
திருமங்கையாழ்வாருடன் குமுதவல்லி நாச்சியார்
இந்த பதிவை படித்த பின், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி 3-ஆம் பத்தில்,2-ஆம் பாசுரத்தில் அருளிய இதே கருத்து நினைவிற்கு வந்தது.மகான்களுக்கும் ஆசாரியர்களுக்கும் என்னே ஒரு ஒருமித்த சிந்தனை! அந்த பாசுரத்தையும் அதன் பொருளையும் அனுபவியுங்கள்!
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்
ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்துக், கண் சுழன்று மேல்
கிளை கொண்டு இருமி ,
இது என் அப்பர் மூத்த ஆறு! என்று
இளையவர் ஏசாமுன்,
மது உண் வண்டு பண்கள் பாடும்
வதரி வணங்குதுமே!
இலந்தை மரங்கள் நிறைந்த பதரிகாசிரமத்தில் பதரி நாராயணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். கையாலே முதுகைப்பற்றிக்கொண்டு,முன்னே ஒரு தடியை தான் விழாது இருப்பதற்காக ஊன்றிக் கொண்டு,உடம்பு தளர்ந்து நடுங்கி,கண்கள் இடுங்க,இருமிக் கொண்டு, இளஞ்சிறார்கள், இதுதான் முதுமையோ என்று சொல்லி இகழும் முன்பே,இவ்வுடம்பு பாங்காக இருக்கும் போதே,மலரிலுள்ள தேனைக் குடிக்கும் வண்டுகள் இசைக்கும் திருவதரி என்றும் பதரிகாசிரமத்திற்கு சென்று வணங்குவோம் என்கிறார் ஆழ்வார்.