல் புரியும் மகானாகவும் தேர்ந்த ஓவியனாகவும் ஆகி இரட்டிப்பானது போன்றது அவரது முகம். அதே நேரத்தில் எண்ணங்களின் சிதறல்களை சட்டென்று முகபாவத்தினால் காட்டுபவர். இவைதான் பொதுவாக அவர் முன்னால் நமக்கெழும் எண்ணங்கள். ஆனால் அவரால் மறைக்கமுடியாத அந்தக் கண்கள்தான் மாமுனியாகிய அத்துறவியின் பிரகிருதியை வெளிப்படையாக சொல்பவை!
விரல்களுக்கிடையே மின்னல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னுடைய கண்களுக்குள்ளும் “எதையாவது” பொதித்து வைப்பதற்கு ஸ்ரீ மஹாஸ்வாமியே பொறுமையாக அதைப் படைக்கிறார். ஆரம்பகாலங்களில் நிறைய முறைகள் அவர் என்னை கூர்ந்து கண்ணோடு கண் நோக்கிய பின்னர் அது என்னை ஒரு தள்ளாட்டத்தில் கொண்டு விட்டு தலைவலியும் கண்மணிகளுக்குப் பின்னால் ஒருவித வலியையும் பின்னர் தூக்கமில்லாத இரவுகளிலும் தள்ளிவிடும். இப்போது நான் எவ்வளவு நேரம் அவரது கண்களை ஊடுருவிப் பார்க்க அவர் அனுமதி தருகிறாரோ அவ்வளவு நேரமும் நேரடியாக அந்த நயனங்களை இமைக்காமல் கண்டு தரிசிக்கிறேன்.
இன்று சாயந்திரம் அவரது குடிலுக்கு வெளியே தரையில் அமர்ந்திருக்கும் போது புதுமையாக என்னை நோக்கினார். இடது கண்களுக்கு முன்னால் தனது இடது கரத்தினை வைத்து அதன் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பக்கவாட்டில் சாய்த்த “V”போல ஆக்கி அந்த இடைவெளியில், கும்பாபிஷேகத்துக்குத் தயாரான தெய்வ சீலாரூபங்கள் மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றைச் சிந்தனையுடன் பார்ப்பது போல, என்னைப் பார்த்தார். அந்த இடைவெளியில் அவரது கண்ணின் ஒளி இன்னும் கூராக்கப்பட்டு நினைக்கமுடியாத அளவுக்கு ஊடுருவும் அபார சக்தியோடு பாய்ந்தது. இந்தத் தருணத்தில் அவரது வலது கையில் ஜபம் செய்யும் போது எண்ணிக்கொள்வது போல கட்டைவிரலை மற்ற விரல்களின் மீது ஓடவிட்டார். அவரது அனுமானத்தை யூகிக்க என்னை அனுமதித்தார். கண்களுக்கு நேரே தூக்கிய கையை அவர் இறக்கியதும் நான் அவரது இடது கண்ணில் ஆரம்பித்து இரண்டு விழிகளையும் பார்த்தேன். இரவின் இருள் படர ஆரம்பித்தது. ஸ்ரீ மஹாஸ்வாமின் கண்கள் இருந்த இடத்தில் பூமியின் மத்தியிலிருந்து வந்தது போல இரண்டு ஆழமான கிணறுகள் தோன்றின. இரண்டிலும் அலையடித்துக்கொண்டு கருப்பு விளக்கு வெளியே பாய்ந்தது.
விரைவில் ஸ்வாமிஜியின் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. அது அப்படியே பிரகாசத்தினால் சூழப்பட்ட ஒரு சின்ன ஸ்படிக லிங்கம் போல் ஆனதை கூர்ந்து கவனித்தேன். இப்படி ஒளி ஊடுருவும் அணிகலனாக, அகத்தினுடைய கூர்மை வெண்மையாகப் பளிச்சிட்டு அவரது கண் உருவை அடைந்தது போல இருக்கும் அதே வேளையில் என்னுடைய இருதயத்தினுள் அதே ஸ்படிக லிங்கம் இன்னும் பெரிதாக குறைந்த அடர்த்தியுடன் ஆனால் அதே வெண்மை பளீரிட தோன்றுவதை உணர்ந்தேன். கண்ணிமைகளை மூடிக்கொண்டு என் ஊனக்கண்களை அகமுகமாகத் திருப்பி, சத்தம்போடாமல் கம்பீர ஸ்ருதியில் என்னுள்ளே அடியாழத்தில் நிகழும் அந்த அற்புதத்தை கொஞ்சமும் இழக்காமல் பார்க்கத் துவங்கினேன். அந்தப் பளிங்கு ஆபரணம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னால் மறையும் வரை நிறைய நிமிஷங்கள் அசாத்தியமான சந்தோஷம் என் நெஞ்சிலிருந்து பரவுவதை உணர்ந்தேன்.
என் கண்ணிமைகளை திறந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி இன்னமும் என்னெதிரேதான் இருந்தார். ஆனால் சில பக்தர்களிடம் பேசத் திரும்பியிருந்தார்.
இரவு அங்கிருந்து கிளம்பி வந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி தனது குடிலில் கயிற்றுக் கட்டில் மீது படுத்திருந்தார். அவரது தலை வாசலைப் பார்க்க இருந்தது. அவர் எனக்காகக் காத்திருக்கிறார் என்று யாராவது நினைக்கலாம். லேசாகத் திறந்திருந்த கதவிடுக்கின் வழியாக நான் ஒரு நிமிஷம் அவரைப் பார்த்தேன். அவர் எனது பார்வையைப் பிடித்து அதே கணத்தில் அப்படியே என்னைப் பார்த்தபடி விழிகளால் பதிலுரைத்தார். கெட்டிப்பட்ட அக்னியாய் இருக்கும் அவரது சரீரத்தின் கண்கள் தங்களுக்குள் குவிந்துகிடந்தன. சந்தேகத்திற்கு இடமின்றி அவரது தெய்வத்தன்மை இதோ நம் கண்களுக்குத் தெரிகிறது!
தொடரும்…
#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி20

About the author

Mannai RVS

Leave a Comment