Life Style

உணவுண்டு வாழ்வார்!!

Written by venkatakrishnan

கையில் எடுத்தது வயிற்றினுள் விழும் வரை நம் உணவு  கடக்கும் பாதை மிக நீளம்.அதில் முக்கியமான பகுதி நமது வாய். அதை அந்த உணவு கடப்பது என்பது, சம்சார சாகரத்தை இந்த மனிதப்பிறவி கடப்பதை போல என்றார்கள் நம் முன்னோர்கள். ஆய்ந்து அனுபவித்த வார்த்தைகள். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேசும்போது அவர் சொன்னார்.” நாக்க தாண்டிட்டா நத்திங் ” . சாத்தியமான வார்த்தை. எ/ங்கள் பேச்சு அதை நோக்கித்  திரும்பியது, சாப்பாடு டேஸ்ட்டுக்கா இல்ல வயித்த ரொப்பவா ?….நண்பர் சொன்னார் ” டேஸ்டு தான்மொதல்ல..ரொம்பறதெல்லாம் அப்புறம்தான்..” நான் யோசித்தேன். நண்பர் மேலும் சொன்னார் ” டேஸ்ட் இல்லாம இருக்கற சாப்பாட்ட ஒரு வாய்க்கு மேல சாப்பிட முடியுமா?” இந்த கேள்வி என் மனதிலேயே  நின்று விட்டது.அதையே யோசித்து கொண்டே வந்தவன் கால்கள் தானாகவே மந்தவெளியை நோக்கி நடக்க ஆரம்பித்தது. காலை மணி 7.30 இருக்கும். அது என்னுடைய பொங்கல் வடை நேரம். என் கால்கள் போய் நின்ற இடம் மந்தவெளி கோமதி மெஸ்.

குளித்து முடித்து பளிச்சென விபூதி, குங்குமம் துலங்க நின்றுகொண்டிருந்த ராமகிருஷ்ணன் வாய் நிறைய சிரிப்புடன் வரவேற்றார்.”வாங்க சார், ரொம்ப நாளா ஆள காணலையே”..அவருக்கு ரெண்டு நாள் சேர்ந்தார்போல் நான் போகவில்லை என்றாலும் ரொம்ப நாள் தான். வீட்டிலேயே சத்துமாவு கஞ்சி கொடுக்க ஆரம்பித்திருக்கிறாள் என் தர்மபத்னி என்று அவரிடம் எப்படி சொல்வது.கடையில் கூட்டம் வேறு. மய்யமாக சிரித்து வைத்தேன்.(அசடு வழிவதை வேறு எப்படி நாசுக்காக சொல்வதாம்?) சுட சுட ஆவி பறக்கும் நெய் பொங்கலையும், மெத்து, மெத்தென்ற (பெயர்க்காரணம் ) மெது வடையையும் வாழை இல்லை பரப்பிய தட்டில் வைத்து சட்டினியையும், சாம்பாரையும்( சாம்பரா தேவாமிர்தம் அல்லவா) தாராளமாய் அதன் தலையில் அபிஷேகம் செய்து என் கையில் கொடுத்தார். தாயைப்பிரிந்த கன்று பசுவிடம் குதூகலத்துடன் செல்வது போன்ற மனநிலையில் கைகளில் வாங்கினேன்.கண்களிலும், வாயிலும் ஒரே நேரத்தில் தண்ணீர். இரண்டிற்கும் நம்மவர்கள் வேறு வேறு பெயர் வைத்திருந்தாலும்…மனதினுள் திருப்பாவை வரிகள் ஓடின..பொங்கல், மார்கழி அதனாலெல்லாம் இல்லை.பொங்கலுக்கு மேல் ஒரு சல்லாத்துணியை போர்த்தியது போல் இருக்கும் நெய்..மூட நெய் பெய்து ..முழங்கை வழி …..அப்படி இருந்தது அந்த பொங்கல்.

அங்கங்கே விடிகாலை வானம் போல சில சீரகங்கள் தட்டுப்படும்…மிளகு அது பரம்பொருள் போல் கண்ணுக்கு தெரியாது. தங்கவேலு பாடும் பழம் பாடல் போல..கையில் வாங்கினேன் வாயில் போட்டேன் பொங்கல் போன இடம் தெரியல என்பது போல அது சுகமாய் வழுக்கி சென்று விட்டது. அந்த சூடும் ஒரு சுவை தான்.எனக்கு பக்கத்தில் ஒருவர் இரண்டு இரண்டு வடைகளாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். ” என்ன சாப்ட், என்ன சாப்ட் ….” இதில் நடு நடுவே கமெண்ட் வேறு. போட்டு வைத்திருந்த வடையெல்லாம் இவரே தனி ஆவர்த்தனம் செய்வதற்குள் எனக்கு இரண்டு கேட்டு வாங்கி கொண்டேன்.

கோமதி மெஸ்ஸின் தனித்துவம் அந்த சாம்பார்தான் ….என்ன ரகசியமோ…தக்காளி துண்டுகள் மட்டுந்தான் கண்ணுக்கு புலப்படும். வெறும் சட்டினியையும் சாம்பாரையும் கலக்கி அடிக்கும் பலரையும் கவனித்திருக்கிறேன், ஒரு கண் மூடி அரை கிறக்கத்தில்…கையும் வாயும் அதனதன் வேலையே கனகச்சிதமாய் செய்து கொண்டிருக்கும். ஜென் சொல்லும் மன ஒருமைப்பாடு இதுதானோ?  இது தவிர இட்லி, கிச்சடி அதிர்ஷ்டம் இருந்தால் பூரி (அந்த கிழங்கு ஒண்ணே போறும்) ஆகியவையும் கிடைக்கும்.

மாலை வேலை களில் சேவை, தோசை, அடை, போண்டா போன்றவையும் உண்டு.அங்கேயே வீட்டுத்  தயாரிப்பாய் நார்த்த இலை பொடி, மிளகாய்ப்பொடி, மாவடு , ஊறுகாய் போன்றவைகளும் கிடைக்கும். பொங்கலை ஆனந்தமாய் சாப்பிட்ட (விழுங்கிய) பின் நண்பர் வார்த்தை தான்  மீண்டும் நினைவுக்கு வந்தது ” நாக்க தாண்டிட்டா நத்திங்” ….இது கொஞ்சம் கிழே இறங்கி மனசில் உட்கார்ந்து கொண்டு விட்டது…

குறிப்பு : கோமதி மெஸ் மந்தைவெளி பஜார் தெருவின் பக்கத்துக்கு தெருவில் மதுரை மெஸ்ஸுக்கும் கணேஷ் மெஸ்ஸுக்கும் நடுவில் உள்ளது. போர்ட் கிடையாது.

About the author

venkatakrishnan

Leave a Comment